Tuesday, May 24, 2011

மூத்த தமிழ்ப் பத்திரிக்கையாளர் சின்னக் குத்தூசி மாரடைப்பால் மரணம்.


தமிழகத்தின் மூத்த பத்திரிக்கையாளரும், திராவிட இயக்கத்தின் தனிப்பெரும் சிந்தனையாளருமான எழுத்தாளர் சின்னக்குத்தூசி எனப்படும் தியாகராஜன் இன்று காலை மாரடைப்பால் மரணமடைந்தார்.

77 வயதான சின்னக்குத்தூசி உடல்நலம் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். உடல் நலன் குன்றியிருந்த நிலையிலும் கூட அவர் தொடர்ந்து அரசியல் கட்டுரைகளை எழுதி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சின்னக்குத்தூசியின் உடல் நலம் குறித்த விசாரிக்க திமுக தலைவர் கருணாநிதியும் நேரில் வந்து விசாரித்து விட்டுச் சென்றிருந்தார். இதேபோல பல்வேறு தலைவர்கள், எழுத்தாளர்கள், பத்திரிக்கையாளர்களும் மருத்துவமனைக்குச் சென்று சின்னக் குத்தூசியின் உடல் நலம் விசாரித்தனர்.

மறைந்த சின்னக்குத்தூசியை கடந்த 15 ஆண்டுகளாக நக்கீரன் ஆசிரியர் கோபால் சிறந்த முறையில் கவனித்து வந்தார். சின்னக் குத்தூசியின் உடல் நலம் பாதிக்கப்பட்டபோதும் கூட அவர்தான் மருத்துவமனையில் சேர்த்து முழு சிகிச்சைகளையும் பார்த்து வந்தார்.

சின்னக்குத்தூசி மறைவு : மு.க.ஸ்டாலின் அஞ்சலி















மறைந்த சின்னக் குத்தூசியின் உடல் ராயப்பேட்டையில் உள்ள நக்கீரன் பத்திரிக்கை அலுவலகத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு திமுக தலைவர் கருணாநிதி, பொருளாளர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.

No comments: