Saturday, April 16, 2011

ஸ்பெக்ட்ரம் ஊழல்; மேலும் 5 அதிகாரிகள் கைது ஆகிறார்கள்.

ஸ்பெக்ட்ரம் ஊழல்;   மேலும் 5 அதிகாரிகள்    கைது ஆகிறார்கள்;   கோர்ட்டில் சி.பி.ஐ. மனு

2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்தி வரும் சி.பி.ஐ. கடந்த 2-ந்தேதி முதலாவது குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது. இதில் முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசா, அவரது உதவியாளர் சந்தோலியா, டி.பி. ரியாலிட்டி நிறுவனத் தலைவர் பல்வா, தொலைத் தொடர்புத்துறை முன்னாள் செயலாளர் சித்தார்த் பெகுரா, ஸ்வான் டெலிகாம் இயக்குனர் வினோத் கோயங்கா, யுனிடெக் வயர்லஸ் நிறுவன நிர்வாக இயக்குனர் சஞ்சய் சந்திரா, ரிலையன்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த கவுதம் தோஷி, சுரேந்திர பிபாரா, அரிநாயர் ஆகிய 9 பேரின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன.

இந்த 9 பேர் மீதும் சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்துள்ளது. அதுபோல ரிலையன்ஸ் டெலிகாம், ஸ்வான் டெலிகாம், யுனிடெக் டெலிகாம் ஆகிய 3 தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

குற்றப்பத்திரிகையில் இடம் பெற்றுள்ள 9 பேரில் ஆ. ராசா, பல்வா, சித்தார்த் பெகுரா, சந்தோலியா ஆகிய 4 பேர் மட்டுமே கைது செய் யப்பட்டு டெல்லி திகார் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளனர். மற்ற 5 பேரும் இது வரை கைது ஆகவில்லை. இவர்கள் 5 பேரையும் கைது செய்ய சி.பி.ஐ. நடவடிக்கை எடுத்தது.

இதற்கிடையே தாங்கள் கைது செய்யப்படுவதைத் தவிர்க்கும் பொருட்டு 5 அதிகாரிகளும் டெல்லி ஐகோர்ட்டில் முன் ஜாமீன் மனு தாக்கல் செய்தனர். நேற்று இந்த வழக்கு விசாரணை நடந்தது. அப்போது 5 அதிகாரிகளுக்கும் முன் ஜாமீன் அளிக்கக்கூடாது என்று சி.பி.ஐ. மனு தாக்கல் செய்தது.

5 அதிகாரிகளும் சாட்சிகளை மிரட்டவும், தலைமறைவாகி விடவும் வாய்ப்புள்ளது. எனவே 5 பேருக்கும் முன் ஜாமீன் கொடுக்கக்கூடாது என்று சி.பி.ஐ. மனுவில் கூறப்பட்டிருந்தது. 5 அதிகாரிகளின் சார்பில் ஆஜரான வக்கீல்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

விசாரணையின்போது கைது செய்யப்படவில்லை என்பதால் இனி கைது செய்ய வேண்டிய அவசியம் என்ன என்று வக்கீல்கள் கூறினார்கள். முன் ஜாமீன் பெறும் உரிமையை தடுக்கக்கூடாது என்றும் வக்கீல்கள் வாதிட்டனர். சுமார் 3 மணி நேரம் இந்த வழக்கு விசாரணை நடந்தது.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி சைனி, 5 அதிகாரிகளுக்கும் ஜாமீன் கொடுப்பது தொடர்பாக 20-ந்தேதி தீர்ப்பு அளிக்கப்படும் என்று கூறினார். வழக்கு நிலுவையில் உள்ள காரணத்தால் தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்களின் 5 அதிகாரிகளும் 20-ந்தேதி வரை கைது செய்யப்பட மாட்டார்கள்.

அதன் பிறகு அவர்களை சி.பி.ஐ. கைது செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த 5 அதிகாரிகள் மீதும் மோசடி, ஆவணங்களை திருத்தி ஏமாற்றுதல், ஊழல் செய்தால், லஞ்சம் கொடுத்தல் உள்பட பல பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.


No comments: