Thursday, May 12, 2011

சிங்கப்பூரில் 60,000 இந்தியர்களுக்கு வேலைவாய்ப்பு.


உலகிலேயே அதிக அளவில் வேலைக்கு ஆட்களை எடுக்கும் நாடாக சிங்கப்பூர் உயர்ந்துள்ளது. இந்த ஆண்டில் வேறு எந்த நாட்டையும் விட சிங்கப்பூரைச் சேர்ந்த நிறுவனங்கள்தான் அதிக அளவிலான ஆட்களைத் தேர்வு செய்ய திட்டமிட்டு உள்ளன.

குறிப்பாக இந்தியர்களுக்கு பெரும் ஜாக்பாட் அடிக்கப் போகிறது. அதாவது 60,000 இந்தியர்களை வேலைக்கு எடுக்க சிங்கப்பூர் நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளதாம்.

2011ம் ஆண்டில் ஒட்டுமொத்தமாக 3 லட்சம் பேரை வேலைக்கு தேர்வு செய்ய சிங்கப்பூர் திட்டமிட்டுள்ளது. இதில் 50 சதவீதத்தினர் சிங்கப்பூரைச் சேர்ந்தவர்களாக இருப்பார்கள். 20 சதவீதத்தினர், அதாவது 60,000 பேரை இந்தியாவிலிருந்து தேர்வு செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது. மற்றவர்கள் பிற நாடுகளைச் சேர்ந்தவர்களாக இருப்பார்கள்.

சிங்கப்பூரில் அனைத்துத் துறைகளிலும் நல்ல வளர்ச்சி இருப்பதால் ஆளெடுப்பில் சிங்கப்பூர் நிறுவனங்கள் பெரும் ஆர்வம் காட்ட ஆரம்பித்துள்ளதே இதற்குக் காரணம். மேலும் பல நிறுவனங்களும் இந்தியர்களை அதிகம் விரும்புகின்றன.

அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவைச் சேர்ந்த பல்வேறு வங்கிகளின் பிராந்திய தலைநகராக சிங்கப்பூர்தான் விளங்குகிறது. இது போக முன்னணி நிதி நிறுவனங்கள், உற்பத்தி நிறுவனங்கள், ஐடி நிறுவனங்கள், சுரங்க நிறுவனங்கள், சுகாதாரம், எண்ணை நிறுவனங்கள் என பல தரப்பு நிறுவனங்களும் சிங்கப்பூரில் தான் தங்களது பிராந்திய தலைமையிடங்களை வைத்துள்ளன.

இவை அனைத்தும் தற்போது சிங்கப்பூரில் தங்களது பணிகளை விரிவுபடுத்தத் தொடங்கியுள்ளன.

புதிதாக இந்த ஆண்டு தேர்வு செய்யப்படவுள்ள 3 லட்சம் பேரில் 40 சதவீதத்தினர் சிங்கப்பூரிலேயே பணியமர்த்தப்படுவர். மற்றவர்கள் ஆசியா பசிபிக் பிராந்திய அலுவலகங்களுக்கு அனுப்பப்படுவர்.

No comments: