Tuesday, July 5, 2011

திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோவில் நகைகள் மதிப்பு ரூ.2 லட்சம் கோடியை தாண்டியது .

பத்மநாபசாமி கோவில் நகைகள் மதிப்பு ரூ.2 லட்சம் கோடியை தாண்டியது

திருவனந்தபுரம் பத்மநாப சாமி கோவிலில் ரகசிய அறைகளில் இருந்த தங்க, வைர நகைகள் மதிப்பிடப்பட்டு வருகிறது. இன்னும் ஒரு அறை திறந்து பார்க்க வேண்டிய நிலையில் இதுவரை கிடைத்த தங்க, வைர ஆபரணங்கள், மதிப்பு ரூ.2 லட்சம் கோடியை தாண்டி விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

6-வது அறை இரும்புத் திரையால் மூடப்பட்டுள்ளது. அந்த அறைக்குள் பல லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் இருக்கக் கூடும் என்ற எதிர் பார்ப்பு ஏற்பட்டுள்ளது. உலகில் இதுவரை இத்தகைய புதையல் எங்கும் கிடைத்தது இல்லை.

பத்மநாப சாமி கோவிலில் கடைசி அறையை திறப்பதில் எழும் முட்டுக்கட்டைகள்.

கடந்த 150 ஆண்டுகளாக பூட்டி வைக்கப்பட்டிருந்த கேரள மாநிலம் திருவனந்த புரத்திலுள்ள புகழ்பெற்ற பத்மநாப சாமி கோவிலின் ரகசிய அறைகளிலிருந்து இதுவரை ரூபாய் 2 லட்சம் கோடி மதிப்புள்ள தங்கம், வைரம் மற்றும் விலை மதிப்பற்ற வைடூரிய ஆபரணங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ள நிலையில், இன்னமும் திறக்கப்படாமல் உள்ள பி என பெயரிடப்பட்ட அறை எதிர்வரும் 8-ந்தேதி திறக்கப்படவுள்ளது.

இதற்கிடையே, இந்த அறையை திறப்பது குறித்து பலவேறு கருத்துக்கள் நிலவுகின்றன.

இந்த அறைகள் திறக்கப்பட்டது ஒரு மோசமான சகுனமென்றும்; சாபமென்றும் ஒருசாரார் கருத்து தெரிவிக்கின்றனர். அறைகளை திறக்கும் செயல் நாட்டிற்கே சாபமாக அமையலாம் என கூறப்படுகிறது.

இதனை திறக்க உச்சநீதிமன்றம் அமைத்துள்ள குழுவில் இடம் பெற்ற ஒருவரது தாயார் இறந்து போனதும், மற்றொருவருக்கு காலில் அடிபட்டதும் சாபத்தின் காரணமாகவே என்று அறைகள் திறக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் கருதுகிறார்கள்.

இந்நிலையில், மீதமுள்ள அறையை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தற்போது கோவிலை நிர்வகித்து வரும் அரச குடும்ப முக்கிய பிரமுகர் டெல்லியில் முகாமிட்டுள்ளது, இம்முயற்சிக்கு முட்டுக்கட்டை போடும் விதமாக இருக்கலாம் என்ற கருத்தும் உலாவருகிறது.

No comments: