Tuesday, May 24, 2011

ஐஐடி, ஐஐஎம் நிறுவனங்கள் சர்வதேச தரத்துக்கு இணையாக இல்லை : ஜெய்ராம் ரமேஷ் குற்றச்சாட்டு.


நாட்டின் முன்னணி கல்வி மையங்களான ஐஐடி மற்றும் ஐஐஎம்-கள் சர்வதேச தரத்தில் இல்லை என்று மத்திய சுற்றுச் சூழல்துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் கூறினார்.

தில்லியில் திங்கள்கிழமை நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஐஐடி, ஐஐஎம்களில் கல்வித் தரம் சிறப்பாக உள்ளது என்று குறிப்பிட்டார். ஆனால் அது சர்வதேச தரத்துக்கு இணையாக இல்லை என்று சுட்டிக்காட்டினார். இத்தகைய கருத்தை தெரிவித்துள்ள ஜெய்ராம் ரமேஷும், மும்பையில் உள்ள ஐஐடி-யின் முன்னாள் மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஐஐடி மையங்களில் குறிப்பிடத்தக்க ஆராய்ச்சி ஏதேனும் உருவாகியுள்ளதா? இதிலிருந்தே அது சர்வதேச தரத்துக்கு இணையானதாக உயரவில்லை என்பதும், அங்குள்ள ஆசிரியர்களின் போதிக்கும் திறனும் வளரவில்லை என்பதும் தெரிகிறது.

இவ்விரு கல்வி மையங்களும் சர்வதேச அளவில் பிரபலமாகத் திகழ்வதற்கு அங்குள்ள மாணவர்களே காரணம். அங்குள்ள ஆராய்ச்சி மையமோ அல்லது ஆசிரியர்களோ காரணமல்ல என்று அவர் குறிப்பிட்டார்.

அரசு சார்ந்த ஆய்வு மையங்கள் திறமையான இளைஞர்களை ஈர்க்கத் தவறிவிடுகின்றன. இதற்குக் காரணம் அவை அரசு நிறுவனங்களாக இருப்பதுதான். இதைக் கருத்தில்கொண்டே ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்துடன் இணைந்து தேசிய கடல்சார் பல்லுயிர் பெருக்க மையம் (பயோடைவர்சிடி) ஒன்றை குஜராத் மாநிலம் ஜாம் நகரில் அமைக்க முடிவு செய்யப்பட்டது. சர்வதேச தரத்திலான ஆராய்ச்சி மையத்தை அரசு தன்னிச்சையாக ஏற்படுத்த முடியாது என்பதால்தான் தனியார் நிறுவனத்துடன் சேர்ந்து அமைக்க முடிவு செய்யப்பட்டது என்றார் அவர்.

ரிலையன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து உருவாக்குவதில் இப்போது உரசல் ஏற்பட்டதாகக் கூறப்படுவது பற்றி கேட்டதற்கு, வாழ்க்கையே மிகப் பெரிய உரசல்களை உள்ளடக்கியதுதான். ஆனால் அரசாங்கத்தால் சர்வதேச தரத்திலான ஆராய்ச்சி மையத்தை ஏற்படுத்த முடியாது என்பதுதான் யதார்த்தமான உண்மை. அத்துடன் அரசு ஏற்படுத்தும் ஆராய்ச்சி மையம் திறமையானவர்களை தக்க வைத்துக் கொள்ளாது என்பதும் உண்மை. அத்துடன் திறமையானவர்களை அரசு ஆராய்ச்சி மையம் ஊக்குவிக்காது என்பதாலேயே வித்தியாசமாக யோசித்து தனியார் கூட்டுடன் இத்தகைய மையத்தை ஏற்படுத்த முயற்சித்தோம். ஆராய்ச்சி மையத்தை எவ்விதம் நடத்த வேண்டும் என்பதற்காக இத்தகைய முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இதற்காக ரிலையன்ஸ் இண்டஸ்டீஸýடன் ஒப்பந்தம் செய்யப்பட்டது என்று குறிப்பிட்டார். இந்த மையம் நமது கடல்சார் பல்லுயிர் பெருக்கத்தை காப்பதற்கான ஆராய்ச்சிகளை மட்டுமே பிரத்யேகமாக மேற்கொள்ளும் என்றார் ஜெய்ராம் ரமேஷ்.

ஜெய்தாபூர் அணுமின் நிலைய திட்டம் குறித்து தில்லி உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ஏ.பி.ஷாவின் அணுகுமுறைகள் முற்றிலும் அறிவியல் ரீதியில் இல்லை என்று குறிப்பிட்டார். ஜெய்தாபூர் அணு மின் திட்டத்தில் அனைத்து பாதுகாப்பு முறைகளும் பின்பற்றப்படவில்லையெனில் அது மிகப் பெரிய குழப்பத்துக்கு வழிவகுக்கும் என்று ஏ.பி. ஷா குறிப்பிட்டிருந்தார்.

ஜெய்தாபூர் அணுமின் நிலையம் அமைப்பது தொடர்பான மக்கள் ஆணையத்துக்கு ஷா தலைவராக உள்ளார். என்ரான் மின் நிலையம் நிதி நெருக்கடியால் பிரச்னையை சந்தித்தது, ஆனால் ஜெய்தாபூர் அணு மின் நிலையம் பாதுகாப்பு பிரச்னையால் பெரும் விளைவுகளை ஏற்படுத்தும் என்று ஷா கருத்து தெரிவித்திருந்தார்.இந்த அணுமின் திட்டம் அவசர அவசரமாக மேற்கொள்ளப் படுவதாக அவர் குற்றம் சாட்டியிருந்தார்.

No comments: