Tuesday, April 5, 2011

வடிவேலுவிற்கு எதிர்ப்பு - அடுத்தடுத்த கல்வீச்சு, உருவபொம்மை எரிப்பு.


வடிவேலு பிரச்சாரக் கூட்டத்தில் கல்வீச்சு.

நடிகர் வடிவேலு திமுகவுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் பிரச்சாரம் செய்து வருகிறார். பிரச்சாரத்தின் போது அதிமுக கூட்டணியில் இருக்கும் தேமுதிக தலைவர் விஜயகாந்தை கடுமையாக விமர்சித்து வருகிறார். வடிவேலுவின் இந்த விமர்சனத்திற்கு நல்ல வரவேற்பு இருக்கிறது.

ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் 3-4-2011 ஞாயிறன்று திமுக வேட்பாளர்களை ஆதரித்து இரவில் வடிவேலு பேசிக்கொண்டிருந்தார்.

‘விஜயகாந்த் ஹீரோ அல்ல; அவர் என்றுமே ஜீரோதான். என்று வடிவேலு பேசியபோது கூட்டத்தில் கல்வீச்சு நடந்தது.

இந்த கல்வீச்சில் வடிவேலுவுக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை.

வடிவேலு கூட்டத்தில் நடந்த இந்த கல்வீச்சு சம்பவத்தால் அப்பகுதில் மட்டுமல்லாமல் தமிழகத்தின் பல பகுதிகளிலும் பதற்றம் நிலவுகிறது.


நடிகர் வடிவேலு உருவபொம்மை எரிப்பு .

3-4-2011 ஞாயிறன்று தேமுதிக தலைவர் விஜயகாந்தை தரக்குறைவாக பேசியதாக குற்றம் சுமத்தி நடிகர் வடிவேலுக்கு கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

திருச்செங்கோடு - மௌசி பகுதியில் தேமுதிக தொண்டர்கள் ஆவேசத்துடன் வடிவேலுவின் உருவபொம்மை எரித்தனர்.


நடிகர் வடிவேலு பிரச்சாரக் கூட்டத்தில் மீண்டும் கல்வீச்சு .

நடிகர் வடிவேலு தமிழ்நாடு முழுவதும் தீவிர சுற்றுப்பயணம் செய்து தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவு திரட்டி வருகிறார். நேற்று முன்தினம் அவர் ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் பேசிய போது அவரது பிரசார வாகனத்தின் மீது கல்வீசினார்கள்.

இதே போன்று நேற்று 4-4-2011 திங்களன்று அவர் மதுரை மாவட்டத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்டு இருந்த போது அலங்காநல்லூரிலும் அவர் வேன் மீது கல்வீசப்பட்டது.

நேற்று மாலை வாடிப்பட்டியில் பிரசாரத்தை முடித்துவிட்டு அவர் அலங்காநல்லூருக்கு வந்து கொண்டிருந்தார். ஊருக்குள் நுழையும் இடத்தில் யாரோ மர்ம கும்பல் அவரது வேன் மீது சரமாரியாக கற்களை வீசியது. இதில் வேனின் கண்ணாடி உடைந்து சேதம் அடைந்தது. ஆனால் வேனில் பயணம் செய்த வடிவேலு உள்பட யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

இதைத்தொடர்ந்து அவர் அலங்காநல்லூர் பஸ் நிலையம் அருகே வேனில் நின்றபடி, பா.ம.க. வேட்பாளர் இளஞ்செழியனுக்கு ஆதரவு திரட்டி அவர் பேசும்போது,

நான் ஊருக்குள் வரும்போது, யாரோ மர்ம நபர்கள் இருட்டுக்குள் இருந்து என் வேன் மீது கற்களை வீசிவிட்டு தப்பிவிட்டனர்.

தைரியம் இருந்தால் கற்களை வீசியவர்கள் வெளிச்சத்தில் வந்து மோதிக்கொள்ள தயாரா? தி.மு.க.வின் பல்வேறு நலத்திட்டங்கள் முதலமைச்சர் கருணாநிதியை மீண்டும் 6-வது முறையாக முதலமைச்சராக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது. மக்கள் அனைவரும் தி.மு.க. கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஓட்டு போடவேண்டும் என்று பேசினார்.

இதைத்தொடர்ந்து ஊமச்சிகுளம் பகுதியில் அவர் பிரசாரம் செய்தார்.

இதனிடையே நடிகர் வடிவேலு வேன் மீது கல்வீசப்பட்ட தகவல் குறித்து போலீஸ் சூப்பிரண்டு ஆஸ்ராகார்க்குக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக அவர் போலீசாருடன் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினார். இதில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை பிடித்து கைது செய்ய போலீசாருக்கு உத்தரவிட்டார்.

1 comment:

ராஜேஷ், திருச்சி said...

இது எல்லாம் எதை காட்டுகிறது? - வடிவேலுவின் பேச்சிற்கு பொது சனத்திடம் நல்ல வரேற்பு இருக்கிறது.. அதை விஜயகாந்தின் நாக்கமூக்க கட்சியால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை