ஜப்பான் நாட்டின் ஃபுகுஷிமா நகரில், ஆழிப் பேரலையால் சீரழிக்கப்பட்ட அணு மின் நிலையத்தில், உலையில் சிக்கியுள்ள எரிபொருளை வெளியே பக்குவமாக எடுக்க 40 ஆண்டுகளும் சுமார் ரூ.78,400 கோடியும் தேவைப்படும் என்று நிபுணர்கள் மதிப்பிட்டுள்ளனர்.
அப்படி வெளியே எடுக்கும் கதிரியக்கக் குணம் கொண்ட எரிபொருளை சுற்றுப்புறத்துக்கு ஆபத்து இல்லாமல் எப்படி அப்புறப்படுத்துவது என்பதற்கான வழிகளை இனிமேல்தான் கண்டுபிடிக்க வேண்டும் என்பது அடுத்த பிரச்னை.
உலையிலிருந்து, எரி கலத்தின் அடிப்புறத்துக்குச் சென்றுவிட்ட எரிபொருளை வெளியே கொண்டு வருவதற்கான முன் ஏற்பாடுகளைச் செய்யவே 10 ஆண்டுகள் பிடிக்குமாம். அதைச் செய்வதற்கும் ரோபோட்டுகள் எனப்படும் இயந்திர மனிதர்களை இனிமேல்தான் தயாரிக்க வேண்டுமாம்.
ஃபுகுஷிமா அணு உலையால் கதிரியக்க ஆபத்து 40 ஆண்டுகளுக்குப் பிறகும் மறைந்துவிடாது என்றும் தெரியவருகிறது.
ரூ.78,400 கோடி எரிபொருளை வெளியே எடுக்க மட்டும்தான். பிற செலவுகளும் காத்திருக்கின்றன.
இத் தகவல்களை இந்த அணு உலைக்காகவே ஜப்பானிய அரசு நியமித்துள்ள அமைச்சர் கோஷி ஹோசனோ, டோக்கியோ நகரில் புதன்கிழமை இதைத் தெரிவித்தார்.
அணு மின்சாரம் தயாரிப்பதற்கு மிகவும் மலிவானது, அணு உலைக்கு எந்தவித ஆபத்தும் நேராது, அப்படியே கதிரியக்கம் ஏற்பட்டாலும் சிகிச்சை செய்துவிடலாம், தடுத்து விடலாம் என்று கூறப்படும் வேளையில் ஃபுகுஷிமா அணு உலை தொடர்பாக வெளிவரும் இந்தத் தகவல்கள் அச்சம் தருபவையாக இருக்கின்றன.
No comments:
Post a Comment