Tuesday, May 24, 2011

டெல்லியில் கருணாநிதியுடன் குலாம் நபி ஆசாத் சந்திப்பு.


திமுக தலைவர் கருணாநிதியை காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆஸாத் இன்று டெல்லியில் சந்தித்துப் பேசினார்.

ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் கைதாகி சிறையில் இருக்கும் தனது மகள் கனிமொழியை சந்திப்பதற்காக கருணாநிதி டெல்லி வந்துள்ளார். திகார் சிறையில் நேற்று அவர் கனிமொழியையும், முன்னாள் மத்திய அமைச்சர் ராசா, கலைஞர் டிவி நிர்வாக இயக்குனர் சரத்குமார் ஆகியோரை சந்தித்துப் பேசினார்.

கனிமொழி கைது நடவடிக்கையாலும், தமிழகத்தில் ஏற்பட்ட தேர்தல் தோல்வியாலும் திமுக-காங்கிரஸ் இடையிலான உறவு சீர்குலைந்துள்ள நிலையில், காங்கிரஸ் கட்சியின் தமிழக விவகாரங்களுக்கான பொறுப்பாளரான ஆஸாத், கருணாநிதியை அவர் தங்கியிருக்கும் ஹோட்டலுக்குச் சென்று இன்று சந்தித்தார்.

''உண்மையை உணர்ந்துள்ளார் கருணாநிதி, உறவு பாதிக்கப்படாது'':

இந்தச் சந்திப்புக்குப் பின் நிருபர்களிடம் பேசிய குலாம் நபி, 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் கனிமொழி கைது செய்யப்பட்டதால் திமுக-காங்கிரஸ் உறவில் எந்த பாதிப்பும் ஏற்படாது. இந்த சட்ட விவகாரத்தில் மத்திய அரசு எந்த வகையிலும் தலையிடவில்லை, தலையிடாது.

ஒரு பெண் என்ற வகையில் கனிமொழி சிறையில் இருப்பது காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியையும் வருத்தமடையச் செய்துள்ளது. ஆனால், இதில் யாரும் ஏதும் செய்ய முடியாது என்பதே உண்மை.

இந்த விவகாரத்தை உச்ச நீதிமன்றம் நேரடியாக கண்காணித்து வருவதையும், இதில் மத்திய அரசுக்கு எந்த பங்கும் இல்லை என்பதையும் கருணாநிதியும் நன்றாகவே உணர்ந்து வைத்துள்ளார். கருணாநிதி ஒரு மூத்த அரசியல் தலைவர் மட்டுமல்ல, அரசியலை மிகச் சிறப்பாக உணர்ந்தவர். இந்த விஷயத்திலும் அவர் உண்மை நிலையை புரிந்து வைத்திருப்பது மகிழ்ச்சி தருகிறது. இதில் காங்கிரசும் ஏதும் செய்ய முடியாது என்பதையும் அவர் உணர்ந்துள்ளார் என்றார்.

ஜெயந்தி நடராஜனும் சந்திப்பு:

அதேபோல காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஜெயந்தி நடராஜனும் கருணாநிதியை சந்தித்துப் பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திமுக-காங்கிரஸ் இடையிலான உறவு அப்படியே உள்ளது. இந்த விவகாரத்தை சட்டரீதியாக எதிர்கொள்வோம் என திமுக கூறியுள்ளது. நான் கலைஞரை மரியாதை நிமித்தமாகவே சந்தித்தேன்.

கனிமொழி நலமாக இருப்பதாகவும், இந்த விவகாரத்தை சட்டரீதியில் எதிர்கொள்ள அவர் தயாராக இருப்பதாகவும் கருணாநிதி என்னிடம் தெரிவித்தார் என்றார்.

நேற்றிரவு கருணாநிதியை உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் மற்றும் இணை - அமைச்சர் வி.நாராயணசாமி ஆகியோரும் சந்தித்துப் பேசியது குறிப்பிடத்தக்கது.

நாராயணசாமி பொறுப்பு வகிக்கும் பெர்சனல் துறையின் கீழ் தான் சிபிஐ உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று கனிமொழியை முன்னாள் துணை முதல்வர் ஸ்டாலின் டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் சந்தித்துப் பேசியதும் குறிப்பிடத்தக்கது.

No comments: