Thursday, April 14, 2011

'முன்னாள் ராணுவத்தினரை திமுகவினருக்கு எதிராக திசை திருப்ப முயன்ற ஜெ'-கருணாநிதி.


தேர்தல் பணியில் ஈடுபட்ட முன்னாள் ராணுவத்தினருக்கான பணி ஊதியம் குறைக்கப்படவில்லை.

பாதுகாப்புப் பணியில் இருந்த முன்னாள் ராணுவத்தினரை தேர்தல் பணியில் ஈடுபட்ட திமுகவினருக்கு எதிராக திசை திருப்ப ஜெயலலிதா இவ்வாறு புகார் கூறியதாகத் தெரிகிறது. என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

தேர்தல் பாதுகாப்புப் பணியில் துணை ராணுவப் படையினர், முன்னாள் ராணுவத்தினர் உள்பட 24,000 பேர் ஈடுபடுத்தப்பட்டனர். அவர்களில் முன்னாள் ராணுவத்தினருக்கு ஒரு நாள் படியாக ரூ.300ம், உணவுப் படியாக ரூ.60ம் வழங்கப்பட்டது. ஆனால், இந்தத் தொகை குறைக்கப்பட்டு விட்டதாக அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா புகார் கூறியிருந்தார்.

இதற்கு மறுப்பு தெரிவித்து முதல்வர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில்,

ஆங்கில நாளேடு ஒன்றில் முன்னாள் ராணுவத்தினருக்கான தேர்தல் பணி ஊதியம் சென்ற தேர்தலில் இருந்ததை விட தற்போது குறைக்கப்பட்டுவிட்டதாக ஒரு செய்தி வெளிவந்தது. இதைத்தொடர்ந்து, அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா, முன்னாள் ராணுவத்தினரையும், பொதுமக்களையும் திசைதிருப்பி தேர்தல் நாளன்று குழப்பத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற உள்நோக்கத்தோடு அதை பெரிதுபடுத்தி வருவதை அறிந்து அதுகுறித்து உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கேட்டறிந்தேன்.

முன்னாள் ராணுவத்தினருக்கு கடந்த தேர்தலின்போது ஒருநாள் ஊதியமாக ரூ.300ம், உணவுப்படியாக ரூ.60ம் வழங்கப்பட்டது. தேர்தல் ஆணையமே இதை உணவுப்படியையும் சேர்த்து ஊதியமாக ரூ.275 ஆக குறைத்து அறிவித்தது. உடனே அரசு அதிகாரிகள் தேர்தல் ஆணையத்திடம் இவ்வாறு முன்னாள் ராணுவத்தினரின் ஊதியத்தை குறைத்தால் அதனால் அவர்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள் என்று எடுத்துக்கூறியதன் பேரில் அவர்கள் ஏற்கனவே பெற்றுவந்த ஊதியமான ரூ.300யைத் தொடரவும் உணவுப்படியாக ரூ.60ம் வழங்கப்படுகிறது.

எனவே, முன்னாள் ராணுவத்தினர் எந்த வகையிலும் பாதிக்கப்படவில்லை. வேண்டுமென்றே உண்மையை மறைத்து தேர்தல் நாளன்று மக்களை திசை திருப்பும் வகையில் அந்த ஆங்கில நாளிதழும், ஒரு தனியார் தொலைக்காட்சியும் ஈடுபட்டுள்ளது கடும் கண்டனத்துக்குரியது. சட்டப்படியான நடவடிக்கைக்கு உரியது என்று கூறியுள்ளார்.

தேர்தல் பணியில் ஈடுபடும் ராணுவத்தினர், முன்னாள் ராணுவத்தினருக்கு தேர்தல் ஆணையம் மூலமாக மத்திய அரசின் நிதி கொடுக்கப்படுகிறது. பணியில் ஈடுபடுவோருக்கு முதலில் மாநில அரசு பணத்தைக் கொடுத்து விடும். இந்தப் பணம் பின்னர் மத்திய அரசு மூலமாக மாநில அரசுகளுக்கு வழங்கப்படும்.

எனவே, ஜெயலலிதா சொல்வது போல அந்தத் தொகையை குறைப்பதற்கு மாநில அரசு தனிப்பட்ட முறையில் முடிவெடுத்து செயல்படுத்திட முடியாது என்பது குறிப்பிடத்தக்கது. அதைச் செய்ய அதிகாரம் உள்ளது தேர்தல் ஆணையம் மட்டும்.

பாதுகாப்புப் பணியில் இருந்த முன்னாள் ராணுவத்தினரை தேர்தல் பணியில் ஈடுபட்ட திமுகவினருக்கு எதிராக திசை திருப்ப ஜெயலலிதா இவ்வாறு புகார் கூறியதாகத் தெரிகிறது.


No comments: