Thursday, May 12, 2011

தமிழகச் சட்டப்பேரவைத் தேர்தல் ஒரு அமைதிப் புரட்சி.

ஜி. சுந்தரராஜன்



நடந்து முடிந்த தமிழகச் சட்டப்பேரவைத் தேர்தல் சற்று வித்தியாசமான தேர்தலாக அமைந்திருந்தது என்பதை யாராலும் மறுக்க முடியாது. ஏனென்றால், தேர்தல் என்றால் தொடர் பிரசாரம், பொதுக்கூட்டங்கள், டிஜிட்டல் பேனர்கள், பட்டாசு, சாரம் ஆகியவை இல்லாமல் குறுகிய இடைவெளியில் மக்களுக்கு அதிக அளவு பாதிப்பு இல்லாத தேர்தலாக அமைந்தது, மக்களை நிம்மதிப் பெருமூச்சு விடவைத்துள்ளது.

இந்தச் சட்டப்பேரவைத் தேர்தலில் ஒரு தனித்துவம் உண்டு. எந்தக் கட்சித் தலைவரும் எல்லாத் தொகுதிகளிலும் பிரசாரம் செய்யவில்லை. ஓரளவுக்கு மிக அதிகமான தொகுதிகளில் பிரசாரம் செய்தவர் என்கிற பெருமை துணை முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு இருக்கக்கூடும்.

ஏப்.13-ம் தேதி தமிழகம் முழுவதும் எவ்வித அசம்பாவிதமும் இன்றி தேர்தல் நடைபெற்றது. அதுவும் அதிக அளவு மக்கள் ஆர்வத்துடன் வந்து நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தது குறிப்பிடத்தக்கது.

இத்தேர்தலைப் பொறுத்தவரை திமுக, பாமக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகளின் கீழ்மட்ட நிர்வாகிகள் தொண்டர்கள் தேர்தல் நாளன்று அமைதி காத்தனர்.

ஆளும் கூட்டணியினர் தேர்தல் நாளன்று மக்களைச் சந்தித்து வாக்களிக்க அழைக்காததால், எந்தக் கிராமத்திலும் எவ்வித சண்டை சச்சரவின்றி தேர்தல் அமைதியாக நடைபெற்றது. மக்கள் சுதந்திரமாக வாக்களித்ததைக் காண முடிந்தது. சில வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு முடியும் முன்பே திமுக, பாமக ஏஜெண்டுகள் பூத்தை விட்டு வெளியேறிய சம்பவமும் நடைபெற்றது.

ஏப்.13-ம் தேதி வாக்குப்பதிவு நாளனறு காலை 8 மணிக்குத் தொடங்குவதற்கு முன்பே வாக்குச்சாவடிகளில் மக்கள் வரிசையில் நின்றது குறிப்பிடத்தக்கது. சில வாக்குச்சாவடிகளில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பொருத்தப்பட்ட நேரம் காலதாமதமாக 8 மணியைக் காட்டியதால் 10 முதல் 20 நிமிடங்கள் வரை காலதாமதமாக வாக்குப்பதிவு தொடங்கியது. அப்போது அரசியல் கட்சிகளைச் சேர்ந்த பூத் ஏஜெண்டுகளைவிட வாக்காளர்களே வாக்குச்சாவடி அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அந்த அளவுக்குக் கிராமங்களில்கூட மக்கள் மத்தியில் விழிப்புணர்வு காணப்பட்டது.

வாக்குப்பதிவு தொடங்கியதிலிருந்து முடியும்வரை மக்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தது இந்தத் தேர்தலில்தான் என்பதை வாக்குச்சாவடிகளில் இருந்த பூத் ஏஜெண்டுகள் தெரிவிக்கின்றனர். தேநீர் அருந்தவோ, சாப்பிடவோகூட நேரமில்லாமல் இடைவெளி இன்றி இந்தத் தேர்தலில்தான் வாக்குப்பதிவு நடைபெற்றது. மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் அமைதியாக வாக்களித்தனர் என வாக்குச்சாவடிகளில் பணியாற்றிய பூத் ஏஜெண்டுகள் தெரிவிக்கின்றனர். வாக்குப்பதிவு நேரம் முடிந்தபின்னும் வாக்குச்சாவடிக்குள் இருந்த வாக்காளர்கள் டோக்கன் பெற்று, மாலை 6,7 மணி வரை வாக்களித்தனர்.

கிராமப்புறங்களில் மக்கள் எவ்வித அச்சுறுத்தலின்றி இத்தேர்தலில் சுதந்திரமாகவும், சுயமாகவும் வந்து வாக்களித்தனர். தேர்தல் ஆணையத்தின் கெடுபிடியாலோ அல்லது அதிருப்தியாலோ எந்தக் கட்சியினரும் வீடு வீடாகச் சென்று வாக்காளர்களை அழைத்து வரும் செயலில் ஈடுபடவில்லை.

எந்தத் தேர்தலிலும் இல்லாமல் இத்தேர்தலில் சற்று வித்தியாசமாகத் தேர்தல் ஆணையம் வழங்கிய பூத் சிலிப்புடன் மக்கள் தானாகவே சென்று அமைதியாக, ஆர்வத்துடன் வாக்களித்து அமைதிப் புரட்சியை ஏற்படுத்தியுள்ளனர்.

கிராமப்புறங்களிலும் சரி, நகர்ப்புறங்களிலும் சரி புதிய வாக்காளர்கள், அதாவது முதன்முறையாக வாக்களிக்கும் இளைய தலைமுறையினர் மிகப்பெரிய அளவில் வாக்களிக்க வரிசையில் வந்து நின்றது குறிப்பிடத்தக்கது.

பெண்கள் அதிக அளவில் வாக்களித்ததுபோலவே இந்த இளைய தலைமுறை வாக்காளர்களும் ஆர்வத்துடன் தேர்தலில் பங்கு கொண்டனர் என்பதுதான் இந்தத் தேர்தலில் காணப்பட்ட மிகப்பெரிய மாற்றம்.

அதேபோல, தேர்தல் என்று சொன்னாலே, வாக்குச்சாவடியிலிருந்து சற்று தூரத்தில், பல்வேறு கூட்டணிக் கட்சிகளின், சுயேச்சைகளின் ஆதரவாளர்கள் வாக்காளர் பட்டியலுடன் பூத் சிலிப்பும் கையுமாக நின்று கொண்டிருப்பார்கள். இந்த முறை அந்தத் தொந்தரவே கிடையாது.

அப்படியே சிலர் வாக்காளர் பட்டியலுடன் நின்று கொண்டிருந்தாலும்கூட, வாக்காளர்கள் அவர்களைச் சட்டையே செய்யாமல் வாக்குச்சாவடிக்குள் தேர்தல் ஆணைய பூத் சிலிப்புடன் நுழைந்தது, ஓர் இன்ப அதிர்ச்சி.

ஆளும்கட்சியினர் வழங்கிய இலவசம் மற்றும் திட்டங்களால் வாக்களித்தார்களா அல்லது ஊழல், விலைவாசி உயர்வு, மின்வெட்டு, குடும்ப ஆட்சி ஆகியவற்றால் ஆட்சி மாற்றம் தேவை என்பதால் அதிக அளவு ஆர்வத்துடன் வாக்களித்தார்களா என்பது மே 13-ம் தேதி வாக்கு எண்ணிக்கையின்போது தெரியவரும்.

No comments: