Wednesday, April 6, 2011

ஜெயலலிதாவுக்கு தகுதியில்லை: ராமதாஸ்


ஜெயலலிதா எதிர்க்கட்சித் தலைவராக இருப்பதற்கு கூட தகுதியில்லை என, ராமதாஸ் பேசினார்.

சென்னை தீவுத்திடலில் திமுக கூட்டணியின் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி, திமுக தலைவர் கலைஞர் உள்ளிட்ட கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பங்கேற்றனர்.

கூட்டத்தில் பங்கேற்று பேசிய பாமக நிறுவனர் ராமதாஸ்,

ஜனநாயக முற்போக்கு கூட்டணி ஒரு முற்போக்கு கூட்டணி. ஆனால் எதிரணியில் இருக்கிற கூட்டணி ஒரு பிற்போக்கு கூட்டணி. 2001-2006ல் ஜெயலலிதா முதல் அமைச்சராக இருந்தபோது, கான்கிரீட் வீடுகள் கட்டிக்கொடுப்பதாக உறுதிமொழி தந்தார். கேஸ் சிலிண்டர் கொடுப்பதாக வாக்குறுதி தந்தார். ஆனால் அவற்றில் எதையும் அவர் செய்யவில்லை.

2006-2011 கலைஞரின் ஆட்சியிலே அவர் செய்த சாதனைகளை பட்டியலிட நேரமில்லை. பொதுவாக மத்தியில் இருக்கும் அரசோடு மாநில அரசுக்கு ஒரு நல்லிணக்கம் தேவை. நரசிம்ம ராவ் அவர்கள் பிரதமராக இருந்தபோது, தலைமுறை இடைவெளி இருக்கிறது என்று, அந்த கூட்டணியிலே இருந்து கொண்டு ஜெயலலிதா சொன்னார். சொன்னதோடு மட்டுமல்லாமல் நரசிம்மராவை நையாண்டியும் செய்தார். பாஜக மூத்த தலைவர் அத்வானிக்கு ஞாபக மறதி நோய் இருக்கிறது என்று சொன்னார். வாஜ்பாய் அவர்களை செயலற்ற பிரதமர் என்று கூறினார் ஜெயலலிதா. சுப்ரீம் கோர்ட் கண்டனம் தெரிவித்தது. அதற்காக மன்னிப்பும் கேட்டார் ஜெயலலிதா.

பாரத பிரதமர் மன்மோகன் சிங் அவர்களை பலகீலமான கால்களை படைத்தவர் என்று ஜெயலலிதா சொன்னார். வாஜ்பாய் அவர்களோடு மோதல் போக்கை கடைபிடிக்காமல் இருந்திருந்தால் காவிரி பிரச்சனை தீர்ந்திருக்கும். திமுகவும் மத்திய அரசும் இணக்கமாக இருப்பதாலே, நமக்கு செம்மொழி அந்தஸ்து கிடைத்தது. சேது சமுத்திர திட்டம் தொடங்கப்பட்டது இதேபோல் ஏராளமானவற்றை நாம் சொல்ல முடியும். திமுக ஆட்சி தொடர்ந்து இருக்கும் மீது தமிழகம் வளர்ச்சி அடையும். அதிமுக வந்தால் வீழ்ச்சி அடையும்.

தேர்தல் ஆணையம் ஒருதலைப்பட்சமாக நடந்து வருகிறது என்று நாங்கள் தொடர்ந்து சொல்லி வருகிறோம். சகாயம் மதுரை மாவட்ட ஆட்சியர். அவர் செய்கின்ற அத்துமீறல்கள் ஏராளம். டெல்லியில் இருக்கிற தேர்தல் கமிஷனுக்கும், இங்கே இருக்கிற சிலருக்கும் தொலைதொடர்பில் நேரடி தொடர்பு இருப்பதாக சொல்லப்படுகிறது.

ஜெயலலிதா எதிர்க்கட்சித் தலைவராக இருப்பதற்கு கூட தகுதியில்லை. நாங்கள் ஐந்து ஆண்டு காலம் பாமகவின் 18 எம்எல்ஏக்கள் சட்டமன்றத்திலே எதிர்க்கட்சியாக இருந்தோம். நாங்கள் பேசியது, கருத்துக்களை தெரிவித்ததில் 100ல் ஒரு பங்கு கூட அதிமுக செய்யவில்லை. அதேமாதிரி நடிகர் கட்சி. சட்டசபையில் குடித்துவிட்டு வருவதாக ஜெயலலிதா சொன்னார். அதற்கு அவர்கள் பரிமாற்றிக்கொண்ட வார்த்தைகளை இங்கே சொல்லுவது நாகரீகமாகாது. அதனாலே சொல்லுகின்றோம். தப்பி தவறி என்று நான் சொல்லமாட்டேன். அவர் வரப்போவதில்லை. ஆனால் சில ஊடகங்கள், வேண்டுமென்றே சில பரப்புரைகளை செய்து வருகிறார்கள்.

தமிழக மக்கள் ஜனநாயக முற்போக்கு கூட்டணியை ஆதரிக்க வேண்டும். ஆதரிக்க தவறினால் தமிழகம் இருண்ட தமிழகமாக மாறிவிடும் என்பது தமிழக மக்களுக்கே தெரியும். தமிழக வாக்காளர்கள் மிகவும் புத்திசாலிகள். ஜனநாயக முற்போக்கு கூட்டணி வேட்பாளர்கள் 234 தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும். கலைஞர் அவர்கள் 6வது முறையாக முதல் அமைச்சராக வரவேண்டும் என்றார்.

No comments: