Thursday, May 12, 2011

திடீரென கைது செய்யப்பட்ட ராகுல்காந்தி விடுதலை.

திடீரென கைது செய்யப்பட்ட  ராகுல்காந்தி விடுதலை

உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் விவசாயிகள் நிலம் அதி விரைவு சாலை போடுவதற்காக கையகப்படுத்தப்பட்டது. அந்த நிலத்துக்கு கூடுதல் இழப்பீடு தொகை கேட்டு விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். சமீபத்தில் 2 விவசாயிகள் சுட்டுக் கொல்லப்பட்டதால் அவர்களது போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது.

அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல்காந்தி நேற்று விவசாயிகளுக்கு ஆதரவாக போராட்டத்தில் குதித்தார். விவசாயிகளோடு அமர்ந்து தர்ணா செய்தார். போலீசார் பல தடவை பாதுகாப்பு பிரச்சினைகள் பற்றி எடுத்து சொன்ன பிறகும் அவர் போராட்டத்தை கைவிடவில்லை.

இதனால் உத்தரபிரதேச மாநில போலீசார் ராகுல்காந்தியை இரவு 11 மணிக்கு கைது செய்தனர்.ராகுல் காந்தியை போலீசார் வேனில் ஏற்றி அழைத்து சென்றனர். அவர் எங்கு கொண்டு செல்லப்பட்டார் என்பது மர்மமாக இருந்தது. அவர் இன்று மாஜிஸ் திரேட் முன்பு ஆஜர் படுத்தப் படுவார் என்று எதிர்பார்க் கப்பட்டது.

சுமார் ஒரு மணி நேரம் அங்கும்-இங்குமாக அழைத்து செல்லப்பட்ட அவர் பிறகு கஸ்னா போலீஸ் நிலையத்தில் வைக்கப்பட்டார். அங்கு போலீஸ் காரர்களிடம் அவர், எந்த அடிப்படையில் என்னை கைது செய்தீர்கள்? என்று கேட்டார். அதற்கு போலீசார் எந்த பதிலும் கொடுக்க வில்லை.

இதையடுத்து ராகுல் காந்தியை சொந்த ஜாமீனில் விடுவிப்பதாக போலீசார் கூறினார்கள். அதை ராகுல் ஏற்றுக் கொண்டதால் உடனடியாக விடுதலை செய்யப்பட்டார்.ராகுல்காந்தியை உத்தர பிரதேச மாநில போலீசார் தங்களது பாதுகாப்புடன் டெல்லிக்கு அழைத்து சென்றனர். இரவு 2.15 மணி அளவில் அவர் சாரை காலேகான் என்ற பகுதியில் இறங்கி விடப்பட்டார்.

இதைத் தொடர்ந்து ராகுல் கைதான பிறகு நிலவிய 3 மணி நேர பரபரப்பு முடிவுக்கு வந்தது. ராகுலுடன் கைதான காங்கிரஸ் பொதுச் செயலாளர் திக்விஜய்சிங், உத்தர பிரதேச மாநில காங்கிரஸ் தலைவர் ரீடா பகுகுனா, காங்கிரஸ் எம்.பி.ராஜ்ப்பர் ஆகியோரும் விடுதலை செய்யப்பட்டனர். அப்போது திக்விஜய்சிங் நிருபர்களிடம் கூறியதாவது:-

விவசாயிகள் பிரச்சினைக்காக ஜெயிலுக்கு செல்வதில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம். மாயாவதி அரசுக்கு எதிரான எங்கள் போராட்டம் தொடரும். பட்டா பரகலில் கூடுதல் இழப்பீடு கேட்ட விவசாயிகள் மீது மனித உரிமை மீறப்பட்டுள்ளது. இது பற்றி தேசிய மனித உரிமைக் கமிஷன் விசாரிக்க வேண்டும். ராகுலை கைது செய்ததற்காக நாடெங்கும் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்படும்.

மாயாவதி அரசு எல்லை மீறி நடந்து கொள்கிறது. ராகுல்காந்தி 144 தடை உத்தரவை மீறி விவசாயிகளுடன் சேர்ந்து போராட்டம் நடத்தியதாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ராகுல் போராட்டத்தை தொடங்கிய பிறகே இந்த தடை உத்தரவை அவசரம், அவசரமாக பிறப்பித்துள்ளனர்.

இது கண்டனத்துக்குரியது. நாங்கள் நடத்தியது அமைதியான போராட்டம், விவசாயிகளுடன் அமர்ந்து இருந்த போது ராகுல் "மைக்" கில் கூட பேசவில்லை. விவசாயிகளின் போராட்டம் மாயாவதி அரசின் தோல்வியைக் காட்டுகிறது. விவசாயிகளுக்காக உண்மையிலேயே பாடுபடும் ஒரே கட்சி காங்கிரஸ் கட்சிதான்.

இவ்வாறு திக்விஜய்சிங் கூறினார்.

ராகுல்காந்தி நிருபர்களிடம் கூறியதாவது:-

மாயாவதி அரசு விவசாயிகளிடம் மிகவும் மோசமாக நடந்து கொள்கிறது. பெண்கள், இளைஞர்கள் மீது வன்முறை நடத்தப் பட்டுள்ளது. இந்தியன் என்று சொல்லிக் கொள்ள வெட்கமாக உள்ளது மாயாவதி தன் சொந்த மாநில மக்கள் மீது தாக்குதல் நடத்துவது வேதனை தருகிறது.

இவ்வாறு ராகுல் காந்தி கூறினார்.

ராகுல்காந்தி, திக்விஜய்சிங் குற்றச்சாட்டுக்களுக்கு முதல்-மந்திரி மாயாவதி பதில அளித்துள்ளார். அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

உத்தரபிரதேச மாநிலத்தில், விவசாயிகளுக்கு ஆதரவாக போராட்டம் நடத்துவதாக கூறிக்கொண்டு, சட்டத்தை மீறுவோர் யார் என்றாலும், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். விவசாயிகளின் போராட்டம் என்று கூறிக்கொண்டு, ராகுல்காந்தி அரசியல் நாடகம் ஆடுகிறார். விவசாயிகளுக்கு குறைவான இழப்பீடு தொகை வழங்கப்பட்டதாக பொய்யான தகவலை பரப்பி வருகிறார்கள். இதை கண்டிக்கிறோம் .

ராகுல்காந்தி ஏழை-எளிய தாழ்த்தப்பட்ட மக்களுக்காக பாடுபடும் தலைவர் அல்ல. விவசாயிகள் பிரதிநிதி என்று சொல்லிக் கொள்ள அவருக்கு எந்த தகுதியும் இல்லை. ராகுல்காந்தி மீது தடையை மீறியதற்காக போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். ராகுல் போராட்டம் நடத்த வரும் முன்பே தடை உத்தரவு அமலில் உள்ளது.

இவ்வாறு மாயாவதி கூறினார்.

No comments: