Tuesday, May 24, 2011

ஸ்பெக்ட்ரம் வழக்கு : 30-ந்தேதிக்கு ஒத்திவைப்பு - ஜெயிலில் கனிமொழிக்கு பழம், ஜூஸ் கொடுக்க தடை .

ஸ்பெக்ட்ரம் வழக்கு: கனிமொழி ஜாமீன்மனு விசாரணை; 30-ந்தேதிக்கு ஒத்திவைப்பு

ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பாக கனிமொழி எம்.பி. கடந்த வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டார். டெல்லி திகார் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள அவர் தனக்கு ஜாமீன் வழங்கக் கோரி டெல்லி ஐகோர்ட்டில் நேற்று மனு தாக்கல் செய்தார்.

கனிமொழி தன் மனுவில், என் மீதான குற்றச்சாட்டுக்கள் தவறானவை கலைஞர் டி.வி.யில் நான் வெறும் பங்குதாரர்தான். வேறு எந்த செயல்பாட்டுக்கும் எனக்கும் தொடர்பு இல்லை.

எனக்கு சி.பி.ஐ. கோர்ட்டில் ஜாமீன் மறுத்தது சரி அல்ல. பணபரிவர்த்தனையில் நான் பலன் பெறவில்லை. எனக்கு பள்ளி செல்லும் வயதில் மகன் உள்ளான். அவனை நான்தான் கவனிக்க வேண்டும். எனவே மனிதாபிமான அடிப்படையில் எனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.

டெல்லி ஐகோர்ட்டில் இன்று கனிமொழியின் ஜாமீன் மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. பிறகு இந்த விசாரணையை வரும் 30-ந் தேதிக்கு ஐகோர்ட்டு நீதிபதி அஜீத் பரிகோகி ஒத்தி வைத்தார்.

கனிமொழி மனு மீது உரிய பதில் அளிக்க சி.பி. ஐ.க்கு நோட்டீஸ் அனுப்பவும் நீதிபதி உத்தரவிட்டார். கனிமொழியிடம் நடத்தப்பட்ட விசாரணை விவரங்கள் முழுவதையும் 30-ந் தேதி தாக்கல் செய்ய வேண்டும் என்று சி.பி.ஐ.க்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

ஜாமீன் மனு மீதான விசாரணை ஒத்தி வைக்கப்பட்ட காரணத்தால் கனிமொழி இன்னும் ஒரு வாரம் திகார் ஜெயிலில் இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

கனிமொழி போலவே, கலைஞர் தொலைக்காட்சி நிர்வாக இயக்குனர் சரத்குமாரும் நேற்று ஜாமீன் கோரி மனு செய்திருந்தார். அவரது மனுவும் இன்று விசாரணைக்கு வந்தது. அந்த மனு மீதான விசாரணையும் வரும் 30-ந் தேதிக்கு நீதிபதி அஜீத் ஒத்தி வைத்துள்ளார்.


திகார் ஜெயிலில் கனிமொழிக்கு பழம் - ஜூஸ் கொடுக்க தடை

தி.மு.க. தலைவர் கருணாநிதி நேற்று மாலை டெல்லி திகார் ஜெயிலுக்கு சென்று கனிமொழி, ஆ.ராசா, சரத்குமார் ஆகியோரை சந்தித்துப் பேசினார். அப்போது கனிமொழியிடம் ஒரு பாக்கெட் உலர் பழ வகைகள் மற்றும் ஒரு பாட்டில் ஜூஸ் கொடுக்கப்பட்டது.

கருணாநிதி ஜெயிலில் இருந்து புறப்பட்டுச் சென்றதும் கனிமொழி அந்த உலர் பழங்களையும், ஜூஸ் பாட்டிலையும் தன்னுடன் எடுத்துச் செல்ல தயாரானார். ஆனால் ஜெயில் அதிகாரிகள் அதற்கு அனுமதிக்கவில்லை. உலர் பழங்களையும், ஜூசையும் அவர்கள் தங்கள் வசம் எடுத்துக் கொண்டனர். இது குறித்து திகார் ஜெயில் சட்ட அதிகாரி சுனில் குப்தா கூறுகையில்,

சிறை சட்ட விதிகளின் படி, பார்வையாளர்கள் கொடுக்கும் எந்த பொருளையும் கைதிகள் தங்கள் அறைக்கு எடுத்துச் செல்லக் கூடாது. கோர்ட்டு அனுமதி கொடுக்கும் பட்சத்தில் உணவு மட்டும் கொண்டு செல்லலாம் என்றார். அவர் மேலும் கூறுகையில், கனிமொழி விஷயத்தில், அவரை சந்திக்க வரும் பார்வையாளர்கள் கொடுக்கும் உணவை கனிமொழி எடுத்துச் செல்லலாம் என்று கோர்ட்டு எந்த சிறப்பு அனுமதியும் கொடுக்க வில்லை.

எனவே கனிமொழி பழம், ஜூஸ் கொண்டு செல்ல அனுமதிக்கப்படவில்லை என்றார். திகார் ஜெயில் டைரக்டர் ஜெனரல் நீரஜ்குமார் கூறு கையில், ஜெயிலுக்குள் யாரும் வி.ஐ.பி. அல்ல. வி.ஐ.பி.க்கள் கைதிகளாக வரும் போது கோர்ட்டு அனுமதி இல்லாமல் எந்தவித சலுகையும் கொடுக்க மாட்டோம் என்றார். முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசாவுக்கு வாரத்துக்கு 2 நாட்கள் வீட்டு உணவை கொடுக்கலாம் என்று கோர்ட்டு அனுமதி கொடுத்துள்ளது. அதுவும் கறி மற்றும் பழ வகைகள் இல்லாமல் கொடுக்க உத்தர விடப்பட்டுள்ளது.

No comments: