Tuesday, May 24, 2011

சமச்சீர்கல்வித் திட்டம் : மார்க்சிஸ்ட் வேண்டுகோள்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலர் ஜி. ராமகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

’’தமிழகத்தில் சமச்சீர் கல்வியை அமலாக்க வேண்டும் என மாணவர்கள், ஆசிரியர்கள், கல்வியாளர்கள் மற்றும் ஜனநாயக இயக்கங்கள் நீண்ட காலமாகக் குரல் கொடுத்து வந்துள்ளனர். இப்பின்னணியில்தான், 2010-ம் ஆண்டு தமிழ்நாடு அரசு சமச்சீர்கல்வியை ஏற்றுக்கொண்டு முதல் கட்டமாக முதல் வகுப்பு மற்றும் ஆறாம் வகுப்புகளுக்கு புதிய பொதுப்பாடத்திட்டத்தை உருவாக்கி அமல்படுத்தியது.

இந்நிலையில், புதிதாகப் பொறுப்பேற்றுள்ள தமிழ்நாடு அரசு, சமச்சீர்கல்வி அமலாக்கத்தை ஏற்றுக் கொள்வதாகவும், கூடவே கல்வித் தரத்தையும் உயர்த்த வேண்டும் என வலியுறுத்தி அதற்காக வல்லுனர்குழு அமைக்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

ஆனால், இந்தக் கல்வியாண்டில் சமச்சீர்கல்வி முறையை நிறுத்தி வைப்பதாகவும் பழைய பாடப்புத்தகங்களையே பின்பற்ற வேண்டுமெனவும் இப்பின்னணியில் பாடப்புத்தகங்கள் அச்சிட வேண்டியிருப்பதால் பள்ளிகள் திறக்கப்படுவதை ஜூன் 15-ஆம் தேதிக்குத் தள்ளி வைத்திருப்பதாகவும் தமிழக அரசு அறிவித்துள்ளது.

கல்வித்தரத்தை உயர்த்துவதும் பாடப்புத்தகத்தில் உள்ள குறைபாடுகளைக் களைவதும் வரவேற்கத்தக்கவையே.

ஆனால் இதற்காக சமச்சீர் கல்வி முறையை இந்த ஆண்டு நிறுத்தி வைத்திருப்பதும் ரூ. 200 கோடிக்கு மேல் செலவிட்டு அச்சிடப்பட்டுள்ள பாடப்புத்தகங்கள் முழுமையாகக் கைவிடப்படுவதும் மாணவர்கள் மததியில் குழப்பத்தையும், ஆசிரியர்கள்-கல்வியாளர்கள் மத்தியில் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

எனவே சமச்சீர் கல்வி முறையை இந்த ஆண்டும் அமலாக்கிக் கொண்டே கல்வித்தரத்தை உயர்த்துவதற்கான பணிகளை நிறைவேற்றுமாறும், பாடப்புத்தகங்களில் உள்ள குறைபாடுகளைக் களையும் வகையில் சில பாடங்களை நீக்கியோ அல்லது பிழைதிருத்தம் செய்தோ அரசு உத்தரவு மூலம் சரி செய்யுமாறும் வேண்டுகிறோம்.

மேலும், தனியார் கல்விக் கட்டணக் கொள்ளையிலிருந்து மாணவர்களையும், பெற்றோர்களையும் பாதுகாக்க உறுதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறும் கேட்டுக் கொள்கிறோம்’’ என்று தெரிவித்துள்ளார்.

No comments: