Tuesday, May 24, 2011

2014-ம் ஆண்டில் தனித்து ஆட்சி அமைக்க பிரியங்கா அரசியலில் நுழைய வேண்டும்.

2014-ம் ஆண்டில் தனித்து ஆட்சி அமைக்க பிரியங்கா அரசியலில் நுழைய வேண்டும்: காங்கிரஸ் மூத்த தலைவர் வசந்த்சாத்தே வலியுறுத்தல்

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி 2 ஆண்டு முடிந்து 3-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. இந்த நிலையில் 2014-ம் ஆண்டில் காங்கிரஸ் காங்கிரஸ் தனித்து ஆட்சி அமைக்க பிரியங்கா தீவிர அரசியலில் ஈடுபட வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான வசந்த்சாத்தே வலியுறுத்தி உள்ளார்.

86 வயதான அவர் இது தொடர்பாக கூறியதாவது:-

காங்கிரஸ் கட்சியின் முதல் குடும்பத்தை சேர்ந்த சோனியாகாந்தி, ராகுல்காந்தி ஆகியோருடன் பிரியங்காவும் இனி வரும் காலங்களில் மக்களுடன் தீவிர தொடர்பு ஏற்படுத்தி பிரசாரத்தில் ஈடுபட்டால் அடுத்த பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் தனிப் பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்கும்.

சோனியா, ராகுல், பிரியங்கா நாடு முழுவதும் சென்றால் காங்கிரஸ் மறுமலர்ச்சியடைந்து ஒரு பெரும் சக்தியாக மாறும். சோனியாவுக்கு அடுத்தப்படியாக மக்களிடையே பிரியங்காவுக்கு ஆதரவு அதிகமாக உள்ளது.

ஆனால் அவர் தனது சகோதரர் ராகுல்காந்தி ஒதுக்கப்பட்டு விடுவாரோ என்று கருதி தீவிர அரசியலுக்கு வருவதில்லை. கூட்டணி ஆட்சி என்பது பொருந்த வில்லை. இது காங்கிரசுக்கு அவப்பெயரையே தருகிறது.

மாநில கட்சிகள் வளர்ந்து வருவது காங்கிரஸ் உள்பட தேசிய கட்சிகளுக்கு பின்னடைவாகும். எனவே கூட்டணி ஆட்சி என்று இல்லாமல் காங்கிரஸ் தனித்து வென்றிடும் நிலை வரவேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

No comments: