Saturday, April 16, 2011

2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரம் : பொதுக்கணக்குக் குழு கூட்டத்தில் மோதல்.





ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் நாடாளுமன்ற பொதுக்கணக்குக் குழு (பிஏசி) கூட்டத்தில் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி உறுப்பினர்களிடையே வெள்ளிக்கிழமை கடும் மோதல் ஏற்பட்டது. இதனால் மூத்த அதிகாரிகளிடம் விசாரணை நடத்தும் பணி முடங்கியது.

2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பாக பாஜக தலைவர் முரளி மனோகர் ஜோஷி தலைமையிலான நாடாளுமன்ற பொதுக் கணக்குக் குழு விசாரணை நடத்தி வருகிறது. இந்தக் குழுவுக்கு போதிய அதிகாரம் இல்லை என்று எதிர்க்கட்சிகள் கூறியதையடுத்து, நாடாளுமன்ற கூட்டுக் குழு அமைக்கப்பட்டு அந்தக் குழுவும் இணையாக விசாரணை நடத்தி வருகிறது.

வரும் 30-ம் தேதியுடன் இப்போதைய பிஏசியின் பதவிக்காலம் முடிவடைகிறது. இதனால் விரைவாக விசாரணையை நடத்தி அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்பதில் முரளி மனோகர் ஜோஷி ஆர்வமாக இருப்பதாகக் கூறப்படுகிறது.

ஏற்கெனவே 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் தொடர்புடைய பலரை இந்தக் குழு விசாரித்திருக்கிறது. அமைச்சரவைச் செயலர் கே.எம்.சந்திரசேகர், அட்டர்னி ஜெனரல் குலாம் வாஹன்வதி, சிபிஐ இயக்குநர் ஏ.பி. சிங், பிரதமரின் முதன்மைச் செயலர் டி.கே.ஏ. நாயர் ஆகியோரை வெள்ளிக்கிழமை விசாரிக்கத் திட்டமிடப்பட்டிருந்தது.

இந்த நிலையில் நாடாளுமன்ற வளாகத்தில் நடந்த பிஏசி கூட்டத்தில் எதிர்க்கட்சி மற்றும்ஆளுங்கட்சி உறுப்பினர்களுக்கு இடையே கடும் மோதல் ஏற்பட்டது.

ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பாக நீதிமன்றம் விசாரணை நடத்திக் கொண்டிருக்கும்போது அதுபற்றி பிஏசி விசாரணை நடத்துவது அவசியமா என திமுக, காங்கிரஸ் உறுப்பினர்கள் ஜோஷியிடம் கேள்வி எழுப்பினர்.

இந்தக் கூட்டத்தில் ஆளும் தரப்பில் காங்கிரஸ் கட்சியின் கே.எஸ்.ராவ், நவீன் ஜிண்டால், அருண் குமார், சைபுதீன் சோஸ், திமுகவின் திருச்சி சிவா ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

நீதிமன்ற விசாரணையில் இருப்பதால் மேலும் சாட்சிகளை விசாரணைக்கு அழைக்கக்கூடாது என்று கே.எஸ்.ராவ் வலியுறுத்தினார். அண்மையில் விசாரணைக்கு ஆஜரான ரிலையன்ஸ் நிறுவனத்தின் அனில் அம்பானி, நீதிமன்ற விசாரணையைக் காரணம் காட்டி அனைத்து விவரங்களையும் கூற முடியாது எனத் தெரிவித்ததையும் ராவ் சுட்டிக் காட்டினார்.

இதற்குப் பதிலளித்த ஜோஷி, "யாரையும் சாட்சியம் அளிக்குமாறு கட்டாயப் படுத்தவில்லை. இந்தத் தகவல்களை பொதுவில் வெளியிடப் போவதும் இல்லை. இதுவரை குற்றஞ்சாட்டப் பட்டவர்கள் யாரையும் அழைத்து விசாரிக்கவும் இல்லை' என்றார்.

3 மணி நேரம் தொடர்ந்த இந்தக் கூட்டத்தில் பல தருணங்களில் காரசாரமான வாக்குவாதம் நடந்தது. நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் இதுபோன்ற வாக்குவாதங்கள் நடைபெற்றது இதுவே முதல்முறை எனக் கூறப்படுகிறது.

இதனால், அதிகாரிகளிடம் விசாரணை நடத்தும் பணி சனிக்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டது. கூட்டத்தில் நடந்த மோதலையடுத்து, திட்டமிடப்பட்டிருந்த செய்தியாளர் கூட்டத்துக்கு முரளி மனோகர் ஜோஷி வரவில்லை.

செய்தியாளர்கள் கூட்டம் இப்போது தேவையில்லை என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டதாக மட்டும் அவர் தெரிவித்தார்.

விசாரணைக்கும் மேலும் சிலரை அழைப்பதா, வேண்டாமா என்பது குறித்து முடிவு செய்வதற்கு வரும் 21-ம் தேதி பிஏசி மீண்டும் கூடும் எனவும் தெரிவிக்கப் பட்டிருக்கிறது.

வாஹன்வதி சொலிசிட்டர் ஜெனரலாக இருந்தபோது ஸ்வான் டெலிகாம் நிறுவனம் தொடர்பாக தொலைத் தொடர்புத் துறைக்கு தெரிவித்த கருத்து குறித்து பிஏசி விசாரிப்பதைத் தடுக்க வேண்டும் என்பதே ஆளுந்தரப்பு உறுப்பினர்களின் நோக்கமாக இருந்தது என தாங்கள் சந்தேகிப்பதாக எதிர்க்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஆனால், தாங்கள் நியாயமான ஆட்சேபங்களையே தெரிவித்ததாக காங்கிரஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

22 உறுப்பினர்களைக் கொண்ட இப்போதைய குழுவில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 6 பேரும், பாஜகவின் 4 பேரும், அதிமுக, திமுக சார்பில் தலா இருவரும், சிவசேனை, பிஜு ஜனதா தளம், ஐக்கிய ஜனதா தளம், சமாஜவாதி, பகுஜன் சமாஜ், மார்க்சிஸ்ட் ஆகிய கட்சிகளைச் சேர்ந்த தலா ஒருவரும் இடம்பெற்றிருக்கின்றனர். ஒரு இடம் காலியாக இருக்கிறது.


No comments: