மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம், ஆகிய 5 மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமாகவும், விவசாயிகளின் வாழ்வாதாரமாக விளங்கும் முல்லை பெரியாறு அணையில் தமிழர்களின் உரிமையை காக்க போராட்டங்கள் தமிழகம் முழுவதும் தீவிரமாக நடந்து வருகிறது.
வக்கீல்கள், வர்த்தகர்கள், ஆட்டோ, வேன், கார் டிரைவர்கள் மற்றும் பல்வேறு தரப்பினரும், சமூக அமைப்பினரும் கேரள அரசை கண்டித்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இன்று 5 மாவட்டங்களில் முழு கடையடைப்பு போராட்டம் நடந்தது. தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம், தமிழ்நாடு உணவுபொருள் வியாபாரிகள் சங்கம், மடீட்சியா தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு, வணிகர் சங்க பேரவை, மதுரை ஜூவல்லர்ஸ், புல்லியன் மெர்ச்சன்ட் அசோசியேசன், மதுரை ஜவுளி வியாபாரிகள் சங்கம், முல்லை பெரியாறு அறவழி போராட்டக்குழு, வெற்றிலை, பாக்கு, பீடி, சிகரெட் வர்த்தக சங்கம் உள்பட சங்கங்கள் இந்த போராட்டங்களில் ஈடுபட்டுள்ளன.
முழு கடையடைப்பு காரணமாக மதுரையில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டன. ஓட்டல்கள், ஜவுளி கடைகள், நகைக்கடைகள், வர்த்தக நிறுவனங்கள். பெட்டிக்கடைகள், டீ, காபி கடைகள், பலசரக்கு கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டன.
இதனால் மதுரையில் பெரியார் பஸ் நிலையம், ரெயில் நிலையம், கீழமாசிவீதி, விளக்குத்தூண், சிம்மக்கல், கோரிப்பாளையம், ஆரப்பாளையம், மாட்டுத்தாவணி உள்ளிட்ட அனைத்து பகுதிகளும் வெறிச்சோடி காணப்படுகிறது.
பஸ்கள் இயக்கப்பட்டதால் பஸ் நிலையங்களில் மட்டும் பயணிகள் கூட்டம் காணப்பட்டது. பல்வேறு ஆட்டோ, வேன் சங்கங்களும் இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்ததால் பெரும்பாலான ஆட்டோ மற்றும் வேன்களும் ஓடவில்லை.
கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்ட வியாபாரிகள் மதுரை கே.கே.நகரில் உள்ள மடீட்சியா அலுவலகம், மதுரை காமராஜர் சாலையில் உள்ள தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம் ஆகியவற்றின் முன்பு உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஏராளமான தொழில் அதிபர்கள், வணிகர்கள் கலந்து கொண்டனர். இந்த முழு கடையடைப்பு மாலை 5 மணி வரை நடக்கிறது. இதனால் மதுரை மாவட்டத்தில் இன்று ரூ.200 கோடி அளவுக்கு வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.
தேனி மாவட்டத்தில் உள்ள அனைத்து கடைகளும் இன்று மூடப்பட்டன. தேனி, கம்பம், கூடலூர், காமயகவுண்டன்பட்டி, கருநாக்கமுத்தன்பட்டி, சுருளிபட்டி போன்ற பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. காய்கறி கடைகளும் மூடப்பட்டன. டீக்கடைகள், ஓட்டல்கள் மூடப்பட்டதால் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது.
தேனி மவட்டத்தில் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. கம்பம், கூடலூர், பகுதியில் இன்று அரசு பள்ளிகள், தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டு இருந்தது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று ஓட்டல், பேக்கரி, டீக்கடை சங்கம் சார்பில் கடையடைப்பு போராட்டம் நடந்தது. மாவட்டத்தில் சுமார் 500 கடைகள் மூடப்பட்டு இருந்தன. வர்த்தக சங்கம் சார்பில் சங்க தலைவர் ஜெகதீசன், செயலாளர் கோவிந்தராஜன் ஆகியோர் தலைமை யில் வியாபாரிகள் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலம் சென்றனர். மேலும் மாவட்டத்தில் உள்ள வாடகை கார், வேன், ஆட்டோ டிரைவர்கள் வேலை நிறுத்தம் செய்தனர். இதனால் சுமார் 5 ஆயிரம் ஆட்டோக்கள் ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று ஓடவில்லை.
சிவகங்கை, மானாமதுரை, திருப்பத்தூர், காரைக்குடி, தேவகோட்டை உள்பட அனைத்து பகுதிகளிலும் உள்ள ஓட்டல்கள் உள்பட அனைத்தும் கடைகளும் மூடப்பட்டு இருந்தன. சுமார் 2 ஆயிரம் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. மாவட்டம் முழுவதும் வேன், கார்கள், ஆட்டோக்கள் இன்று ஓடவில்லை.
திண்டுக்கல் பஸ் நிலையம், காந்தி மார்க்கெட், பூ மார்க்கெட் உள்பட 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டு இருந்தது. திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டிருந்தது. கேரள அரசை கண்டித்து இன்று காலை திண்டுக்க்ல காட்டாஸ்பத்திரி அருகே வர்த்தக சங்கம் சார்பில் உண்ணாவிரதம் நடந்தது.
இந்த போராட்டத்தில் 50 இணைப்பு சங்கங்களும் ஆதரவு தெரிவித்துள்ளன. கேரள அரசை கண்டித்து ஈரோடு மாவட்டத்திலும் இன்று பல்வேறு இடங்களில் கடையடைப்பு போராட்டம் நடந்தது. அந்தியூர், பவானி, கவுந்தப்பாடி, சிவகிரி, அம்மன் கோவில் ஆகிய இடங்களில் முழு கடையடைப்பு நடந்தது. இந்த ஊர்களில் உள்ள ஆட்டோக்கள் மற்றும் வாடகை வேன்கள் என சுமார் 5000-க்கும் மேற்பட்ட வாகனங்களும் ஓடவில்லை.
No comments:
Post a Comment