Thursday, May 12, 2011

அல் காய்தாவின் அடுத்த இலக்கு ஒபாமாவின் பாட்டி?


அமெரிக்க அதிபர் ஒபாமாவின் பாட்டி உறவுமுறையான ஒருவருக்கு ஆப்ரிக்க அல் காய்தா பிரிவு அச்சுறுத்தல் விடுத்துள்ளது. இதையடுத்து கென்யாவில் உள்ள அவரது வீட்டைச் சுற்றிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

சோமாலியாவை அடிப்படையாகக் கொண்ட அல் காய்தா பிரிவான அல் ஷபாப் அமைப்பு, ஷாரா ஒபாமாவுக்கு அச்சுறுத்தல் விடுத்துள்ளதால் அவரது வீட்டைச் சுற்றிலும் 24 மணி நேரமும் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக கென்ய போலீசார் தெரிவித்தனர்.

பின்லேடன் கொல்லப்பட்ட பிறகு பழிவாங்கும் நடவடிக்கையாக தாக்குதல் நடைபெறலாம் என்ற அச்சத்தில் ஒபாமா பாட்டியின் வீட்டுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டிருந்தது. தற்போது அல் ஷபாபின் எச்சரிக்கை வெளியானதில் இருந்து பாதுகாப்பு அதிகாரிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

அவர் வீடு உள்ள ஒட்டுமொத்த கிராமத்துக்கும் ரோந்துப் பணியில் ஈடுபட போதுமான அதிகாரிகள் உள்ளதாக போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

ஆனால் 88 வயதான ஒபாமாவின் பாட்டி, பயங்கரவாதிகளின் அச்சுறுத்தல்கள் குறித்து கவலைப்படவில்லை. கூடுதல் பாதுகாப்பு குறித்தும் அவர் கவனத்தில் கொள்ளவில்லை.

அச்சுறுத்தல் எதுவும் எந்தவிதத்திலும் என்னுடைய வாழ்க்கை பாதிக்காது என ஷாரா ஒபாமா தெரிவித்தார்.

அச்சுறுத்தலால் என்னுடைய நடவடிக்கையை கட்டுப்படுத்த முடியாது. கூடுதல் பாதுகாப்பு வழங்க அரசு முடிவெடுத்தால் அதற்கு நாங்கள் உடன்படுகிறோம் என அவர் தெரிவித்தார்.

No comments: