Saturday, April 16, 2011

கறுப்புப் பணம் பதுக்கியிருப்போர் பெயர்களை வெளியிட முடியாது - மத்திய அரசு.

வெளிநாட்டு வங்கிகளில் கறுப்புப் பணம் பதுக்கி வைத்திருக்கும் இந்தியர்களின் பெயர்களை வெளியிட முடியாது என மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தது.

கறுப்புப் பணம் பதுக்கி வைத்திருப்போர் பற்றிய விவரங்கள் அனைத்தும் இரு நாடுகளுக்கு இடையேயான இரட்டை வரிவிதிப்பைத் தவிரிக்கும் ஒப்பந்தம் மூலமாகப் பெறப்பட்டிருப்பதாகவும், அதனால் பெயர்களை வெளியிடுவது இயலாத செயல் எனவும் மத்திய அரசு கூறியிருக்கிறது.

எனினும் ஜெர்மனியின் லீக்டென்ஸ்டைன் வங்கியில் பணத்தைப் பதுக்கியிருக்கும், இப்போது விசாரிக்கப்பட்டு வரும் 6 பேரின் பெயர்களை வெளியிட அரசு சம்மதித்திருக்கிறது.

வெளிநாடுகளில் இந்தியர்கள் பதுக்கி வைத்திருக்கும் கறுப்புப் பணத்தை மீட்க வேண்டும் என்று கோரி பிரபல வழக்கறிஞர் ராம்ஜேத்மலானி உள்ளிட்டோர் தாக்கல் செய்த மனுக்கள் மீதான விசாரணையின்போது சொலிசிட்டர் ஜெனரல் கோபால் சுப்பிரமணியம் மேற்கண்ட தகவல்களைத் தெரிவித்தார்.

நீதிபதி சுதர்ஷன் ரெட்டி தலைமையிலான பெஞ்ச் இந்த வழக்கை விசாரித்து வருகிறது. வெளிநாடுகளில் பணம் பதுக்கி வைத்திருப்போரின் பெயர்களை அரசு பெற்றிருக்கிறது. எனினும் அவர்கள் மீது விசாரணை தொடங்கப்படும்வரை அவர்களது பெயர்களை வெளியிட முடியாது என்று கோபால் சுப்பிரமணியம் அப்போது கூறினார்.

இந்தக் கருத்தால் திருப்தியடையாத நீதிபதிகள், கறுப்புப் பணம் பதுக்கி வைத்திருப்போரின் பெயர்களை வெளியிடுவதற்கு எந்தச் சட்டம் தடையாக இருக்கிறது என்பதை வழக்கு அடுத்தமுறை விசாரணைக்கு வரும்போது தெரிவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

ராம்ஜேத்மலானி தவிர, பஞ்சாப் மாநில முன்னாள் டி.ஜி.பி. கேபிஎஸ் கில், மக்களவை முன்னாள் பொதுச் செயலாளர் சுபாஷ் காஷ்யப் ஆகியோரும் இந்த வழக்கில் மனுதாரர்களாவர்.

இதற்கு முன்பு வழக்கு விசாரணைக்கு வந்தபோது, கறுப்புப் பணம் பதுக்கி வைத்திருப்போரின் பெயர்களை அரசு பெற்றிருக்கிறது. எனினும் அவற்றை வெளியிடுவதில் அரசுக்கு விருப்பமில்லை என கோபால் சுப்பிரமணியம் கூறினார்.

இதனால் அதிருப்தியடைந்த நீதிபதிகள் அந்தப் பெயர்களை வெளியிடுவதில் அரசுக்கு என்ன சிரமம் இருக்கிறது என்று கேள்வி எழுப்பினர்.


No comments: