
தமிழக சட்டசபை தேர்தலில் 80 சதவீதம் வரை ஓட்டுகள் பதிவாகி இருப்பதாக, தலைமை தேர்தல் கமிஷனர் பிரவீண்குமார் கூறினார். வாக்குப்பதிவு நிலவம் தொடர்பாக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் சென்னை கோட்டையில் நிருபர்களுக்கு இரவு 8 மணிக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
சட்டசபை தேர்தல் அமைதியாகவும், நியாயமாகவும் நடந்து முடிந்தது. இந்த தேர்தலில் சுயேச்சைகள் உள்பட அனைத்து அரசியல் கட்சியினரும் எங்களுக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்தனர். அதற்காக அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். பெரிய அளவில் அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நடைபெறவில்லை.
மாலை 5 மணிக்குப் பிறகும் சில வாக்குச்சாவடிகளில் தேர்தல் நடந்து கொண்டிருக்கிறது. அதில் 100-க்கும் மேற்பட்டவர்கள் கியூவில் நின்று வாக்களித்து வருகிறார்கள். சில தாலுகாவில் தொலைதூர கிராமங்களில் இருந்து வாக்குப்பதிவு விவரம் வந்துசேரவில்லை. எங்களுக்கு வந்துசேர்ந்துள்ள விவரங்கள் அடிப்படையில் பார்த்தால் தமிழகம் முழுவதும் வாக்குப்பதிவு 75 சதவீதம் முதல் 80 சதவீதம் வரை இருக்கும்.
இன்னமும் 50 சதவீத வாக்குச்சாவடிகளில் இருந்து முழு விவரம் வரவில்லை. எனவே, இறுதி நிலவரம் இரவு 11 மணிக்கு மேல் தெரிய வரும். அதிகபட்சமாக கரூர் மாவட்டத்தில் 86 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளன. குறைந்தபட்சமாக தூத்துக்குடி மாவட்டத்தில் 74 சதவீதம் வாக்குகள் பதிவாகி இருக்கின்றன. இதர மாவட்டங்களில் வாக்குப்பதிவு சதவீதம் இந்த சதவீதத்திற்கு இடைப்பட்டதாக உள்ளது.
கடந்த சட்டசபை தேர்தலில் 70.22 சதவீதமும், பாராளுமன்ற தேர்தலில் 73 சதவீதம் வாக்குகள் பதிவாகின. இந்த தேர்தலில் அதைவிட வாக்குப்பதிவு சதவீதம் அதிகரித்துள்ளது. இந்த தேர்தலில் சென்னையில் ஏராளமான இளைஞர்கள், நடுத்தர மற்றும் வசதி படைத்தவர்களும் அதிக எண்ணிக்கையில் வந்து வாக்களித்துள்ளனர். இதற்கு தேசிய வாக்காளர் தினம் கொண்டாடியது மட்டுமல்லாமல் தேர்தல் ஆணையம் நடத்திய விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் காரணம்.
இதனால், வாக்காளர்களிடம் ஓட்டுப்போடும் ஆர்வம் அதிகரித்துள்ளது. வாக்குப்பதிவில் பெரிய அளவில் பிரச்சினைகள் ஒன்றும் இல்லை. 65 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பழுதடைந்தன. அவற்றில் 11 எந்திரங்கள் உடனடி சரிசெய்யப்பட்டு பயன்படுத்தப்பட்டன. எஞ்சிய 54 எந்திரங்கள் மாற்றப்பட்டன. மொத்தம் 4 இடங்களில் தேர்தல் புறக்கணிப்பு நடந்தது. அதில் 2 இடங்களில் சரிசெய்யப்பட்டது.
தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூரில் வல்லையாவட்டம், பருத்திக்குடி ஆகிய 2 வாக்குச்சாவடிகளில் வாக்காளர் பட்டியல் இடமாறிவிட்டது. அந்த வாக்காளர்களுக்கு பஸ் வசதி செய்து தருவதாக மாவட்ட கலெக்டர் உறுதி அளித்த பிறகு அவர்கள் அங்குபோய் வாக்களிக்க மறுத்து தேர்தலை புறக்கணித்துள்ளனர். நீலகிரி மாவட்டம் கூடலூர் தொகுதியில் வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்ததை கண்டித்து தேர்தல் புறக்கணிப்பு நடந்தது.
பின்னர் அதிகாரிகள் பேசியதை தொடர்ந்து, புறக்கணிப்பு வாபஸ் பெறப்பட்டது. இந்த தேர்தலையட்டி நடத்தப்பட்ட வாகன சோதனைகளில் ரொக்கப்பணம் மற்றும் பரிசுபொருட்களின் மதிப்பு ரூ.45 கோடி ஆகும். இதில் உரிய ஆவணங்களை சமர்ப்பித்தவர்களுக்கு ரூ.5 கோடி திருப்பி கொடுக்கப்பட்டுவிட்டது. மீதம் உள்ள பணத்தில் உரிய ஆவணங்கள் சமர்ப்பிக்கப்படாவிட்டால் அந்த தொகை தேசிய கருவூலத்திற்கு அனுப்பப்படும். வாக்காளர்களுக்கு பணம் வினியோகம் செய்தது தொடர்பாக 1,565 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
53 பேர் கைதுசெய்யப்பட்டு இருக்கிறார்கள். தமிழ்நாட்டில் மட்டும் தேர்தல் ஆணையம் கடுமையாக நடந்துகொண்டது என்று புகார் சொல்கிறார்கள். இந்தியா முழுமைக்கும் ஒரே தேர்தல் விதிமுறைதான். தமிழகத்திற்கென்று தனியாக விதிமுறைகள் வகுக்கப்படவில்லை.
இவ்வாறு பிரவீண்குமார் கூறினார்.
தமிழக சட்டசபை தேர்தலில் 78 சதவீதம் வரை ஓட்டுகள் பதிவாகி இருப்பதாக, இறுதியாக கிடைத்த தகவல் மூலம் அறியமுடிகிறது.
No comments:
Post a Comment