Tuesday, May 24, 2011

மருத்துவ படிப்பில் சேர ஆர்வம்: 22 ஆயிரம் எம்.பி.பி.எஸ். விண்ணப்பம் விற்பனை.

மருத்துவ படிப்பில் சேர ஆர்வம்: 22 ஆயிரம் எம்.பி.பி.எஸ். விண்ணப்பம் விற்பனை; கூடுதலாக 5000 அச்சடிப்பு

அரசு மருத்துவ கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ். மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான விண்ணப்பம் கடந்த 16-ந்தேதி முதல் வினியோகிக்கப்படுகிறது.

17 அரசு மருத்துவ கல்லூரிகள், சென்னை அரசு பல் மருத்துவ கல்லூரிகளில் 9 நாட்களாக விண்ணப்பம் வழங்கப்படுகிறது. ஜூன் 2-ந்தேதி வரை விண்ணப்பம் வினியோகம் செய்யப்படுகிறது. இதுவரையில் 22 ஆயிரம் எம்.பி.பி.எஸ். விண்ணப்பங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

மருத்துவ படிப்பில் சேருவதற்கு மாணவர்கள் இடையே ஆர்வம் அதிகரித்து வருவதால் விண்ணப்பம் தட்டுப்பாடு இல்லாமல் வழங்க மருத்துவ தேர்வுக்குழு நடவடிக்கை எடுத்து வருகிறது. கூடுதலாக 5 ஆயிரம் எம்.பி.பி.எஸ். விண்ணப்பங்கள் அச்சடித்து தயாராக இருப்பதாக தேர்வு குழு செயலாளர் டாக்டர் ஷீலாகிரேஸ் ஜீவமணி தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியதாவது:-

முதல்கட்டமாக எம்.பி.பி.எஸ். விண்ணப்பம் 25 ஆயிரம் அச்சடித்து வழங்கப்பட்டன. இதில் 22 ஆயிரம் இதுவரை விற்பனையாகி உள்ளது. விண்ணப்பிக்க கால அவகாசம் இருப்பதால் எல்லா மருத்துவ கல்லூரி களிலும் விண்ணப்பம் தட்டுப்பாடு இல்லாமல் கிடைப்பதற்காக கூடுதலாக 5 ஆயிரம் விண்ணப்பங்கள் அச்சடித்து தயாராக இருக்கின்றன.

டிப்ளமோ நர்சிங் படிப்பதற்கு 15 ஆயிரம் விண்ணப்பம் வழங்கப்பட்டு விட்டன. இதனால் மேலும் 4 ஆயிரம் விண்ணப்பம் அச்சடிக்கப்பட்டுள்ளன. மருத்துவம் சாரா படிப்புகளுக் கான விண்ணப்பம் 9 ஆயிரம் அச்சடித்து வினியோகிக்கப்பட்டு உள்ளது.

தற்போது கூடுதலாக 6 ஆயிரம் விண்ணப்பம் அச்சடிக்கப் படுகிறது. கடந்த வருடம் 20 ஆயிரம் எம்.பி.பி.எஸ். விண்ணப்பம் விற்பனையானது குறிப்பிடத்தக்கது.

No comments: