Tuesday, May 24, 2011

சமச்சீர் கல்வி திட்டம் ரத்து ; தமிழக அரசு முடிவுக்கு பெற்றோர், மாணவ - மாணவிகள் வரவேற்பு.

சமச்சீர் கல்வி திட்டம் ரத்து;   தமிழக அரசு முடிவுக்கு பெற்றோர்,   மாணவ-மாணவிகள் வரவேற்பு

சமச்சீர் கல்வி திட்டத்தை நிறுத்தி வைத்து தமிழக அமைச்சரவை முடிவு எடுத்தது அறிவித்தது. தமிழக அரசின் இந்த முடிவுக்கு பெற்றோர்களும், மாணவ - மாணவி களும் வரவேற்பு தெரிவித்து உள்ளனர். கோவை ஸ்ரீசவுடேஸ்வரி வித்யாலாய மெட்ரிக்குலேசன் மேல்நிலைப் பள்ளியில் முதல் மாணவி எஸ். பிரார்த்தனா கூறியதாவது:-

சமச்சீர் கல்வி திட்டம் அறிமுகப்படுத்துவது தள்ளிப் போடப்பட்டுள்ள செய்தி மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது. எல்லோருக்கும் பொதுவான பாடத் திட்டம் என்பதில் உடன்பாடில்லை. தேர்வுகளில் மிக எளிதாக அதிக மதிப்பெண்களை பெற முடிந்தாலும், கல்வியின் தரம் எதிர்பார்த்தப்படி இல்லை. மெட்ரிக்குலேஷன் முறையை அமுல்படுத்தப்படுவதையே நான் வர வேற்கிறேன்.

8-ம் வகுப்பு மாணவி எஸ்.நிருபமா:-

எங்கள் வகுப்பு மாணவர்களிடம் சமச்சீர் கல்வி திட்டம் எப்படியிருக்குமோ என்று ஒரு பதட்டமான மனநிலை இருந்தது. சமச்சீர் கல்வி திட்டம் இந்த வருடம் நிறுத்தி வைக்கப்பட்ட செய்தி கேட்டவுடன் அனைவரும் நிம்மதி பெருமூச்சு விட்டோம். இந்த வருடம் பல புதிய அறிவு தகவல்களை நாங்கள் பெற முடியும். இது பொதுக்கல்வி திட்டத்தில் இல்லை. அது மெட்ரிக் குலேஷன் பள்ளி பாடத் திட்டத்தை ஒப்பிடுகையில் மிக குறைந்த அளவே அறிவை கொடுப்பதாக உள்ளது.

வியாபாரி எச்.ஸ்ரீதர்:-

எந்த பாடத்திட்டமாக இருந்தாலும் அது மாணவர்களுக்கு அதிக அளவில் அறிவை அளிக்கும் திட்டமாக இருக்க வேண்டும். சமச்சீர் கல்வி திட்டம் கல்வியின் தரத்தை உயர்த்துவதாக இருந்திருந்தால் எல்லா பெற்றோர்களும் அதனை வரவேற்று இருப்போம். ஆனால் அதற்கு மாறாக அது கல்வியின் தரத்தை கீழே கொண்டு வந்து விட்டது.

டாக்டர் மன்வீண்கவுர்:-

பாடத்திட்டத்தின் சரித்திரம், பூகோளம் போன்ற பாடங்களுக்கு மட்டுமே அதிக அளவு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழ் அல்லாத பிற மொழிகளை இரண்டாம் மொழியாக கற்க வாய்ப்பில்லாமல் உள்ளது. எனது மகளின் பல நண்பர்கள் தமிழை தவிர வேறு மொழி இத்திட்டத்தில் கற்றுக் கொள்ள வாய்ப்பு இல்லாததால் சி.பி.எஸ்.இ. பள்ளிகளுக்கு மாறி செல்ல தொடங்கி விட்டனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

No comments: