Saturday, April 30, 2011

ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் ரூ.2 லட்சம் கோடி இழப்பு : இந்திய விண்வெளி கமிஷன் இன்று கூடுகிறது.

ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் ரூ.2 லட்சம் கோடி இழப்பு: இந்திய விண்வெளி கமிஷன் இன்று கூடுகிறது

எஸ் பாண்டு ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் ரூ.2 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்ட புகாரை தொடர்ந்து, இஸ்ரோவின் ஆன்டிரிக்ஸ் நிறுவனம் மாற்றி அமைக்கப்படுகிறது. இது தொடர்பாக இந்திய விண்வெளி கமிஷனின் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெறுகிறது.

இஸ்ரோவின் (இந்திய விண்வெளி ஆய்வு மையம்) வர்த்தக பிரிவான ஆன்டிரிக்ஸ் நிறுவனத்துக்கும், தேவாஸ் மல்டிமீடியா என்ற தனியார் நிறுவனத்துக்கும் இடையே எஸ் பாண்டு அலைகற்றை ஒப்பந்தம் ஏற்பட்டது. இந்த ஒப்பந்தத்தின்படி, எஸ் பாண்டு அலைகற்றை ஒதுக்கீட்டை 20 ஆண்டுகள் குத்தகைக்கு எடுத்த தேவாஸ் நிறுவனம் அதற்காக ஆண்டுக்கு ரூ.50 கோடி செலுத்தினால் போதும். இதனால் அரசுக்கு ரூ.2 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டதாக புகார் எழுந்தது.

இதனால் இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்வது பற்றி மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. ஆனால் ஆன்டிரிக்ஸ் நிறுவனத்துடன் செய்து கொண்ட ஒப்பந்தம் சட்டபூர்வமானது என்றும், அதை ரத்து செய்ய முடியாது என்றும் தேவாஸ் நிறுவனம் கூறியிருந்தது.

இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், பிரதமர் மன்மோகன்சிங் தலைமையில் நேற்று முன்தினம் மத்திய மந்திரிசபை கூட்டம் நடைபெற்றது.

பிரதமர் கேட்டுக்கொண்டதன் பேரில் இந்த கூட்டத்தில் இஸ்ரோவின் தலைவரும், விண்வெளி துறையின் செயலாளருமான கே.ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு, எஸ் பாண்டு அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பாக இஸ்ரோவின் வர்த்தக பிரிவான ஆன்டிரிக்ஸ் நிறுவனத்துக்கும், தேவாஸ் மல்டிமீடியா என்ற நிறுவனத்துக்கும் இடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தின் சாராம்சம் பற்றி விளக்கி கூறினார்.

பின்னர் மந்திரிசபை கூட்டத்தில் பேசிய பிரதமர் மன்மோகன்சிங், சர்ச்சைக்குரிய எஸ் பாண்டு அலைக்கற்றை ஒப்பந்தம் பற்றி விசாரணை நடத்த முன்னாள் மந்திரிசபை செயலாளரும், மத்திய திட்டக்கமிஷன் உறுப்பினருமான பி.கே.சதுர்வேதி, பிரபல விண்வெளி விஞ்ஞானியும் விண்வெளி கமிஷன் உறுப்பினருமான ரோத்தம் நரசிம்மா ஆகியோர் அடங்கிய உயர்மட்ட கமிட்டி ஒன்று அமைக்கப்பட்டு இருப்பதாக அறிவித்தார்.

இந்த இரு நபர் கமிட்டி, மேற்கண்ட இரு நிறுவனங்களுக்கும் இடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தில் உள்ள தொழில்நுட்பம், வர்த்தகம், விதிமுறைகள், நிதி தொடர்பான விளைவுகள் போன்றவற்றை ஆய்வு செய்கிறது. மேலும் அலைக்கற்றை ஒப்பந்தத்தை ஒரு மாதத்துக்குள் இந்த கமிட்டி ஆய்வு செய்து, விண்வெளி துறை அமைச்சகத்தை கவனித்து வரும் பிரதமர் மன்மோகன்சிங்கிடம் அறிக்கையை சமர்ப்பிக்க இருக்கிறது.

இந்நிலையில் இஸ்ரோவின் ஆன்டிரிக்ஸ் நிறுவனம் மாற்றி அமைக்கப்படுகிறது. இது தொடர்பாக இந்திய விண்வெளி கமிஷனின் ஆலோசனை கூட்டம் விண்வெளி துறையின் செயலரான ராதாகிருஷ்ணன் தலைமையில் இன்று டில்லியில் நடைபெறுகிறது

இக்கூட்டத்தில், ஆண்ட்ரிக்ஸ் - திவாஸ் ஒப்பந்தம் பற்றி விவாதித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பபட்டு அரசுக்கு பரிந்துரைக்கப்பட இருக்கிறது.

No comments: