Thursday, May 12, 2011

இத்தாலிக்கு சென்ற கப்பல் உடைந்ததால் 600 பேர் சாவு.


ஜெனிவா,லிபியா நாட்டில் இருந்து இத்தாலிக்கு சென்ற கப்பல் உடைந்ததால் அதில் இருந்த 600 பேர் கடலில் மூழ்கி இறந்தனர்.

லிபியா நாட்டில் அதிபர் கடாபிக்கு எதிராகப் புரட்சி நடந்து வருகிறது. புரட்சியாளர்களை ஒடுக்க கடாபி அரசு ராணுவ தாக்குதல் நடத்தி வருகிறது. மக்களையும், புரட்சியாளர்களையும் பாதுகாக்க அமெரிக்க தலைமையிலான நேட்டோ படைகள் லிபிய ராணுவம் மீது விமானம் மூலம் குண்டு வீசுகிறது. அங்கு ஏராளமானவர்கள் பலியாகி வருகின்றனர். இதனால் குழப்பமான சுழ்நிலை நிலவுகிறது. உயிருக்கு பயந்து மக்கள் அண்டை நாடுகளுக்கு கூட்டம் கூட்டமாக செல்கிறார்கள்.

லிபியாவில் புரட்சி நடப்பதற்கு முன்பு அங்கு சோமாலியா மற்றும் ஆப்பிரிக்க நாடுகளை சேர்ந்த ஏராளமானவர்கள் வேலை செய்து வந்தனர். புரட்சி வெடித்த பின்னர் இங்குள்ள ஆப்பிரிக்க மக்கள் பாதுகாப்புக்காகவும், நல்ல வேலை தேடியும் அருகில் உள்ள இத்தாலி நாட்டுக்கு கப்பலில் திருட்டுத்தனமாக செல்கின்றனர். லிபிய ராணுவம் பலரை துப்பாக்கி முனையில் கப்பலில் ஏற்றி நாடு கடத்துவதாகவும் கூறப்படுகிறது. இப்படி அளவுக்கு அதிகமாக மக்களை ஏற்றுவதால் கப்பல்கள் அடிக்கடி விபத்துக்குள்ளாகி உயிரிழப்பு ஏற்படுகிறது.

இதேபோல் கடந்த வெள்ளிக்கிழமை 600 பேரை ஏற்றிக்கொண்டு ஒரு சிறிய கப்பல் இத்தாலிக்கு சொந்தமான லம்பிடிசா தீவை நோக்கி சென்றது. நடுக்கடலில் சென்றபோது கூட்டம் அதிகமாக இருந்ததால் அந்த சிறிய கப்பல் பாரம் தாங்காமல் இரண்டாக உடைந்து கடலில் மூழ்கியது. இந்த விபத்தில் கப்பலில் இருந்த 600 பேரும் கடலில் மூழ்கி இறந்து விட்டானர். இதில் பலர் சோமாலியா நாட்டை சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது.

கடந்த சில நாட்களில் 3 படகுகள் கடலில் மூழ்கி 800 பேர் வரை இறந்துவிட்டனர். கடத்தல்காரர்கள் பணத்துக்கு ஆசைப்பட்டு அதிகான மக்களை சிறிய கப்பலில் ஏற்றி வருவதால் விபத்து ஏற்படுவதாக கூறப்படுகிறது. இதுவரை 5 கப்பல்களில் 2400 பேர் இத்தாலியின் லக்பிடிசா தீவுக்கு வந்துள்ளனர்.

இது பற்றி லிபியா அதிபர் கடாபியின் அதிகார பூர்வ பேச்சாளர் கூறியது:

லிபிய அதிபர் கடாபியின் அரசை கவிழ்ப்பதற்காக புரட்சிக்காரர்களுக்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் உதவுகின்றன. அதன் விளைவாகத் தான் ஐரோப்பிய நாடுகளுக்குள் இங்கிருந்து மக்கள் ஊடுருவுகின்றனர். எங்கள் நாட்டின் கடற்கரை பகுதி தினசரி நேட்டோ விமானங்களால் குண்டு வீசி தாக்கப்படுகிறது. இதனால் எங்கள் நாட்டில் இருந்து கப்பலில் செல்பவர்களை தடுக்க முடியவில்லை என்றார் அவர்.

No comments: