
தி.மு.க. அரசியல் பாரம்பரியத்தில் வளர்ந்து தந்தையின் இலக்கிய புலமையையும் கற்று தேர்ந்து கொண்டவர் கனிமொழி. பொழுது விடிந்தது முதல் இரவில் துயில் கொள்ளும் நேரம் வரை கட்சி நிர்வாகிகளுடன் அரசியல் பேச்சுகள், பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது, எழுதுவது என்று எத்தனையோ பணிகளுடன் எப்போதும் சுறு சுறுப்பாக இயங்கி கொண்டிருப்பார்.
2 ஜி ஸ்பெக்ட்ரம் அலையின் தாக்கம் கடந்த சில மாதங்களாக அவரை தடுமாற வைத்தன. நேற்று கைது செய்யப்பட்டதும் அவரை நிலைகுலைய வைத்து விட்டது. மிகப்பெரிய வக்கீல், அரசியல் பின்புலம் ஆகியவற்றால் வழக்குகளை சந்திக்கலாம். ஜெயிலுக்கு போகாமல் இருக்க முன் ஜாமீன் கிடைத்துவிடும் என்ற துளியளவு நம்பிக்கையுடன் டெல்லி பிரம்மபுத்திரா இல்லத்தில் நேற்று காலையில் துயிலெழுந்தார்.
தி.மு.க. எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு, டி.கே.எஸ்.இளங்கோவன், ஏ.கே.எஸ்.விஜயன், சுகவனம், ஜெயதுரை, ஆதிசங்கர், ஹெலன்டேவிட்சன், ரித்தீஷ், கே.பி.ராமலிங்கம், செல்வகணபதி, வசந்தி ஸ்டான்லி, தங்கவேலு, முன்னாள் அமைச்சர் பூங்கோதை, இவர்களை தவிர விசுவாசமிக்க கட்சி நிர்வாகிகள் பலரும் அவரது இல்லத்தில் குவிந்து இருந்தனர்.
கோர்ட்டு முடிவு எப்படி இருக்குமோ என்ற பதட்டத்தில் இருந்த கனிமொழிக்கு அனைவரும் தைரியம் கொடுத்தனர். காலை 10 மணிக்கு சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டுக்கு கனிமொழி சென்றார். தி.மு.க. எம்.பி.க்களும் கோர்ட்டிற்கு வந்து இருந்தனர். ஆ.ராசாவின் மனைவி பரமேஸ்வரி, சரத்குமாரின் மனைவி ஆகியோரும் கோர்ட்டுக்கு வந்திருந்தனர்.
காலை 11 மணி, 12.30 மணி என்று தீர்ப்பு சொல்லும் நேரம் அடிக்கடி தள்ளிகொண்டே போனதால் திக்...திக் மனதோடு ஒவ்வொரு நிமிடத்தையும் ஒரு மணித்துளியாக நகர்த்தி கொண்டிருந்தார்கள். பிற்பகல் 2.30 மணிக்கு நீதிபதி சைனி ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து தனது உத்தரவை படித்ததும் கனிமொழி மிகவும் அதிர்ச்சி அடைந்தார்.
கண்கள் கலங்கி கண்ணீர் பெருகியது. அருகில் இருந்த முன்னாள் அமைச்சர் பூங்கோதை, ஹெலன் டேவிட்சன் ஆகியோர் ஆறுதல் படுத்தினார்கள். ஜெயிலுக்கு அழைத்து செல்லுமாறு நீதிபதி உத்தரவிட்டதும் சென்னை மாநகராட்சி 95-வது வார்டு கவுன்சிலர் துரை கோர்ட்டு அறையிலேயே ஒ வென்று கதறி அழுது விட்டார். அதைப்பார்த்ததும் மற்றவர்கள் கண்களிலும் கண்ணீர் வடிந்தது.
துயரத்தில் ஆழ்ந்து இருந்த கனிமொழி அதை அடக்கி கொண்டு துக்கம் தாளாமல் அழுத துரையை தேற்றினார். மாலை 3 மணியளவில் கனிமொழியை நீதிமன்ற வளாகத்தில் உள்ள “லாக்-அப்” அறைக்கு அழைத்து செல்வதற்காக சுற்றியிருந்த பார்வையாளர்கள் வெளியேற்றப்பட்டனர். பெண் போலீசார் கனிமொழியை லாக்-அப் அறைக்கு அழைத்து சென்றனர்.
கையை தட்டினால் ஏவலுக்கு எத்தனையோ போலீசார் வந்து நிற்பதையும் பாதுகாப்பு அரணாக சுற்றி நிற்பதையும் சிறுவயது முதல் பார்த்து பழக்கப்பட்ட கனிமொழியின் கைகளை பிடித்து பெண் போலீசார் அழைத்து சென்றதை பார்த்து அவரால் உணர்வுகளை கட்டுப்படுத்த முடியவில்லை. கலங்கியப் கண்களுடன் லாக்-அப்புக்கு நடந்தார்.
அவரை தொடர்ந்து கணவர் அரவிந்தனும் வந்தார். எத்தனையோ அரசியல் களங்களுக்கு மனைவியை அனுப்பி வைத்து மகிழும் அரவிந்தனும் மனைவி ஜெயிலுக்கு செல்வதை பார்த்து நொறுங்கி போனார். லாக்-அப் அறைக்குள் செல்வதற்கு முன்பு கனிமொழி கணவரை கட்டித் தழுவினார். உணர்வுகளை கட்டுப்படுத்த முடியாமல் இருவரும் கண்ணீர் விட்டனர்.
கனிமொழியின் தோளில் தட்டி அரவிந்தன் தேற்றினார். லாக்-அப் அறைக்குள் சென்றதும் அவரால் துயரத்தை அடக்க முடியவில்லை. பெருகிவந்த கண்ணீரை துடைத்தபடியே சிலநிமிடங்களை கழித்தார். அடுத்த 10 நிமிடத்தில் கணவர் அரவிந்தனை சந்திக்க வேண்டும் என்று கனிமொழி முறையிட்டார். அவரது செல்போன் நம்பரையும் போலீசாரிடம் கொடுத்தார்.
அவரது தவிப்பை புரிந்த போலீசார் உதவ முயன்றனர். ஆனால் நீதிபதியின் உத்தரவால் எல்லோரும் வெளியே சென்று விட்டனர். போலீசாரால் அரவிந்தனை தொடர்பு கொள்ள முடியவில்லை. தமிழக பத்திரிகையாளர்களும் அரவிந்தனை தொடர்பு கொள்ள முயன்றனர். ஆனால் அவர்களாலும் முடிய வில்லை.
இறுதியில் தி.மு.க. பிரமுகர் பாலகுரு என்பவர் மூலம் அரவிந்தனை தொடர்பு கொண்டனர். அவர் உடனடியாக விரைந்து வந்தார். கனிமொழியுடன் லாக்-அப் அறையில் சுமார் 20 நிமிடங்கள் பேசி கொண்டிருந்தார். அப்போது மகன் ஆதித்யாவை பார்க்க ஆசைப்படுவதாக கூறினார். உடனே ஆதித்யாவை அழைத்து வந்தனர்.
மகன் ஆதித்யாவின் கைகளை பிடித்து வருடியபடி அவரிடம் சுமார் 15 நிமிடங்கள் பேசினார். தனது உணர்வுகளை கட்டுப்படுத்திக் கொண்டு ஆதித்யாவை தைரியமாக இருக்கும்படி வாஞ்சையுடன் தடவிகொடுத்தார். மாலை 4.30 மணிக்கு போலீசார் ஒரு வேனில் ராசாவையும், சரத்குமாரையும் திகார் ஜெயிலுக்கு அழைத்து சென்றனர்.
அதன்பிறகு பெண் போலீசார் மற்றொரு வேனில் கனிமொழியை திகார் ஜெயிலுக்கு அழைத்து சென்றனர். இது நான் எதிர்பார்த்தது தான் என்று கனிமொழி ஜெயிலுக்கு செல்வதற்கு முன்பு கூறினார். ஆனால் ஜெயிலுக்குள் நுழைந்ததும் அவரது முகமே மாறிவிட்டது. இறுகிய முகத்துடன் ஜெயிலுக்குள் சென்றார்.
No comments:
Post a Comment