Saturday, April 16, 2011

இலங்கை மீன்களை அணுக்கதிர் தாக்கியதாக பீதி.


ஜப்பானில் கடந்த மாதம் 11-ந்தேதி 8.9 ரிக்டர் அளவுக்கு கடலில் பயங்கர பூகம்பம் ஏற்பட்டது. இதனால் சுனாமி பேரலைகள் உருவாகி ஜப்பானின் வடகிழக்கு பகுதியை அடியோடு நாசம் செய்தது.

சுனாமி அரக்கன் தாக்கியதில் புகுஷிமா உள்ளிட்ட பகுதிகளில் அமைக்கப்பட்டிருந்த 4 அணுமின் நிலையங்கள் சிதைந்து போயின. அங்கு மிகவும் பாதுகாப்புடன் அமைக்கப்பட்டிருந்த 4 அணு உலைகள் பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறின.

இதில் இருந்து மின்னல் வேகத்தில் வெளியேறிய அணுக்கதிர் வீச்சால் ஏராளமானோர் உயிரிழந்தனர். அணுக்கதிர் வீச்சு காரணமாக அப்பகுதிகளை சுற்றி வசித்த லட்சக்கணக்கான மக்கள் வேறு பகுதிகளில் குடிய மர்த்தப்பட்டனர்.

ஜப்பானில் வெளியேறிய அணுக்கதிர் வீச்சு கொரியா மற்றும் அமெரிக்காவின் சில பகுதிகளுக்கும் பரவியது. அணுக்கதிர் வீச்சு தாக்கிய மீன் உள்ளிட்ட பொருட்களை உண்ண பல்வேறு நாடுகள் தடைவிதித்துள்ளன.

இந்த நிலையில் சில அணு கழிவுகளை ஜப்பான் கடலில் கொட்டியது. இதனால் இலங்கையின் கிழக்கு கடல் பகுதியில் உள்ள மீன்களை அணுக் கதிர் தாக்கி இருக்குமோ என்ற பீதி பரவியது. இதையடுத்து இலங்கை அரசு கிழக்கு கடல் பகுதியில் அணுக்கதிர் தாக்கி இருக்கிறதா? என்பது பற்றி ஆய்வு நடத்த உத்தரவிட்டது.

இதையடுத்து அணுசக்தி விஞ்ஞானிகள் அங்குள்ள கிழக்கு மாகாணம் முதல் தென்மாகாணம் வரையான பல்வேறு பகுதிகளில் கடல்நீர் மாதிரி எடுக்கப்பட்டன. கடற்படையினர் இலங்கை கடலோர பகுதிகளுக்கு சென்று கடல்நீர் மாதிரி எடுக்கும் பணியில் ஈடுபட்டனர்.

இலங்கை கடல் மாசு கட்டுப்பாட்டு துறை அதிகாரிகளும் கடல் மாதிரிகளை சேகரித்தனர். இந்த கடல்நீரை இலங்கை அணுசக்தி விஞ்ஞானிகள் பரிசோதனை செய்து அதில் அணுக்கதிர் உள்ளனவா? என்பது பற்றி பரிசோதனை செய்ய திட்டமிட்டுள்ளனர்.

இப்பரிசோதனைக்குப் பிறகு தான் மீன்களை அணுக்கதிர் தாக்கி இருக்கிறதா? என்பதற்கு விடை தெரியும். அணு உலைகளால் மனித உயிருக்கு பேராபத்து இருப்பதால் உலகம் முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. மனிதர்கள் வசிக்காத பகுதிகளில் அணு உலைகளை அமைக்க கோரி சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்புகள், மனித உரிமை பாதுகாப்பு அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.


No comments: