Wednesday, April 6, 2011

கள்ள ஓட்டு போடப்பட்டாலும் வாக்களிக்க புதிய வசதி; தேர்தல் அதிகாரி பேட்டி.

கள்ள ஓட்டு போடப்பட்டாலும்    வாக்களிக்க புதிய வசதி;    தேர்தல் அதிகாரி பேட்டி

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் நிருபர்களுக்கு இன்று பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:-


தேர்தல் ஏற்பாடுகள் குறித்து நாங்கள் தமிழ்நாடு முழுவதும் சென்று ஆய்வு செய்துள்ளோம். வீடு தோறும் வாக்காளர்களுக்கு கொடுக்கப்படும் பூத் சிலிப் வழங்கும் பணி வேகமாக நடந்த வருகிறது. இன்னும் 3 நாட்களுக்குள் இந்த பணி முடிந்து விடும். 66 ஆயிரத்து 231 தபால் ஓட்டுக்கள் போடப்பட்டுள்ளன. வாக்குச் சாவடிகளில் நாம் செல்வதற்கு முன்பே வேறு யாரும் சென்று கள்ள ஓட்டு போட்டு விட்டால் வாக்காளர்கள் கவலைப்பட வேண்டியதில்லை.

தேர்தல் அதிகாரியிடம் அடையாள அட்டையை காட்டி வாக்காளர்கள் தங்கள் வாக்கு உரிமையை பதிவு செய்யலாம். இதற்காக வாக்குச் சாவடிகளில் ஓட்டுச் சீட்டும் வைக்கப்பட்டு இருக்கும். கள்ள ஓட்டு போடப்படுவது கண்டு பிடிக்கப் பட்டால் ஓராண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்படும். 10 ஆயிரம் வாக்குச் சாவடிகளில் வெப்-காமிரா மூலம் வாக்குச் சாவடிக்குள் வரும் அனைவரும் கண்காணிக்கப்படுவார்கள். சுமார் 5 ஆயிரம் வாக்குச் சாவடிகளில் வீடியோ மூலம் ஓட்டுப்பதிவு பதிவு செய்யப்படும்.

தேர்தல் பாதுகாப்புக்கு ஏற்கனவே வெளி மாநிலங்களில் இருந்து போலீசார் வந்துள்ளனர். கூடுதலாக மேலும் சில கம்பெனி துணை ராணுவ படையினர் வர உள்ளனர். நேற்று முன்தினம் வரை நடந்த வாகன சோதனைகளில் ரூ.22 கோடியே 68 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ரூ. 10 கோடியே 30 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் ஒரு கிராமத்தில் டீ கடையில் ரூ. 40 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் ரூ. 7 லட்சம் கைப்பற்றப்பட்டது. மதுரையில் ரூ. 19 லட்சத்து 6 ஆயிரம் பணத்தை மக்களே கைப்பற்றி போலீசாரிடம் கொடுத்தனர். திருச்சி பொன்னகரில் நேற்று ஆம்னி பஸ்சில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ரூ. 5 கோடியே 11 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. இது பற்றி எம்.ஜே. டிராவல்ஸ் பஸ் உரிமையாளரிடம் விசாரணை நடக்கிறது.

கேள்வி:- தமிழ்நாட்டில் மினி எமர்ஜென்சி நடப்பதாக தேர்தல் கமிஷன் மீது குற்றம் சாட்டப்படுகிறதே?

பதில்:- நாங்கள் சட்டப்படி, விதிமுறைப்படி செயல் படுகிறோம்.

கேள்வி:- மதுரை தாசில்தார் தாக்கப்பட்ட சம்பவத்தில் கலெக்டர் வற்புறுத்தலின்பேரில் புகார் கொடுத்ததாக தாசில்தார் கூறி உள்ளாரே?

பதில்:- அவரது புகார் வந்துள்ளது. கலெக்டரிடம் விளக்கம் கேட்டுள்ளோம். எது உண்மையோ அதன் மீது நடவடிக்கை எடுக்கப்படும். தேர்தல் பணியில் சரியாக நடவடிக்கை எடுக்கும் அதிகாரிகளுக்கு எங்களது ஆதரவு இருக்கும்.

கேள்வி:- மதுரைக்கு கூடுதல் தேர்தல் பார்வையாளர்கள் அனுப்பப்படுவார்களா?

பதில்:- தேவைப்பட்டால் அனுப்புவோம்.

கேள்வி:- விஜயகாந்த் வேட்பாளரை அடித்தது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படுமா?

பதில்:- புகார் வந்தால் தான் நடவடிக்கை எடுக்கப்படும். அடிபட்டவர் கொடுத்தால்தான் நடவடிக்கை எடுக்க முடியும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அவர் மேலும் கூறுகையில், தேர்தல் விதி மீறல் தொடர்பாக எங்களுக்கு கால் சென்டர் மூலம் 1400 புகார்கள் வந்துள்ளது. விதிகளை மீறியதாக 55 ஆயிரத்து 341 வழக்குகள் இதுவரை பதிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.

No comments: