Wednesday, April 6, 2011

யார் முதல் அமைச்சராக வேண்டும்? திருமாவளவன்.


சென்னை தீவுத்திடலில் திமுக கூட்டணியின் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி, திமுக தலைவர் கலைஞர் உள்ளிட்ட கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பங்கேற்றனர்.

இதில் கலந்து கொண்டு பேசிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் பேசுகையில்,

கலைஞர் தலைமையில் உருவாகி இருக்கிற ஜனநாயக முற்போக்கு கூட்டணியின் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்ய அகில இநதிய காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் சோனியா காந்தி வந்திருக்கிறார். இந்த கூட்டணி 234 தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும். கலைஞர் அவர்கள் 6வது முறையாக முதல் அமைச்சராக பதவியேற்க வேண்டும் என்பதற்காக இங்கே பிரச்சாரம் செய்ய வந்திருக்கிறார்.

திராவிட முன்னேற்ற கழக தலைவர் கலைஞர் தலைமையில், 6வது முறையாக கலைஞர் அரசு அமைய வேண்டும். அதுதான் இங்கே கூடியிருக்கிற அனைவரின் நோக்கமும், விருப்பமும். தமிழகத்தில் யார் யார் சட்டமன்ற உறுப்பினர்களாக வேண்டும் என்பதைவிட, யார் தமிழகத்தின் முதல் அமைச்சராக வேண்டும் என்பதுதான் தமிழக வாக்காள பொதுமக்கள் முன்பு வைக்கப்படும் கேள்வி. நாம் விடை காண வேண்டிய கேள்வி.

ஒருபுறம் ஜனநாயக முற்போக்கு கூட்டணி கட்சித் தலைவர் கலைஞர். இன்னொரு புறம் தடுமாறும் தலைவர்கள். தள்ளாடும் தலைவர்கள் ஒன்று சேர்ந்து உருவாக்கிய கூட்டணி. கலைஞர் அவர்கள்தான் தமிழகத்தை ஆளக்கூடிய அனைத்து தகுதிகளையும், பண்புகளையும் பெற்றவர் என்பதை இந்த கூட்டணி சொல்லுகிறது. தமிழகம் சொல்லுகிறது. உலகம் ஒத்துக்கொள்கிறது.

கலைஞரை எதிர்ப்பவர்கள், விமர்சிப்பவர்கள் எத்தனை தகுதிகளை படைத்திருக்கிறார்கள் என்பதை தமிழக வாக்காள பெருமக்கள் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். 75 ஆண்டுகால பொதுவாழ்வு அனுபவம் உள்ள கலைஞர் அவர்கள், பக்குவம் உள்ளவர், முதிர்ச்சி உள்ளவர். நாகரீகம் உள்ளவர். தொலைநோக்கு பார்வை உள்ளவர். சமூக நீதி சிந்தனை உள்ளவர். ஆழ்ந்த சமூக அக்கறை உள்ளவர். சமத்துவ கொள்கை உள்ளவர். இத்தகைய ஆளுமை பண்பு உள்ள கலைஞர் தமிழக முதல் அமைச்சராக வேண்டுமா? அல்லது எந்த திட்டமும் இல்லாமல், கொள்கையும் இல்லாமல், எதையும் சாதிக்காமல், தனி நபர் விமர்சனம் செய்து, கலைஞரை திட்டி திட்டியே வாக்கு கேட்கிற ஒருவர் முதல் அமைச்சராக வேண்டுமா?

10 ஆண்டு காலம் அவரும் முதல் அமைச்சராக இருந்தவர்தான். அந்த 10 ஆண்டு காலம் அவர் செய்த சாதனை என்ன. முதல் ஐந்து ஆண்டு காலத்தில் வளர்ப்பு மகனுக்கு திருமணம் செய்தார். உலகமே வேடிக்கை பார்க்கக் கூடிய வகையில், 100 கோடிக்கு மேல் கொட்டி குவித்து வளர்ப்பு மகனுக்கு திருமணம் செய்ததுதான் முதல் ஐந்து ஆண்டு கால சாதனை. அடுத்த ஐந்து ஆண்டு காலத்தில் தனக்கு வேண்டாத அரசியல் தலைவர்களையெல்லாம், பிடிக்காத தலைவர்களை எல்லாம் கைது செய்து, சிறைப்படுத்தினார். ரசித்தார்.

தமிழகத்தின் முதுபெரும் தலைவர் கலைஞரை அதிகாலை 3 மணிக்கு கைது செய்து ரசித்துப் பார்த்தார். பாமக நிறுவனர் ராமதாசை கைது செய்தார். இலங்கை தமிழர்களுக்கு குரல் கொடுத்ததற்காக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்களை கைது செய்தார். நெடுமாறனை கைது செய்தார். எஸ்மா, டெஸ்மா போன்ற சட்டங்களை பயன்படுத்தி அரசு ஊழியர்களை கைது செய்தார். அடுத்த ஐந்து ஆண்டுகாலம் தனக்கு பிடிக்காத தலைவர்களை கைது செய்தததுதான் அவர் செய்த சாதனை.

ஆனால் கலைஞர் அவர்களின் திட்டங்களையும், சாதனைகளையும் சொல்ல நேரமில்லை. வாக்காளர்கள் ஒப்பிட்டு பார்க்க வேண்டும். எங்கள் அணியினர் சாதனைகளை சொல்லி வாக்கு கேட்கிறோம். சொன்னதை செய்து காட்டியிருக்கிறார். சொல்லாததையும் செய்து காட்டியிருகிறார் கலைஞர். இவ்வாறு திருமாவளவன் பேசினார்.

No comments: