Tuesday, May 24, 2011

தமிழக சுற்றுச்சூழல்துறை அமைச்சர் மரியம் பிச்சை சாலை விபத்தில் அகால மரணம் - ஜெயலலிதா அனுதாபம்.


தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சராக பதவியேற்றுள்ள மரியம் பிச்சை, இன்று காலை திருச்சி அருகே நடந்த சாலை விபத்தில் உயிரிழந்தார்.

சமீபத்தில் பதவியேற்ற முதல்வர் ஜெயலலிதா அமைச்சரவையில் சுற்றுச்சூழல் துறை அமைச்சராக பொறுப்பேற்றவர் என்.மரியம் பிச்சை. திருச்சி மேற்குத் தொகுதியில் முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவை எதிர்த்துப் போட்டியிட்டு வெற்றி பெற்றார். நேருவை வீழ்த்தியதால் இவரை பதவி தேடி வந்தது.

இன்று எம்.எல்.ஏக்கள் பதவியேற்பு விழா சட்டசபையில் நடைபெறுகிறது. இதில் பங்கேற்பதற்காக மரியம் பிச்சை, காலையிலேயே தயாராகி விட்டார்.

பெரும்பிடுகு முத்தரையர் சிலைக்கு மாலை

காலையில் ஒத்தகடையில் உள்ள பெரும்பிடுகு முத்தரையர் சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்டார். ஏராளமான அதிமுகவினர் இதில் பங்கேற்றனர்.

அந்த நிகழ்ச்சியை முடித்துக் கொண்ட பின்னர் அப்படியே சென்னைக்குக் கிளம்பினார்.

அமைச்சருடன் அவரது நண்பர் கார்த்திகேயன், உதவியாளர் வெங்கடேசன் உள்ளிட்ட சிலரும் உடன் இருந்தனர்.



இவர்களது கார், பெரம்பலூர் அருகே பாடாலூர் என்ற இடத்தில் வந்தபோது முன்னால் போய்க் கொண்டிருந்த டிப்பர் லாரியை முந்த முயன்றதாக தெரிகிறது. அப்போது திடீரென அந்த டிப்பர் லாரி வலது புறமாக திரும்பியுள்ளது.

இதை எதிர்பாராததால், கார், டிப்பர் லாரி மீது பலமாக மோதியது. இதில் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்து போனார் மரியம் பிச்சை. அவருடன் இருந்தவர்களில் 2 பேருக்கு படுகாயம் ஏற்பட்டது. ஆனால் டிரைவர் ஆனந்தனுக்கு ஒரு காயமும் ஏற்படவில்லை. அவர் அப்படியே உயிர் தப்பினார்.

வழியில் வந்த அமைச்சர் சிவபதி உதவினார்

இந்த நிலையில் அந்த சாலையில் சென்னையை நோக்கி விளையாட்டுத் துறை அமைச்சர் சிவபதி வேறு ஒரு காரில் வந்து கொண்டிருந்தார். விபத்து நடந்ததைப் பார்த்த அவர் காரிலிருந்து இறங்கி மரியம் பிச்சையின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்ப உதவினார். பின்னர் அவரும் திருச்சி திரும்பிச் சென்றார்.

விபத்தில் மரியம் பிச்சை இறந்த தகவல் பரவியதும் திருச்சியில் கடைகள் அடைக்கப்பட்டன. அதிமுகவினர் அரசு மருத்துவமனையில் குவி்ந்தனர். அதிமுக கொடிகள் அரைக் கம்பத்தில் பறக்க விடப்பட்டன.

முதல் முறையாக பதவிக்கு வந்தவர்

மரியம் பிச்சை முதல் முறையாக எம்.எல்.ஏ. தேர்தலில் நின்று வெற்றி பெற்றவர். முதல் முறையிலேயே அவர் அமைச்சர் பதவிக்கும் உயர்ந்தவர்.

மரியம்பிச்சை திருச்சி சங்கிலியாண்டபுரத்தை சேர்ந்தவர். பி.ஏ. வரலாறு படித்துள்ளார். இவருக்கு பாத்திமாகனி என்ற மனைவியும், ஆசிக் மீரா, ராஜ்முகமது, அமீர்முகமது என்ற 3 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர்.

60 வயதான மரியம் பிச்சை ஆரம்பத்தில் திரைப்பட விநியோகஸ்தராக இருந்தவர். அரசுக்குச் சொந்தமான கலைவாணர் அரங்கத்தை குத்தகைக்கு எடுத்து மரியம் தியேட்டர் என்ற பெயரில்நடத்தி வந்தார்.

திருச்சி மாநகர அதிமுக அமைப்பாளராக செயல்பட்ட இவர் 27வது வார்டு கவுன்சிலராக இருந்தார். தேர்தலில் நிற்பதற்காக அப்பதவியை ராஜினாமா செய்து விட்டு சட்டசபைத் தேர்தலில் போட்டியிட்டார்.

பாலக்கரையில் உடல் அடக்கம்

அமைச்சர் மரியம் பிச்சையின் உடல் இன்று மாலை பாலக்கரை பள்ளிவாசலில் அடக்கம் செய்யப்படுகிறது.



முதல் - அமைச்சர் ஜெயலலிதா அனுதாபம்.

முதல்-அமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறி இருப்பதாவது:-

திருச்சி மாநகர் மாவட்ட கழக முன்னாள் செயலாளரும், சுற்றுச்சூழல் துறை அமைச்சருமான அன்புச்சகோதரர் மரியம்பிச்சை இன்று காலை எதிர்பாராத விதமாக நடைபெற்ற சாலை விபத்தில் அகால மரணமடைந்து விட்டார் என்ற செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியுற்றேன்.

கழகத்தின் மீதும், கழகத்தலைமையின் மீதும் மிகுந்த விசுவாசம் கொண்டு ஆரம்ப காலம் முதல் கழகப்பணிகளில் ஈடுபட்டு வந்த அன்புச்சகோதரர் மரியம்பிச்சை, பொன்மலை பகுதிக் கழக செயலாளராகவும், அரியமங்கலம் மண்டல குழு தலைவராகவும், மூன்று முறை திருச்சி மாநகராட்சி மாமன்ற உறுப்பினராகவும் திறம்பட பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆற்றல் படைத்த கழகச் செயல்வீரர் மரியம்பிச்சையின் இழப்பு ஈடுசெய்ய முடியாது. அன்புச் சகோதரர் மரியம்பிச்சையை இழந்து ஆற்றொணாத் துயரத்தில் ஆழ்ந்திருக்கும் அவரது மனைவி மற்றும் குடும் பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனு தாபத்தையும் தெரிவித்துக் கொள்வதோடு, அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.


No comments: