Tuesday, May 24, 2011

பிளஸ்-2 விடைத்தாள் நகல் கேட்டு 75 ஆயிரம் பேர் விண்ணப்பம்: ஜூன் 2-வது வாரத்தில் கிடைக்கும்.

பிளஸ்-2 விடைத்தாள் நகல் கேட்டு 75 ஆயிரம் பேர் விண்ணப்பம்: ஜூன் 2-வது வாரத்தில் கிடைக்கும்

பிளஸ்-2 தேர்வு முடிவு கடந்த 14-ந்தேதி வெளியானது. 7.5 லட்சம் பேர் தேர்வு எழுதினர். தேர்வு எழுதியவர்களில் மதிப்பெண் குறைவாக இருப்பதாக கருதபவர்கள் விடைத்தாள் நகல் பெற்றுக்கொள்ள தேர்வுத்துறை ஏற்பாடு செய்துள்ளது.

விடைத்தாள் நகல் பெற விரும்புவர்கள் அதற்கான விண்ணப்பத்தை பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும். 16-ந்தேதி முதல் விடைத்தாள் நகல் பெறுவதற்கு விண்ணப்பம் வழங்கப்பட்டது. தமிழ்நாடு முழுவதும் விடைத்தாள் நகல் கேட்டு மாணவ- மாணவியர்கள் விண்ணப்பித்தனர்.

அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அலுவலகத்தில், மாவட்ட கல்வி அலுவலகத்தில் விண்ணப்பங்கள் பூர்த்தி செய்து பெறப்பட்டன. தமிழகம் முழுவதும் விடைத்தாள் நகல் கேட்டு 75 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.

தாங்கள் எதிர்பார்த்த மதிப்பெண்ணை விட குறைந்த மார்க் பெற்றதாக கருதிய மாணவ- மாணவிகள் இந்த முறை அதிகம் பேர் விண்ணப்பித்து உள்ளனர். கடந்த ஆண்டு 65,000 பேர் பிளஸ்-2 விடைத்தாள் நகல் கேட்டு விண்ணப்பித்தனர். இந்த வருடம் அதை விட கூடுதலாக விண்ணப்பித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

ஒவ்வொரு மாவட்டத்திலும் பெறப்பட்ட விண்ணப்பப்பங்கள் சென்னை தேர்வுத் துறைக்கு வந்தன. அவற்றை ஆய்வு செய்து விண்ணப்பித்த மாணவர்களுக்கு விடைத்தாள் நகல் வழங்குவதற்கான பணி தொடங்கியது. எந்தெந்த மாவட்டத்தில் இருந்துவிடைத்தாள் கேட்டு இருக்கிறார்களோ அவரது பதிவு எண்ணை வைத்து அதற்கு போடப்பட்ட டம்மி எண்ணை கண்டுபிடித்து அந்த பாடத்தின் விடைத்தாள் திருத்திய மையத்தில் இருந்து கொண்டு வரப்படும்.

அதன் பின்னர் அவை ஜெராக்ஸ் எடுத்து மாணவர்களுக்கு வழங்கப்படும். இந்த பணி முடிய குறைந்தது 20 நாட்கள் ஆகும் என்று கூறப்படுகிறது. சென்னை எழும்பூர் மாநில பள்ளியில் விடைத்தாள் நகல் வழங்கும் பணி நடக்கிறது. ஜூன் 2-வது வாரத்தில் விடைத்தாள் நகல் கேட்டவர்களுக்கு தபாலில் கிடைக்கும். அதற்கான பணி முழு வீச்சில் நடந்து வருகிறது.

No comments: