Saturday, May 21, 2011

கனிமொழியின் பரிதாபத்திற்குறிய திகார் சிறைச் சூழல்..

திகார் ஜெயிலில் கனிமொழிக்கு சிறப்பு பாதுகாப்பு:    வீட்டு உணவு கொடுக்க அனுமதி

ஸ்பெக்ட்ரம் வழக்கில் முன் ஜாமீன் மறுக்கப்பட்டதும் கனிமொழி அதிர்ச்சியின் உச்சிக்கே சென்று விட்டார். என்றாலும் உடனடியாக அவர் தன் முகத்தில் எந்தவித உணர்ச்சியையும் காட்டவில்லை. அடுத்த சில நிமிடத்தில் ஜாமீன் மறுக்கப்பட்டவர்களை உடனே கைது செய்து சிறையில் அடைக்கும்படி நீதிபதி சைனி உத்தரவிட்டார். அப்போதுதான் கனிமொழி கண்கள் கலங்கிவிட்டன. அவருக்கு அருகில் இருந்த ராசாவின் மனைவி பரமேசுவரியும் சரத்குமாரின் மனைவியும் ஆறுதல் கூறினார்கள்.

பிற்பகல் 2.45 மணியில் இருந்து 4 மணிவரை கனிமொழி சி.பி.ஐ. கோர்ட்டிலேயே இருந்தார். அவரிடம் தீர்ப்பு நகல்கள் கொடுக்கப்பட்டு கையெழுத்து பெறப்பட்டன. பிறகு அவரை திகார் சிறைக்கு போலீசார் அழைத்துச் சென்றனர். பெண் போலீஸ்காரர் ஒருவர் அவர் கையைப்பிடித்து அழைத்துச் சென்று வேனில் ஏற்றிய போது கனிமொழி கண்கள் மீண்டும் கலங்கின. மிகவும் சிரமப்பட்டு அவர் தன் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்திக் கொண்டார்.

சி.பி.ஐ. கோர்ட்டு அமைந்துள்ள பாட்டியாலா ஹவுஸ் வளாகத்தில் இருந்து கனி மொழியை ஏற்றிச் சென்ற போலீஸ் வேனில் பாதுகாப்பு பணியை தமிழ்நாடு சிறப்பு காவல் படையைச் சேர்ந்த போலீசார்தான் ஏற்று இருந்தனர். அவர்கள் கனிமொழி யுடன் தமிழில் பேசினார்கள். இதனால் கனிமொழி சற்று உற்சாகம் அடைந்தார். தமிழக சிறப்பு காவல் படை போலீசாருடன் அவர் சுமார் 15 நிமிடம் தமிழில் பேசிக் கொண்டே வந்தார்.

காவலர்களிடம் அவர், தமிழ்நாட்டில் எந்த ஊர்? டெல்லியில் வேலை எப்படி உள்ளது? என்று விசாரித்தப்படி இருந்தார். 4.30 மணிக்கு அவர் வேன் திகார் ஜெயிலை அடைந்தது. திகார் ஜெயில் வாசலில் கனிமொழி வருகை பதிவு செய்யப்பட்டது. சிறைச் சாலை விதிகள்படி சில குறிப்பிட்ட ஆபணரங்கள் அணிய தடை உள்ளது. அதை எற்று கனிமொழி தனது மூக்குத்தியை கழற்றி கொடுத்து விட்டார். என்றாலும் தனது மூக்குக் கண்ணாடி, மருந்து மற்றும் சில புத்தகங்களை அவர் தன்னுடன் எடுத்துச் செல்ல அனுமதிக்கப்பட்டார்.

அவர் தன்னுடன் தனது சிறு கைப்பையை வைத்துக் கொள்ளலாம் என்று அனுமதிக்கப்பட்டது. திகார் ஜெயிலில் 6-ம் என் சிறை பெண் கைதிகளுக்கு உரியதாகும். அந்த சிறை கூடத்தில் சிறு, சிறு அறைகளாக சிறை உள்ளது. அதில் 8-ம் நம்பர் அறை கனிமொழிக்கு ஒதுக்கி கொடுக்கப்பட்டுள்ளது. இந்த அறை சுமார் 150 சதுர அடி அதாவது 15-க்கு 10 அடி பரப்பளவு கொண்டது.

அதன் உள்ளே படுத்து தூங்க சிறு மேடை, கழிவறை ஆகிய இரண்டே இரண்டு அடிப்படை வசதி மட்டுமே உள்ளது. கழிவறைக்கும் படுக்கும் மேடைக்கும் இடையே தடுப்பு சுவர் எதுவும் கிடையாது. அதை துணியிலான திரைச் சீலையால் மறைத்துக் கொள்ள வேண்டும்.

மிகக்குறுகலான அந்த அறைக்குள் ஒரு ஓரத்தில் தொலைக்காட்சி வைத்துக் கொள்ள நீதிபதி அனுமதித்துள்ளார். அந்த அறையில் ஏ.சி.கிடையாது. ஒரே ஒரு மின் விசிறி வசதி மட்டுமே உள்ளது. மூன்று பக்கம் சுவர் உள்ள அந்த அறையின் முன்பக்கம் இரும்பு கம்பியால் ஜன்னல்கள் போல அடைக்கப்பட்டுள்ளது. காற்றோட்ட வசதிக்காக எக்ஸ்சாஸ்ட் பேன் வசதி உள்ளது. அந்த அறையில் உள்ள கழிவறை மேலை நாட்டு மாதிரி கிடையாது. இந்தியன் ஸ்டைல் கொண்டதாகும்.

கனிமொழி அந்த அறைக்குள்ளேயே குளித்துக் கொள்ளலாம். ஆனால் ஷவர் வசதி கிடையாது. குழாய் தண்ணீரை வாளியில் பிடித்துத்தான் குளிக்க வேண்டும். 15-க்கு 10 அறைக்குள் தான் அவர் தனது அத்தனை பணிகளையும் செய்து கொள்ள வேண்டும்.

அவருக்கு தினமும் படிக்க பத்திரிகைகள் மற்றும் புத்தகங்கள் வழங்க நீதிபதி அனுமதி கொடுத்துள்ளார். திகார் ஜெயிலை பொறுத்தவரை கைதிகள் அனைவருக்கும் ஒரே மாதிரிதான் உணவு கொடுக்கப்படும். காலை, உணவாக டீ, பிஸ்கட், ரொட்டி கொடுப்பார்கள். மதியம் சப்பாத்தி, ரொட்டி, காய்கறி உணவு வகைகள் கொடுக்கப்படும் மாலை டீ, பிஸ்கட் தருவார்கள். இரவு சப்பாத்தி, அரிசி உணவு கொடுக்கப்படும். ஆனால் இரவு உணவை கைதிகள் மாலை 6 மணிக்குள் வாங்கி இருப்பு வைத்துக்கொள்ள வேண்டும்.

உணவு விஷயத்தில் சில சலுகைகளை நீதிபதி வழங்கியுள்ளார். கனிமொழி தென் இந்திய உணவுகளை வாங்கி சாப்பிடலாம் என்று அனுமதிக்கப்பட்டுள்ளது. கனிமொழி கேட்டுக் கொண்டால் அவருக்கு வீட்டில் இருந்து சாப்பாடு, மருந்து போன்றவைகளைக் கொடுக்கலாம் என்றும் நீதிபதி கூறியுள்ளார். மற்றபடி மற்ற பெண் கைதிகள் போலவே கனி மொழியும் நடத்தப்படுவார் என்று திகார் ஜெயில் முதன்மை மக்கள் தொடர்பு அதிகாரி சுனில்குப்தா கூறினார். அவர் மேலும் கூறியதாவது:-

கனிமொழி திகார் சிறைக்கு அழைத்து வரப்பட்டதும், அவரிடம் சிறை விதிமுறைகள், கட்டுப்பாடுகள் பற்றி விளக்கி கூறினோம். அதை அவர் கேட்டுக் கொண்டார். சிறைக்குள் நாங்கள் கனிமொழிக்கு எந்த சிறப்பு சலுகையும் காட்ட மாட்டோம். மற்ற கைதிகளை போலவே அவரும் நடத்தப்படுவார், ஆனால் சிறைக்குள் அவருக்கு உரிய பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என்பதில் நாங்கள் கவனமாக உள்ளோம்.

சிறைக்கு வரும் வி.ஐ.பி.க்கள் மீது தாக்குதல் நடத்துவதன் மூலம் புகழ் பெறலாம் என்று சில பெண் கைதிகள் நினைப்பது உண்டு.

இதை கருத்தில் கொண்டு கனிமொழிக்கு எப்போதும் ஒரு காவலர் பாதுகாப்புக்காக இருப்பார். கனிமொழி அறை முன்பு 24மணி நேரமும் அந்த பாதுகாப்பு வழங்கப்படும்.

இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.

கனிமொழி இருக்கும் அறைப்பகுதியில் கொசுத் தொல்லை உண்டு. இதை சிறை அதிகாரிகள் கவலையுடன் தெரிவித்தனர். அவருக்கு கொசு விரட்டி தரப்படுமா என்று கேட்டதற்கு சிறை அதிகாரிகள் பதில் சொல்லவில்லை.

கனிமொழி அடைக்கப்பட்டுள்ள 8-ம் நம்பர் அறைக்கு பக்கத்தில் உள்ள 15க்கு 10 அறைகளில் சில பெண் கைதிகள் உள்ளனர். கனிமொழியின் அடுத்த அறையில், பாகிஸ்தானுக்காக உளவு பார்த்த கைதான வெளியுறவு அதிகாரி மாதுரிகுப்தா உள்ளார். மற்றொரு அறையில் டெல்லி கவுன்சிலர் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற சாரதா என்ற கைதி உள்ளார். இவர்கள் தவிர தமிழ்நாட்டைச் சேர்ந்த சில பெண்களும் கைதிகளாக உள்ளனர்.

அவர்களிடம் பேசிக் கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் சிறைக் கூடம், 1, 3 மற்றும் 4-ல் அடைக்கப்பட்டுள்ள ஸ்பெக்ட்ரம் குற்றவாளிகளுடன் கனிமொழி பேசக் கூடாது என்று தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆரஞ்சு கலர் சுடிதார் அணிந்திருந்த கனிமொழி சிறைக்குள்ளும் அதே உடையுடன் இருக்க அனுமதிக்கப்பட்டார். இரவு அவருக்கு சப்பாத்தி, கொடுக்கப்பட்டது. அதை சாப்பிட்ட அவர் சிறிது நேரம் புத்தகம் படித்தார். இரவு 11 மணிக்கு கனி மொழி தூங்கச் சென்றார். டெல்லியில் நேற்று 44 டிகிரி செல்சியஸ் வெயில் அடித்ததால் இரவில் புழக்கம் காணப்பட்டது.

தனது சிறு அறையில் உள்ள மேடை கட்டிலில் கனிமொழி படுத்து தூங்கினார். அவர் நன்றாக தூங்கியதாக சிறை அதிகாரி ஒருவர் கூறினார். இன்று (சனி) அதிகாலை 5.30 மணிக்கெல்லாம் அவர் எழுந்து விட்டார். தனது காலை பணிகளை முடித்து விட்டு கோர்ட்டுக்கு புறப்பட தயாரானார். இன்று காலையும் அவர் சிறையில் கொடுத்த உணவைச் சாப்பிட்டார். முகத்தில் சற்று சோர்வு தெரிந்தது.

டெல்லி ஐகோர்ட்டில் அவர் ஜாமீன் கோரி மனு செய்துள்ளார். அதில் உத்தரவு வரும் வரை கனிமொழி 15க்கு 10 அறைக்குள் வாழ வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது.

No comments: