Saturday, April 30, 2011

வாரிசுகளின் வளர்ச்சியில் அர்த்தம் கற்பிப்பது ஏன்? கருணாநிதி கேள்வி.



என்னுடைய வாரிசுகளின் வளர்ச்சியில் மட்டும் அர்த்தம் கற்பிப்பது ஏன்? என்று முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து, வெள்ளிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:

தொண்டாற்றியும், தொடர்ந்து தியாகங்கள் செய்தும் கட்சியின் தருக்களாக என்னுடைய பிள்ளைகள் அழகிரி, ஸ்டாலின், தமிழரசு ஆகியோர் வளர்ந்துள்ளனர். அவர்களுடைய பிள்ளைகளும் திரையுலகில் பொருளீட்டி புகழ் ஈட்டுவதைப் பொறுத்துக் கொள்ள முடியாத சிலர் எனக்கு நண்பர்களாக இருந்து கொண்டே நச்சுக் கணைகள் பாய்ச்சுவதால் உரிய விளக்கத்தை அளிக்க விரும்புகிறேன்.

1945-ம் ஆண்டு முதல் இதுவரையில் 75-க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு திரைக்கதை வசனம் எழுதியிருக்கிறேன். இதில் அபிமன்யூ, ராஜகுமாரி, பராசக்தி உள்ளிட்ட ஏராளமான படங்களும் அடக்கம். எனக்கும், திரைப்படக் கலைஞர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், இசைவாணர்கள், கவிஞர்கள், தொழிலாளர்கள் அனைவருடனும் இருந்த தொடர்புகளையும், இருக்கின்ற தொடர்புகளையும் திரையுலகத்தினர் தெளிவாகப் புரிந்தவர்கள் என்பதை மறந்திருக்க முடியாது.

"கருணாநிதியின் பேரன், பேத்திகள் எல்லாம் சினிமா படம் எடுக்கிறார்களே, எப்படி?' எனக் கேள்வி எழுப்பி ஒரு புத்தகத்தில் கட்டுரை எழுதப்பட்டுள்ளது. ஏ.வி.மெய்யப்ப செட்டியார் திரைப்படம் எடுத்து, பின்னர் அவருடைய மகன்கள் ஏ.வி.எம். முருகன், ஏ.வி.எம். குமரன், ஏ.வி.எம்.பாலசுப்பிரமணியம், ஏ.வி.எம்.சரவணன், அவருடைய மகன் குகன், மருமகள் நித்யா போன்றவர்கள் எல்லாம் திரைப்படத் துறையிலே இருப்பதும்,

நடிகர் சிவாஜிக்குப் பிறகு அவருடைய மகன்கள் ராம்குமார், பிரபு, ராம்குமாரின் மகன் துஷ்யந்த் போன்றவர்கள் திரைப்படத் துறையில் ஈடுபட்டதும், நடிகர் ரஜினி, அவருடைய மகள் ஐஸ்வர்யா, மருமகன் தனுஷ் ஆகியோர் திரைப்படத் துறையில் இருப்பதும், நடிகர் கமல், அவருடைய சகோதரர் சாருஹாசன், மகள் ஸ்ருதி, சுகாசினி, மணிரத்னம், அனுஹாசன் போன்றவர்கள் இந்தத் துறையில் ஈடுபட்டு இருப்பதும், தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரி மற்றும் அவருடைய பிள்ளைகள், ஜீவா, ஜித்தன் ரமேஷ் போன்றவர்கள் இருப்பதும், நடிகர் சிவக்குமார், அவருடைய பிள்ளைகள் சூர்யா, கார்த்தி ஆகியோர் திரைப்படத் துறையில் ஈடுபட்டுள்ளனர். இவையெல்லாம் மற்றவர்களுக்குத் தெரியாமல் போனது வேடிக்கை. அதுமாத்திரம் அல்ல; கடந்த காலத்தில் எத்தனை படத் தயாரிப்பாளர்கள் படங்களைத் தயாரித்து அதனை முடிக்க முடியாமல் தற்கொலை செய்து கொண்டார்கள்; எத்தனை பேர் படம் எடுத்த காரணத்தினாலேயே ஓட்டாண்டியாகி தெருவிலே நின்றார்கள் என்பதையெல்லாம் கவிஞர் கண்ணதாசன் புத்தகமாக எழுதியுள்ளார்.

என் குடும்பத்தில்...:

என் குடும்பத்திலே என்னுடைய பிள்ளைகளோ, பெண்களோ, பேரர்களோ அரசியலிலே ஈடுபட்டால் வாரிசு அரசியல் என்பதற்கும்-திரைப்படத் துறையிலே ஈடுபட்டால் அதற்கு அர்த்தம் கற்பிப்பதற்கும் என்னதான் காரணமோ? ஏன்தான் இந்த நெஞ்செரிச்சலோ? என்று முதல்வர் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.

No comments: