Saturday, April 30, 2011

'சராசரி அறிவு'... ஜோஷி மீது ப.சிதம்பரம் கடும் தாக்கு


2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பாக நாடாளுமன்ற பொதுக் கணக்குக் குழு தலைவர் முரளி மனோகர் ஜோஷி எழுதிய அறிக்கை முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது, உண்மையைத் திரித்து எழுதப்பட்டுள்ளது. லைசென்ஸ்களுக்கு கட்டணம் நிர்ணயிப்பது தொடர்பாக பிரதமருக்கு நான் அளித்த யோசனைகளை ஜோஷி வேண்டுமென்றே குறிப்பிடப்படாமல் தவிர்த்துள்ளார் என்று மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் கூறினார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

கடந்த 15.1.2008ம் தேதி பிரதமர் மன்மோகனுக்கு நான் கடிதம் ஒன்றை அனுப்பினேன். அதில் 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டிற்கான நுழைவுக் கட்டணம் பற்றி நான் எதுவும் தெரிவிக்கவில்லை, பயன்பாட்டுக் கட்டணம் பற்றி மட்டுமே குறிப்பிட்டிருந்தேன்.

இதை சராசரி அறிவுள்ள ("average intelligence") எவரும் கவனத்தில் கொள்ள முடியும். ஆனால், முரளி மனோகர் ஜோஷியின் அறிக்கையில் 2008ல் பிரதமருக்கு நான் எழுதிய கடிதத்தில் கூறப்பட்ட விஷயங்கள் திரித்துக் கூறப்பட்டுள்ளன.

மாறாக நான் இந்த விஷயம் முடிந்தபோன விஷயம் (matter as closed) , இதை இத்துடன் விட்டுவிடலாம் என்று பிரதமரிடம் கூறியதாக தவறான வகையில் குறிப்பிட்டுள்ளார் ஜோஷி.

அதே நேரத்தில் ஸ்பெக்ட்ரம் விற்பனை மூலம் கூடுதலாக அரசுக்கு பணம் ஈட்டுவது எப்படி என்று நான் எனது கடிதத்தில் குறிப்பிட்டிருந்த 3 யோசனைகளை ஜோஷி திட்டமிட்டு மறைத்துள்ளார்.

ஜோஷியின் வரைவு அறிக்கையில் என்ன விஷயம் இடம் பெற வேண்டுமோ அது இடம் பெறவில்லை. ஸ்பெக்ட்ரம் லைசென்ஸ்களுக்கு முறையாக கட்டணம் வசூலிப்பது தொடர்பாக, நிதி அமைச்சர் என்ற முறையில் நான் தெரிவித்த யோசனைகள் எல்லாம் குறிப்பிடப்படவில்லை.

ஸ்பெக்ட்ரம் என்பது மிகவும் அரியதானது, அதனால் அதன் மதிப்பை உணர்ந்து விலை நிர்ணயிக்கப்பட வேண்டும் என்று நான் குறிப்பிட்டிருந்தேன். இதை யெல்லாம் ஜோஷி வேண்டுமென்றே மறைத்துவிட்டு அறிக்கையை தயார் செய்துள்ளார் என்று கூறியுள்ளார்.

இதே விவரங்களை நிருபர்களிடமும் சிதம்பரம் விளக்கினார். அவர் கூறுகையில், 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் எனக்கு நேரடித் தொடர்பு என்று முன்னாள் நிதியமைச்சர் யஷ்வந்த் சின்கா கூறியதற்கு நான் ஏன் பதிலளிக்க வேண்டும்? என்றார்.

"சராசரி அறிவுள்ள எவரும் என் கருத்தைப் புரிந்து கொள்வர்'' என்று நீங்கள் கூறியது, முரளி மனோகர் ஜோஷியைக் குறிப்பிடுவதாக கருதலாமா என்று நிருபர்கள் கேட்டதற்கு, நான் அப்படி கூறவில்லை. என்னை போல சராசரி ஆள் புரிந்து கொள்ளலாம் என்று என்னையே நான் கூறிக் கொண்டேன் என்றார் பதிலடியாக.

அறிக்கையை சபாநாயகரிடம் தர ஜோஷி:

பொதுக் கணக்குத் தலைவராக இருந்து கொண்டு தனது குழுவில் உள்ளவர் களிடமே முழுமையாக ஆலோசிக்காமல் பிரதமர், சிதம்பரம் மீது கடும் குற்றங்களை சுமத்தி தானே எழுதிய அறிக்கையை மக்களவை சபாநாயகர் மீரா குமாரிடம் அளிக்க அதன் தலைவர் முரளி மனோகர் ஜோஷி முடிவு செய்துள்ளார்.

ஜோஷி தலைமையிலான பிஏசி குழுவின் பதவிக்காலம் இன்றுடன் முடிவது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே ஜோஷியை நீக்கி, அவருக்குப் பதிலாக சைபுதீன் சோஸ் தலைவராக நியமித்தும், ஜோஷி எழுதிய அறிக்கையை நிராகரித்தும் பொதுக் கணக்குக் குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுவிட்டதால், இந்த அறிக்கையே செல்லுபடியாக ஒன்றாக விட்டதாகவே கருதப்படுகிறது.

காங்கிரஸை மாட்டிவிடுகிறேன் பேர்வழி என்ற அவசரத்திலும் பாஜகவுக்கு ஆதாயம் தேடவும் ஜோஷி காட்டிய அவசரம், அவருக்கே எதிராகத் திரும்பி விட்டது. இதன்மூலம் ஆதாயம் தேட முயன்ற பாஜகவுக்கும் காங்கிரஸ் செக் வைத்துவிட்டது.

இந் நிலையில் அறிக்கையை சட்டப்பூர்வமாக தாக்கல் செய்வது குறித்து ஜோஷி அதிமுக, பிஜு ஜனதா தளம், இடதுசாரி உறுப்பினர்களுடன் நேற்று ஜோஷி ஆலோசனை நடத்தினார். அதில், அறிக்கையை சபாநாயகரிடம் அளிப்பது என்று முடிவு செய்யப்பட்டது.

No comments: