Tuesday, May 24, 2011

உயிர் தப்பிய அமைச்சர் சிவபதி.


உயிர் தப்பிய அமைச்சர் சிவபதி

திருச்சியில் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் பிறந்த நாளையொட்டி அவரது சிலைக்கு அரசு சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி இன்றுகாலை 6.30 மணிக்கு நடந்தது. இதில் அமைச்சர்கள் மரியம்பிச்சை, சிவபதி ஆகியோர் பங்கேற்று பெரும்பிடுகு முத்தரையர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

அதன்பிறகு சென்னையில் நடைபெறும் எம்.எல்.ஏக்கள் பதவி ஏற்புவிழாவில் பங்கேற்பதற்காக தனித்தனி காரில் புறப்பட்டனர். முதலில் சென்ற அமைச்சர் மரியம்பிச்சையின் கார் பாடாலூர் அருகே லாரி மீது மோதி விபத்தில் சிக்கியதில் மரியம்பிச்சை சம்பவ இடத்திலேயே மரணம் அடைந்தார்.

பின்னால் தனிக்காரில் வந்ததால் அமைச்சர் சிவபதி விபத்தில் இருந்து தப்பினார். விபத்து நடந்த தகவல் கிடைத்ததும் அங்கு விரைந்த அவர் உடனடியாக மீட்பு பணியை முடுக்கிவிட்டார்.

மரியம்பிச்சையின் உடலை திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல ஏற்பாடு செய்தார். அவரும் திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று பிரேத பரிசோதனை விரைந்து நடைபெற நடவடிக்கை எடுத்தார். அங்கு திரண்டு கண்ணீர் விட்ட அ.தி.மு.க.வினருக்கு அமைச்சர் சிவபதி ஆறுதல் கூறினார்.

அமைச்சர் காரில் இருந்த 6 பேர் உயிர் தப்பினர்
.

அமைச்சர் மரியம்பிச்சை காரில் டிரைவர் ஆனந்த் அமைச்சரின் நேர்முக உதவியாளர் மகேஷ்வரன், அ.தி.மு.க. நிர்வாகிகள் முன்னாள் வட்ட செயலாளர் கார்த்திகேயன், ஆயில்மில் சீனிவாசன், வெங்கடேசன், சரவணன் ஆகியோர் இருந்தனர்.
விபத்தில் அமைச்சர் மரியம்பிச்சை சம்பவ இடத்திலேயே பலியானார். காரில் இருந்த 6 பேரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். மகேஷ்வரன், கார்த்திகேயன், வெங்கடேசன் ஆகியோர் லேசான காயத்துடன் திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

விபத்து நடந்தது எப்படி?

மரியம்பிச்சையின் கார் டிரைவரை விசாரணைக்காக பாடாலூர் போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் சென்னை முகப்பேறு பகுதியை சேர்ந்த வெங்கடேசன் என்பவரின் மகன் ஆனந்த்(35) என தெரிய வந்தது.

போலீசாரிடம் அளித்துள்ள வாக்கு மூலத்தில் டிரைவர் கூறி இருப்பதாவது:-

அமைச்சர் மரியம்பிச்சையின் கார் இன்று காலை 7 மணிக்கு பாடாலூர் அருகே பெருமாள்மலை என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தது. அப்போது முன்னால் இடதுபுறமாக ஒரு கண்டெய்னர் லாரி சென்றது. இதனால் லாரியை முந்தி செல்வதற்காக ஹாரன் அடித்தேன். இதில் கண்டெய்னர் லாரி டிரைவர், லாரியை இடது புறமாக திருப்புவதற்கு பதிலாக வலது புறமாக திருப்பினார்.

இதனால் கார், எதிர்பாராத விதமாக கண்டெய்னர் லாரியின் பின்னால் மோதியது. இதில் முன்பகுதியில் உட்கார்ந்திருந்த அமைச்சர் மரியம்பிச்சை இருக்கை யிலேயே இறந்தார். விபத்தை கண்டதும், கண்டெய்னர் லாரி டிரைவர் வண்டியை நிறுத்தாமல் வேகமாக ஓட்டி சென்று விட்டார்.

இவ்வாறு டிரைவர் போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.

No comments: