Thursday, August 4, 2011

ஓரங்கட்டப்பட்ட அரசு ஓமியோபதி மருத்துவக் கல்லூரி : மூடுவிழாவுக்கு முயற்சிக்கிறதா சுகாதாரத் துறை?

தமிழகத்தில் தற்போது செயல்பட்டுவரும் ஒரே அரசு ஓமியோபதி மருத்துவக் கல்லூரியும் ஓரங்கட்டப்பட்டு இருக்கிறது. இதை மீட்டெடுக்க வேண்டிய சுகாதாரத் துறையின் நடவடிக்கைகளைப் பார்த்தால், அதன் மூடுவிழாவுக்கே தேதி குறித்துவிட்டதோ என்ற சந்தேகம் எழுகிறது. தமிழகத்தில் பத்து தனியார் ஓமியோபதி மருத்துவக் கல்லூரிகள் இருக்கின்றன. ஆனால், மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் தான் ஒரே ஒரு அரசு கல்லூரி இருக்கிறது.

1975ல் தமிழகத்தில் துவக்கப்பட்ட முதல் ஓமியோபதி மருத்துவக் கல்லூரியும் இதுவே. இன்று, மாற்று மருத்துவத்தை நோக்கி மக்கள் வந்து கொண்டிருக்கும் வேளையில், மூடுவிழாவை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது இந்தக் கல்லூரி.

இது குறித்து, இங்கு படிக்கும் மாணவ, மாணவியர் கூறியதாவது: ஐந்து ஆண்டுகள் மருத்துவப் படிப்பு அளிக்கும் இந்தக் கல்லூரியில், 300 பேர் படிக்கிறோம். இதன் தரம் இருக்கும் நிலையைக் கண்டு அதிர்ந்து நிற்கிறோம்.

இக் கல்லூரியில், 13 பேராசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதைத் தவிர, 12 ரீடர்கள், 14 விரிவுரையாளர்கள், மூன்று டியூட்டர் பணியிடங்கள் காலியாக இருக்கின்றன. மொத்தமுள்ள, 54 பணியிடங்களில், 36 இடங்கள் காலியாக இருக்கின்றன. அவ்வளவு ஏன்... முதல்வர் பணியிடமே காலியாகத் தான் இருக்கிறது.

இக்கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கு விடுதி வசதி கிடையாது. இருக்கும் மாணவியர் விடுதியிலும், அடிப்படை வசதிகள் கூட இல்லாததால், அவர்கள் தனியே வீடெடுத்து தங்கிப் பயிலும் நிலை உள்ளது. இதோடு முடியவில்லை; இன்னும் ஏராளமான காமெடிகள் இருக்கின்றன.

கல்லூரிக்கு பஸ் கிடையாது; ஆனால், டிரைவர் இருக்கிறார். அல்ட்ரா சோனோகிராம், இ.சி.ஜி., போன்ற அடிப்படை கருவிகள் கூட கிடையாது. கல்லூரியில் கழிவறைகள் போதுமானதாக இல்லை; இருப்பவையும் சுகாதாரமாக இல்லை. தாழ்வான பகுதியில் கல்லூரி இருக்கிறது. மழை வந்தால், கட்டடமே மிதக்கும்; கல்லூரியைச் சுற்றி புதர்கள் மண்டிக் கிடக்கின்றன; அவற்றை அப்புறப்படுத்தவும் முயற்சி இல்லை.

முதல் முறை பார்ப்பவர்கள், ஏதோ மர்ம மாளிகை என்று தான் நினைப்பர். இந்நிலையில், ஆண்டுக்கு ஒரு முறை வரும் மத்திய ஓமியோபதி மருத்துவக் கவுன்சில், எங்கள் கல்லூரியில் ஆய்வு மேற்கொண்டது. தகவலறிந்த தமிழக அரசின் சுகாதாரத் துறை, சுறுசுறுப்பானது. பல்வேறு அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் டாக்டர்களை தற்காலிகமாக இங்கு கொண்டு வந்து, அவர்கள் இங்கு பணியாற்றுவது போல் நாடகமாடப்பட்டது. ஆனால், அவர்கள் நடிப்பில் முதிர்ச்சி இல்லை போலும்; முதுநிலை பட்டப்படிப்புக்கு அனுமதி வழங்க, கவுன்சில் மறுத்துவிட்டது.

பட்ட மேற்படிப்புக்கு மத்திய அரசு ஆப்பு வைத்ததென்றால், மாநில அரசு, ஒரு படி மேலே சென்றுவிட்டது. கல்லூரியில் அடிப்படை வசதிகள் இல்லாததைக் காரணம் காட்டி, இங்கு செயல்பட்டுவந்த தேர்வு மையத்தையே, 30 கி.மீ., தொலைவில் உள்ள மதுரை மருத்துவக் கல்லூரிக்கு மாற்றிவிட்டது. அடிப்படை வசதிகள் செய்து தரவேண்டியது அரசின் கடமை.

தன் கடமையில் அரசு தவறிவிட்டு, எங்களை மன உளைச்சலுக்கு ஆளாக்குவது என்ன நியாயம்? ஏற்கனவே எந்த வசதியும் இல்லாமல் பஸ்சுக்காகவும், தண்ணீருக்காகவும் அகதிகள் போல அலையும் நாங்கள், இனி தேர்வெழுதவும் அலைய வேண்டுமா? எங்களின் பல்வேறு கோரிக்கைகளை, சுகாதாரத் துறை அமைச்சரிடமும், இந்திய மருத்துவ முறை மற்றும் ஓமியோபதி மருத்துவத் துறை இயக்குனரிடமும் பல முறை முறையிட்டுவிட்டோம்; இதுவரை யாரும் செவிசாய்க்கவில்லை. இவ்வாறு மாணவ, மாணவியர் குமுறினர்.

நிலைமையைப் பார்த்தால், உயிர் காக்கும் உயர் சிகிச்சை உடனடியாகத் தேவைப்படுவது இந்த மருத்துவக் கல்லூரிக்குத் தான் எனத் தோன்றுகிறது.

No comments: