Tuesday, July 5, 2011

ராணுவ அதிகாரியை கைது செய்யாவிட்டால் “குடும்பத்தோடு தீக்குளிப்போம்” : சுட்டுக் கொல்லப்பட்ட சிறுவனின் தாய் கண்ணீர் .



ராணுவ குடியிருப்பு வளாகத்தில் நேற்று முன்தினம் தில்ஷான் என்ற 13 வயது சிறுவன் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் நகரையே உலுக்கியது. இந்த கொடூரமான செயலில் ஈடுபட்ட ராணுவ வீரரை கண்டுபிடித்து கடுமையாக தண்டிக்க வேண்டும் என்று அனைத்து கட்சியினரும் வற்புறுத்தியுள்ளனர்.

தில்ஷான் வசித்த காந்தி நகர் குடிசைப் பகுதி மக்களும் அவனது பெற்றோரும் இன்னும் அதிர்ச்சியில் இருந்து மீளாமல் துக்கத்தில் மூழ்கி கிடக்கின்றனர். தில்ஷான் கொலை செய்யப்பட்டது குறித்து அவனது தாய் கலைவாணி கண்ணீர் மல்க கூறியதாவது:-

எனது மகன் தில்ஷான் கொல்லப்பட்டு 2 நாட்கள் ஆகிறது. இன்னும் அவனைக் கொன்ற ராணுவ அதிகாரியை கைது செய்யவில்லை. என் மகனை சுட்டவர் குடிபோதையில் இருந்துள்ளார். நாட்டை பாதுகாக்க வேண்டியவர் பகலிலேயே போதையில் திரிந்துள்ளார்.

மகனை கொன்றவரை பிடித்து சிறையில் அடைக்ககூடாது. அவரை கடுமையாக தண்டிக்க வேண்டும். தில்ஷானை சுட்ட மாதிரியே சுட வேண்டும்.

கொலையாளியை பிடிக்க காலதாமதம் செய்தால் நானும் எனது கணவர், மகன், மகள் ஆகியோர் குடும்பத்தோடு தற்கொலை செய்வோம். அதை தவிர வேறு வழி எங்களுக்கு தெரியவில்லை.

சுட்டவரை சிறுவர்கள் சஞ்சய், பிரவீன் ஆகியோர் பின்னால்தான் பார்த்துள்ளனர். முகத்தை பார்க்கவில்லை. அணிவகுப்பு நடத்தினால் அவர்களால் அடையாளம் காண்பது சிரமம் ஆகும்.

இவ்வாறு கலைவாணி கூறினார்.

சிறுவன் தில்சனை சுட்டவர் லெப்டினன்ட் கர்னல் : விசாரணையில் தகவல்

சென்னை தீவுத்திடல் அருகில் உள்ள ராணுவ குடியிருப்பு வளாகத்தில் நேற்று முன்தினம் சிறுவன் தில்ஷான் சுட்டுக்கொல்லப்பட்டான் இது குறித்து கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

பின்னர் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. க்கு மாற்றப்பட்டது. இதனைதொடர்ந்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் நேற்று முதல் விசாரணையை தொடங்கினார்கள். சிறுவன் கொல்லப்பட்டது குறித்து அங்கிருந்த ராணுவ வீரர்கள் மற்றும் அதிகாரிகளிடம் விசாரணை நடத்தினார்கள்.

சிறுவன் தில்ஷான் சுடப்பட்ட அன்று மதியம் ராணுவ குடியிருப்பு வளாகத்தில் இருந்து கருப்பு நிற கார் ஒன்று வெளியே சென்றது விசாரணையில் தெரிய வந்தது.
அந்த கார் நேராக அங்கிருந்து பாம்குரோவ் ஸ்போர்ட் காம்ப்ளக்சுக்குள் வந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக சி.பி.சி. ஐ.டி. போலீசார் விசாரித்தார்கள். அந்த காரில் சென்ற அதிகாரி லெப்டினன்ட் கர்னல் என்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதற்கிடையே கர்னலிடம் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர். ஆனால், அவரிடம் விசாரணை நடத்த அனுமதிக்க மற்ற ராணுவ அதிகாரிகள் ஒத்துழைக்க மறுக்கின்றனர். கர்னலை காப்பாற்ற ராணுவ அதிகாரிகள் முயற்சிப்பதாக கூறப்படுகிறது .

இதனால் லெப்டினன்ட் கர்னலை விசாரிப்பது தொடர்பாக டெல்லியில் உள்ள ராணுவ தலைமையகத்துக்கு போலீசார் கடிதம் எழுதியுள்ளனர்.

No comments: