Saturday, May 14, 2011

மின்கட்டணம் செலுத்துவதில் மாறுதல் தேவை!

எஸ். ரவீந்திரன்



மின் தட்டுப்பாடு ஒருபக்கம் இருக்க மின் கட்டணம் செலுத்துவதில் புதிய முறையை அமல்படுத்தியிருக்கும் வாரியத்தின் முடிவை என்னவென்று சொல்ல?

ஊரெல்லாம் இருட்டு. ஏதோ மீண்டும் கற்காலத்தில் வாழ்கிறோமா என்ற நிலையில் ஓடாத மின்சாரத்துக்கு ஏகப்பட்ட மின்கட்டணம் வசூலித்தால் அதை எப்படிச் சமாளிப்பது என்பதுதான் மக்களின் கவலை.

அரசு இலவச மின்சாரம் அளிக்கிறது. நிலமில்லாமல் தவிக்கிறார் விவசாயி. இதுதான் யதார்த்த நிலை.

இந்நிலையில் மின்தட்டுப்பாட்டைச் சமாளிக்க என்ன செய்யலாம் என்பதை விட்டுவிட்டு எப்படி மக்களை ஏமாளியாக்கலாம் என்ற வித்தையைக் கற்றுள்ளது மின்வாரியம்.

வழக்கமாக இரு மாதங்களுக்கு ஒருமுறை மின்கட்டணம் செலுத்தும் முறை இருந்து வந்தது. அதன்படி 15-ம் தேதிக்குள் கட்டணத்தைச் செலுத்த வேண்டும்.

இந்நிலையில் மின்கட்டணத்தை இனி மாதாமாதம் செலுத்த வேண்டும் என்ற அதிரடி அறிவிப்பை மின்வாரியம் வெளியிட்டுள்ளது. மின்கட்டணம் கணக்கீடு செய்ததில் இருந்து 20 நாள்களுக்குள் செலுத்த வேண்டும் என்பதுதான் புதிய நடைமுறை. இது வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவதாக அமைந்துள்ளது.

பயன்படுத்திய மின்சாரத்துக்குக் கட்டணம் செலுத்தவேண்டும். இது நியாயம்தான். ஆனால், புதிய முறையால் யாருக்கு லாபம் என்பதை மின்வாரியம் நன்கு உணர்ந்திருக்கிறது. அதேவேளையில் பயனீட்டாளர்களுக்குப் பல வழிகளில் இது உபத்திரவத்தைத்தான் ஏற்படுத்தும்.

புதிய அறிவிப்பின்படி மின்அளவீடு செய்த நாளிலிருந்து 20 தினங்களுக்குள் கட்டணத்தைச் செலுத்த வேண்டும். அதேநேரத்தில் இதில் நடைமுறைச் சிக்கல்கள் இருப்பதை ஏனோ மின்வாரியம் கண்டுகொள்ளவில்லை.

பெரும்பாலும் அரசுப் பணியில் இருப்பவர்களுக்கு மாதத்தின் முதல்வாரத்தில் கட்டணம் செலுத்துவதில் சிரமம் இருக்காது. ஆனால், தனியார் நிறுவன ஊழியர்கள் பிற வகையினர் 7-ம் தேதிக்குள் மின் கட்டணம் செலுத்துவார்களா என்பது அந்த மின்வாரியத்தில் இருக்கும் புண்ணியவான்களுக்குத்தான் தெரியும். இதுபோக மின் கணக்கீடு செய்பவர்கள் அடிக்கும் கூத்து இருக்கிறதே அது கொஞ்சநஞ்சமல்ல.

ஒப்பந்த அடிப்படையில் கணக்கீட்டுப் பணி மேற்கொள்பவர்கள், மின்வாரியத்துக்கும் இந்தப் பணிக்கும் சம்பந்தபட்டவர்கள் அல்ல. அவர்களில் பலர் நிர்ணயிப்பதுதான் கட்டணம். ஏன், எதற்கென கேட்கக் கூடாது. இந்த லட்சணத்தில் மின்வாரியத்தின் ஓசைப்படாத அத்துமீறலை யாரும் கவனிக்கவில்லை.

அதாவது, வீட்டில் உரிமையாளர்கள் இல்லாதபோது அட்டை இருக்காது. இதனால் அவர்களுக்குச் சராசரி கட்டணம் கணக்கிடப்படும்.

உதாரணமாக, இரு மாதங்களுக்கு ஒருமுறை குறைந்தது ரூ.40 முதல் ரூ.100 வரை செலுத்துபவர்கள் பலர் உண்டு. இனி அவர்கள் மாதாமாதம் இதே தொகையைத்தான் செலுத்த வேண்டியிருக்கும். அப்படிபார்த்தால் இரு மாதங்களுக்கு ரூ.40 என்பது இனி ரூ. 80-ஆக இருக்கும்.

இதுதவிர, தப்பித்தவறிக் கட்டணம் செலுத்த மறந்தானைல் அபராதக் கட்டணம் செலுத்தவேண்டிய நிலை. இது நடைமுறைக்கு வர இன்னும் சில காலங்கள் பிடிக்கும்.

மேலும், மின்வாரியம் அஞ்சலகங்களில் மின்கட்டணத்தைச் செலுத்தலாம் எனவும் அறிவித்துள்ளது. இதற்குத் தனியாகச் சேவைக் கட்டணம் வேறு கொடுக்க வேண்டுமாம். இதற்குப் பதிலாக நடமாடும் மின்வசூலிப்பு மையத்தைச் செயல்பாட்டுக்குக் கொண்டுவரலாமே.

இதுபோன்று சட்டங்களை அமல்படுத்தும் மின்வாரியம் பிற சங்கடங்களை மனதில் கொள்வதில்லை. நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தைவிட, பல மடங்கு கட்டணத்தை வாடகைதாரர்களிடம் வீட்டு உரிமையாளர்கள் வசூலிக்கின்றனர். இதைக் கட்டுப்படுத்த வேண்டும் அல்லது அதே தொகையை செலுத்துமாறு வலியுறுத்த வேண்டும்.

இன்னும் இலவச மின்சாரம் என்ற பெயரில் பலர் மின்சாரத்தை விரயமாக்குகின்றனர். எனவே இதை மறுபரிசீலனை செய்ய வேண்டும். குறிப்பாக, இலவச மின்சாரத் திட்டத்தில் சில மாறுதல்களைக் கொண்டுவர வேண்டும். பயன்படுத்தப்படும் மின்சாரத்தைக் கணக்கீடு செய்து அதற்கு மானியம் வழங்கலாம்.

பெரும்பாலானோர் இலவச மின்சாரத்தைப் பயன்படுத்திப் பிறருக்குத் தண்ணீர் பாய்ச்சுவதும், அதற்காகக் கட்டணம் பெறுவதும் நடந்து வருகிறது. இதை மின்வாரியம் கண்காணித்தல் அவசியம்.

இப்படிப் பல்வேறு மாறுதல்களைக் கொண்டு வந்தால் மின் தட்டுப்பாடு குளறுபடிகளைத் தீர்க்க முடியும்.

No comments: