Tuesday, May 24, 2011

சமச்சீர் கல்வியை நிறுத்தி வைக்கும் தமிழக அரசின் உத்தரவுக்கு தடை விதிக்கக் கோரி வழக்கு.


சமச்சீர் கல்வி திட்டத்தை நிறுத்தி வைக்கும் மாணவர் நலனுக்கு எதிரான அதிமுக அரசின் உத்தரவுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் ஷ்யாம் சுந்தர் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில், நிபுணர் குழுவின் பரிந்துரையை ஏற்றே சமச்சீர் கல்வி திட்டம் செயல்படுத்தப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஆண்டு 1 மற்றும் 6ம் வகுப்பில் அறிமுகப்படுத்தப்பட்டு, தற்போது மற்ற வகுப்புகளுக்கும் சேர்த்து 200 கோடி ரூபாய் அளவுக்கு புத்தகங்கள் அச்சடிக்கப்பட்டுள்ளதாக மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சமச்சீர் கல்வி திட்டத்தை நிறுத்தி வைக்கும் அதிமுக அரசின் உத்தரவு மாணவர் நலனுக்கு எதிரானது என்றும், அரசின் உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த பொதுநல மனு 25.05.2011 அல்லது 26.05.2011 அன்று விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய மனுதாரரின் வழக்கறிஞர் சக்திவேல்,

சமச்சீர் கல்வி முறை திட்டத்தை நிறுத்தி வைத்ததைத்தொடர்ந்து நாங்கள் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளோம். சமச்சீர் கல்வி முறை திட்டத்தை நிறுத்தி வைப்பதினால் மாணவர்கள் மத்தியிலும், பெற்றோர்கள் மத்தியிலும் நிறைய குழப்பங்கள் ஏற்படுகிறது. இதனால் மாணவர்கள் சமுதாயத்தினர் பாதிக்கப்படுகின்றனர். இதனைத் தொடர்ந்து சமச்சீர் கல்வி முறை திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதற்காக மனுதாக்கல் செய்துள்ளோம் என்றார்.



No comments: