Thursday, August 4, 2011

தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை : வைகோ கருத்து.



அதிமுக அரசின் முதல் பட்ஜெட்டில் வரவேற்கத்தக்க அறிவிப்புகள் இடம் பெற்றுள்ளதாக மதிமுக பொதுச்செயலர் வைகோ கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:

அதிமுக அரசின் முதல் நிதிநிலை அறிக்கையில் வரவேற்கத்தக்க அறிவிப்புகள் இடம்பெற்று உள்ளன. ஆளுநர் உரையில் அறிவித்தவாறு, குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச அரிசி, திருமண உதவித் திட்டங்கள், சமூக நலத்திட்டங்கள், பள்ளி மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்குதல், இலவச மிக்சி, கிரைண்டர், மின்விசிறி வழங்குதல், கால்நடைகள் வழங்குதல் ஆகியவற்றிற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

வேளாண்மைத் துறை வளர்ச்சிக்கு, இயந்திரமயமாக்கலை மாநிலம் முழுதும் நடைமுறைப்படுத்துதல், நீர்ப்பாசன மேம்பாட்டுத் திட்டங்கள், அணைகள் சீரமைப்புத் திட்டம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால் உற்பத்தி வளர்ச்சிக்கான திட்டங்களும், தொலைதூர கிராமங்கள் பயன் பெறுவதற்கு நடமாடும் மருத்துவமனைகள், பொதுக் காப்பீட்டுத் திட்டத்தைச் செயல்படுத்த அரசு மருத்துவமனைகளைத் தரம் உயர்த்துதல் போன்றவை மக்களுக்கு பயன் அளிக்கக்கூடியவை.

மகாத்மா காந்தி கிராமப்புற வேலைவாய்ப்புத் திட்டத்தை விவசாயம் சார்ந்ததாக மாற்றம் செய்வது, வேளாண்மைத் தொழில் சந்தித்து வரும் நெருக்கடியைத் தீர்க்க உதவும். கம்பிவடத் தொலைக்காட்சி சேவையை அரசுடைமை ஆக்குதல், மீனவர் நலத்திட்டங்கள் ஆகிய வரவேற்கத்தக்க அம்சங்கள் இருந்தாலும், இன்றியமையாத மக்கள் பிரச்சினைகளில் நிதி நிலை அறிக்கை ஏமாற்றம் தருகிறது.

வேளாண்மைத் துறையில் மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்கள் பயன்பாடு மனித இனத்திற்கு பெரும் கேடு விளைவிக்கும் என்பதால் அவற்றுக்குக் கடும் எதிர்ப்பு தோன்றி உள்ள நிலையில் பி.டி. கத்திரி பரவலாக்கப்படும் என்ற அறிவிப்பு மக்கள் நலன் சார்ந்ததாக இல்லை. வேளாண் விளை நிலங்கள் தரிசாகப் போடப்பட்டு, வீட்டு மனைகளாக மாற்றுவதைத் தடுக்க, திட்டவட்டமான அறிவிப்புகள் இல்லை. விவசாய விளை நிலங்களைக் கையகப்படுத்த புதிய நிலம் எடுப்புக்கொள்கையை நடைமுறைப்படுத்திவிட்டு உணவுப் பாதுகாப்பு முறையை எப்படி அடைய முடியும்?

பத்து விழுக்காடு பொருளாதார வளர்ச்சி என்ற இலக்குடன் தயாரிக்கப்பட்ட நிதிநிலை அறிக்கையில் வணிக வரி, ஆயத்தீர்வை, முத்திரைத்தாள் கட்டண உயர்வு மூலம், கூடுதலாக 3,618 கோடி ரூபாய் திரட்ட திட்டமிட்டு உள்ளனர். ஆனால், விலை ஏற்றத்தைத் தடுத்து நிறுத்தவோ, கட்டுப்படுத்தவோ மாநில அரசு உடனடி நடவடிக்கை எடுக்காமல், இணையதள வணிகத்தில் இருந்து சில உணவுப்பொருட்களுக்கு விலக்கு அளிக்கக்கோரி மத்திய அரசிடம் வலியுறுத்துவோம் என்பது மாநில அரசின் பொறுப்பைத் தட்டிக் கழிப்பதாக உள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் மொழியை நீதிமன்ற மொழியாக்கிட மத்திய அரசிடம் வலியுறுத்தவில்லை. மின் பற்றாக்குறையைப் போக்கிட மாநில அரசின் அறிவிப்புகள் உடனடியாக பயன் அளிப்பதாக இல்லை.

சமச்சீர் கல்வி பிரச்சினையில் தமிழக மக்களின் ஒட்டுமொத்தக் கோபமும் அதிமுக அரசின் மீது திரும்பி உள்ளதை முதல்வர் உணரவில்லை. ஒருகோடியே இருபத்து மூன்று லட்சம் மாணவர்களின் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக ஆக்கியுள்ள இந்த அரசின் கல்விக்கொள்கை, நீதிமன்றங்களில் கடும் விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கின்ற நிலையில், சமச்சீர் கல்வி குறித்து அரசின் வீண்பிடிவாதம் தொடருவதையே நிதிநிலை அறிக்கை காட்டுகிறது.

எல்லை தாண்டி வந்து தமிழக மீனவர்களை சுட்டுக்கொல்லும் இலங்கை அரசை வன்மையாகக் கண்டிக்கவும், இனப் படுகொலை செய்த சிங்கள இனவாத அரசுக்கு எதிராக பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என்ற சட்டமன்றத் தீர்மானத்தை நடைமுறைப்படுத்த இந்திய அரசை வலியுறுத்தாததும் கவலை அளிக்கிறது என வைகோ தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

No comments: