Saturday, April 30, 2011

பின்லேடன் மகன் 2002-ல் பாகிஸ்தானில் வசித்தார் : விக்கி லீக்ஸ்.

ஒசாமா பின்லேடனின் மகன்களில் ஒருவரான சயீது பின்லேடன் 2002-ம் ஆண்டு பாகிஸ்தானின் கராச்சி நகரில் பாதுகாப்பாக வசித்து வந்ததாக விக்கி லீக்ஸ் இணைய தளம் தெரிவித்துள்ளது.

2001-ம் ஆண்டு செப்டம்பர் 11-ம் தேதி நிகழ்த்தப்பட்ட நியூயார்க் இரட்டை கோபுர தாக்குதலுக்கு பிறகு அவர் தனது குடும்பத்துடன் கராச்சி நகரில் வசித்துள்ளார். இந்தத் தகவலை அவருக்கு நெருக்கமானவரும் நியூயார்க் தாக்குதலில் மூளையாக செயல்பட்டவருமான அப்துல் ரப்பானி அபு ரஹ்மான் தெரிவித்ததாக அந்தத் தகவல் கூறுகிறது.

அபு ரஹ்மான் 2002-ம் ஆண்டு பாகிஸ்தானில் கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் விசாரணைக்காக அமெரிக்காவின் குவான்தனாமோ தடுப்பு காவல் மையத்துக்கு கொண்டு செல்லப்பட்டார்.

பாகிஸ்தானில் கராச்சியிலும் பிற பகுதிகளிலும் அல் காய்தா முக்கிய தீவிரவாதிகள் பதுங்குவதற்கு உருவாக்கப்பட்ட பாதுகாப்பான இல்லங்களை நிர்வகிப்பது, அல் காய்தாவின் முக்கிய பிரமுகர்களுடன் தொடர்பு கொண்டு சதித் திட்டங்களை தீட்டுவது உள்ளிட்டவை இவரது வேலைகளாக இருந்துள்ளன. நியூயார்க் இரட்டை கோபுர தாக்குதலில் தொடர்புள்ளதாக குற்றம் சாட்டப்படும் 19 பேரில் 17 பேருக்கு அவர் நேரடியாக உதவி செய்துள்ளார். பல முறை இவர் ஒசாமா பின் லேடனை நேரில் சந்தித்துள்ளார்.

2002-ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் ஜூன் மாதம் வரை பாகிஸ்தானில் பாதுகாப்பாக சயீது பின்லேடன் வசித்ததாக அவர் தெரிவித்துள்ளார். இந்தத் தகவல்கள் 2008-ம் ஆண்டு ஜூன் 9-ம் தேதி தயாரிக்கப்பட்ட அமெரிக்காவின் விசாரணை அறிக்கையில் இடம் பெற்றுள்ளதாக விக்கி லீக்ஸ் தெரிவித்துள்ளது.

No comments: