Saturday, April 30, 2011

பறவைகள் சரணாலயம், தர்காவில் சூரிய ஆற்றல் மின்சாரம்.


சூரிய ஆற்றல் மின்சாரத்தைப் பயன்படுத்துவதில் ராஜஸ்தான் மாநிலம் முன்னோடியாக வளர்ந்து வருகிறது. முதல் கட்டமாக மாநிலத்தில் உள்ள பரத்பூர் பறவைகள் சரணாலயத்திலும், ஹஜ்ரத் மொய்னுதீன் கிஸ்தி தர்காவிலும் சூரிய மின்னாற்றலைப் பயன்படுத்த முடிவு செய்துள்ளது.

மாநிலத்தில் அபரிமிதமாகக் கிடைக்கும் சூரிய ஆற்றலை உரிய வகையில் பயன்படுத்திக் கொள்ள மாநில அரசு திட்டமிட்டுள்ளது. ஏற்கெனவே ஆஜ்மீரில் உள்ள ஹஜ்ரத் மொய்னுதீன் தர்காவில் இதற்கான சூரிய ஒளிப் பலகைகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன.

இதேபோல பரத்பூரில் உள்ள கியோலெடோ தேசிய பூங்காவிலும் சூரிய ஒளி மூலமான மின் பலகைகள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதேபோல சுற்றுலாப் பயணிகள் அதிகம் வரும் சித்தூர்கர் கோட்டையிலும் சூரிய மின்னாற்றல் பலகைகள் நிறுவ மாநில அரசு ஏற்பாடு செய்து வருகிறது.

ஆஜ்மீர் தர்காவில் 20 கிலோவாட் சூரிய ஆற்றல் மின்னுற்பத்தி பலகைகள் நிறுவப்பட்டுள்ளன. இதனால் சூரியன் மறைந்தபிறகு 6 மணி நேரத்திற்கு இங்குள்ள மின் விளக்குகள் செயல்படும். அத்துடன் இங்கு வரும் பக்தர்களுக்கு வெந்நீர் அளிப்பதற்கு சூரிய ஒளியில் இயங்கும் 500 லிட்டர் மற்றும் 1,500 லிட்டர் கொள்ளளவு கொண்ட வாட்டர் ஹீட்டர்களும் நிறுவப்பட்டுள்ளன. முன்னர் வெந்நீருக்கு மின்சார வாட்டர் ஹீட்டர்கள் பயன்படுத்தப்பட்ன. சிலசமயங்களில் மரக்கட்டைகள் பயன்படுத்தப்பட்டதாக மரபுசாரா எரிசக்தித்துறை நிறுவன அதிகாரி ஆர்.ஆர். செüத்ரி தெரிவித்தார்.

பரத்பூரில் உள்ள தேசிய பூங்கா, உலக புராதான சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பூங்காவில் நீர் இறைக்கப் பயன்படும் மோட்டாருக்குத் தேவையான மின்சாரம் சூரிய ஆற்றல் மூலம் கிடைக்கிறது. இங்குள்ள குளத்தில் நீர் எப்போதும் இருப்பதால் பறவைகள் எப்போதும் இங்கு இருந்துகொண்டேயிருக்கும். குளத்திலிருந்து நீரை இறைக்கும் மோட்டார்களும் சூரிய ஆற்றளில் செயல்படுபவையாகும். இவை தவிர, அலுவலகம், கண்காட்சியகம் ஆகியவற்றில் உள்ள மின் சாதனங்களுக்குத் தேவையான மின்சாரம் சூரிய ஆற்றல் மூலம் வழங்கப்படுகிறது. இதற்காக 8 கிலோவாட் சூரிய ஆற்றல் மின்னுற்பத்தி மையம் அமைக்கப்பட்டுள்ளது. பரத்பூர் சரணாலயத்தில் ரூ. 1 கோடி செலவிலான பணிகள் இந்த ஆண்டு அக்டோபரில் நிறைவடையும்.

இந்த சரணாலயத்துக்கு மிகவும் அரிய வகை பறவைகளான சைபீரிய கொக்கு உள்ளிட்ட 230 வகை பறவைகள் வந்து செல்கின்றன. இந்த பூங்காவைச் சுற்றிப் பார்க்க பேட்டரியில் இயங்கும் 2 கார்கள் பயன்படுத்தப்படுகின்றன. ராஜஸ்தானில் பல்வேறு பகுதிகளில் சூரிய ஆற்றலைப் பயன்படுத்துவதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments: