Tuesday, May 24, 2011

சமச்சீர் கல்வி திட்டம் தொடருமா? கல்வியாளர்கள் கருத்து.

ஆட்சி மாற்றம்:    சமச்சீர் கல்வி    திட்டம் தொடருமா?    கல்வியாளர்கள் கருத்து

10-ம் வகுப்பிற்கு சமச்சீர் கல்வி பாடத் திட்டம் இந்த ஆண்டு நடை முறைப்படுத்த வேண்டாம் என்று நர்சரி, பிரைமரி சங்கம் கோரிக்கை வைத்துள்ளது. அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் வருகிற கல்வி ஆண்டு முதல் 1-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை சமச்சீர் பாடத் திட்டம் நடை முறைப்படுத்தப்படுகிறது.

கடந்த ஆண்டு 1 மற்றும் 6-ம் வகுப்பிற்கு சமச்சீர் திட்டம் செயல்படுத்தப்பட்டது. இந்த ஆண்டு மற்ற 8 வகுப்புகளுக்கு இத்திட்டம் விரிவுப்படுத்தப்படுகிறது. இதற்காக 8 கோடி பாடப்புத்தகங்கள் அச்சடிக்கப்பட்டு வருகின்றன. அனைத்து பள்ளிகளும், ஒரே பாடத் திட்டத்தை செயல்படுத்தக் கூடிய சமச்சீர் கல்வி திட்டத்திற்கு பொது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு இருந்தது.

அதே நேரத்தில் சமச்சீர் பாடத் திட்டம் தரம் குறைவாக இருப்பதாகவும், இந்த தரத்தில் இருந்தால் உயர் கல்விக்கான போட்டித் தேர்வுகளில் நம்முடைய மாணவ-மாணவிகள் வெற்றி பெற இயலாது. இதனால் பாடத் திட்டத்தின் தரத்தை உயர்த்த வேண்டும் என தனியார் பள்ளி சங்கங்கள் கோரிக்கை வைத்தன.

ஒரே நேரத்தில் 8 - வகுப்புகளுக்கு சமச்சீர் பாடத் திட்டத்தை அமல் படுத்து வதை தவிர்க்க வேண்டும்.

படிப்படியாக செயல்படுத்த வேண்டும் 10-ம் வகுப்பிற்கு இந்த ஆண்டு நடை முறைப்படுத்த வேண்டாம் என்று தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிக் குலேசன் மேல்நிலைப்பள்ளி சங்க பொதுச் செயலாளர் நந்தகுமார் வலியுறுத்தினார். அவர் மேலும் கூறியதாவது:-

சமச்சீர் பாடத்திட்டத்தில் நிறைய பிழைகள் உள்ளன. உலகத் தமிழ் மாநாட்டில் இடம் பெற்ற கவிதைகள், முன்னாள் முதல் - அமைச்சர் கதைகள் இடம் பெறுகின்றன. மேலும் பாடப்புத்தகமும் வினியோகம் செய்வதில் தாமதம் ஏற்படுவதால் 10-ம் வகுப்பிற்கு இந்த ஆண்டு சமச்சீர் திட்டம் செயல்படுத்த வேண்டாம். அடுத்த ஆண்டு நடை முறைப்படுத்தலாம். சமச்சீர் கல்வி திட்டம், கல்வி கட்டண விவகாரத்தில் பெற்றோர்கள், பள்ளி நிர்வாகிகள், கல்வி அதிகாரிகள் ஆகியோரிடம் முத்தரப்பு பேச்சு வார்த்தை நடத்த வேண்டும் என்று அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவிடம் நாங்கள் கோரிக்கை வைத்தோம்.

இந்த பிரச்சினையில் அவசரம் காட்டாமல் சுமூக தீர்வு காண வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். தி.மு.க. அரசு கொண்டு வந்த சமச்சீர் பாடத்திட்டம் வருகிற கல்வி ஆண்டு முதல் முழுமையாக செயல் படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. தனியார் பள்ளி கல்வி கட்டணம் முறைப்படுத்தப்பட்டு ஒரு சில நாட்களில் அறிக்கை வழங்கப்படுகிறது. இந்த நிலையில் தேர்தல் முடிவு அ.தி.மு.க.வுக்கு அமோக ஆதரவை தேடித் தந்துள்ளது.

அதனால் சமச்சீர் கல்வி திட்டம், பள்ளி கல்வி கட்டணம் நிர்ணயம் போன்றவற்றில் புதிய அரசு என்ன முடிவு எடுக்கப்போகிறது என்று தெரியவில்லை. ஜூன் மாதம் பள்ளி திறப்பதற்கு முன்பாக பள்ளிகளுக்கு சமச்சீர் பாட புத்தகம் வினியோகம் செய்யப்பட வேண்டும்.

புதிய கல்வி கட்டணம் நிர்ணயிக்கப்பட வேண்டும். தி.மு.க. அரசு கொண்டு வந்த இந்த கல்வி திட்டங்களை புதிய அரசு நடை முறைப்படுத்துமா? அல்லது இதில் மாற்றம் செய்து புதிய திட்டத்தை செயல்படுத்துமா? என்பது பெற்றோர்கள் மற்றும் பள்ளி நிர்வாகிகள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை எற்படுத்தி உள்ளது. சமச்சீர் கல்விக்கான பாடப் புத்தகங்கள் அச்சிடப்பட்டு பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டு வருகிறது.

தனியார் பள்ளிகளுக்கு பாடப்புத்தகம் எவ்வளவு வேண்டும் என்ற பட்டியலும் பெறப்பட்டு புத்தகம் அச்சிடப்பட்டு வருகின்றன. இந்த பிரச்சினையைப் புதிய அரசு எடுக்கப் போகிற யுக்தி என்ன என்பதை அனைத்து தரப்பினரும் கல்வியாளரும் உற்று நோக்குகிறார்கள்.

No comments: