Saturday, May 14, 2011

மக்களுடைய உறுதிக்கு கிடைத்த வெற்றி : ஜெயலலிதா.


மக்களுடைய உறுதிக்கு கிடைத்த வெற்றி. தமிழகத்தின் ஒளிமயமான எதிர்காலத்திற்கு உறுதி அளிக்கிறேன் என்று ஜெயலலிதா கூறினார்.

தமிழக சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி அமோக வெற்றி பெற்றது. இறுதிக் கட்ட வாக்கு எண்ணிக்கை நடைபெற்று கொண்டிருந்தபோது, தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை பேட்டி கண்டது.

கேள்வி: தேர்தல் முடிவு குறித்து பல கருத்து கணிப்புகள் வெளியாகின. ஆனால், இந்த பரிமாணத்தில்தான் இருக்கும் என்று சொன்ன ஒரே நபர் நீங்கள் மட்டும்தான். இவ்வளவு பெரிய வெற்றி கிடைக்கும் என்ற நம்பிக்கை ஏற்பட காரணம் என்ன?.

பதில்: நான் சென்ற இடங்களில் எல்லாம் மக்கள் உணர்வுகளை புரிந்துகொள்ள முடிந்தது. தி.மு.க. ஆட்சியை மக்கள் வெறுத்தார்கள். அ.தி.மு.க.வை ஆட்சியில் அமர்த்த பொதுமக்கள் காத்திருந்தார்கள் என்பது தெள்ளத்தெளிவாக தெரிந்தது. ஆகவே, கருத்து கணிப்பு என்ன சொன்னாலும், மக்கள் இந்த முடிவுடன் இருக்கிறார்கள். உறுதியாக இருக்கிறார்கள். எக்காரணத்திற்காகவும் இந்த முடிவை மாற்ற மாட்டார்கள் என்று எனக்கு நன்றாகவே தெரிந்தது. அதனால்தான், யார் எதைப்பற்றி சொன்னாலும் நான் கவலைப்படவில்லை.

கேள்வி: இந்த தேர்தல் முடிவுக்கு பிறகு உங்களுடைய அரசியல் பயணம் என்பது புதுடெல்லியை நோக்கி இருக்குமா?.

பதில்: அதை இப்போதே எப்படி சொல்ல முடியும். இன்றுதான் தேர்தல் முடிவுகள் வந்து கொண்டிருக்கின்றன. இன்னும் தேர்தல் முடிவுகள் முழுமையாக வரவில்லை. அடுத்த பணி ஆட்சி அமைப்பதாகும். அதன்பின்னர், தமிழ்நாட்டில் செய்ய வேண்டிய பணிகள் ஏராளம் உள்ளன. கடந்த 5 ஆண்டு காலத்தில் தமிழகம் சீரழிக்கப்பட்டுவிட்டது. சீரழிவு என்றால், எல்லாமே நாசம் செய்யப்பட்டுவிட்டது.

சட்டம் ஒழுங்கு சீர்குழைவு, மின்வெட்டு, விலைவாசி உயர்வு, விவசாய தொழில் சீரழிவு, நெசவுத் தொழில் அழிக்கப்பட்டது. பொதுவாக தொழில் துறையை பலவீனமடையச் செய்தது. மக்களுக்கு வாழ்வாதாரமே இல்லாமல் செய்தது. வேலை இல்லா திண்டாட்டம் பெருகியது. இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். இந்த மாநிலத்தையே கடனாளியாக்கி விட்டார்கள். ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் மாநில கடன் சென்றுவிட்டது என்று செய்திகள் வருகின்றன. 2006 ம் ஆண்டுக்கு பிறகு கடந்த 5 ஆண்டுகளில், ஏதோ கற்காலத்திற்கே சென்றுவிட்ட சூழல் ஏற்பட்டுவிட்டது.

அதனால், நாம் இப்போது மேற்கொள்ள வேண்டிய பணி சாதாரணமானது அல்ல. மிகவும் கடினமான பணி. ஆகவே, தமிழ்நாட்டையே மீண்டும் நிர்மாணிக்க வேண்டும்.

இப்போது தமிழ்நாடு இருக்கின்ற அவலநிலையில் இருந்து அதை மீட்டு, மீண்டும் வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்லும் மிகப்பெரிய பொறுப்பு என்மீது சுமத்தப்பட்டுள்ளது. மக்களுக்காக இதை ஏற்று நிறைவேற்றி ஆக வேண்டும்.

கேள்வி: இந்த சிறப்பு பேட்டி வழியாக, தமிழக மக்களுக்கு, இந்திய மக்களுக்கு நீங்கள் சொல்வது என்ன?.

பதில்: இப்படிப்பட்ட ஒரு உறுதியான தேர்தல் முடிவுகளை தந்த தமிழக மக்களுக்கு என்னுடைய நெஞ்சார்ந்த நன்றியை தலைவணங்கி தெரிவித்துக்கொள்கிறேன். ஜனநாயகம் என்பதே மக்கள் ஆட்சிதான். மக்கள் விரும்பினால் எத்தகைய மாற்றத்தையும் கொண்டுவர முடியும் என்பதை தமிழக மக்கள் மீண்டும் இன்று உலகத்திற்கே எடுத்துக்காட்டி இருக்கிறார்கள். ஆகவே, இன்று தேர்தல் வெற்றி என்று சொல்லி, பலர் பாராட்டு தெரிவித்தாலும், இது உண்மையிலேயே மக்கள் வெற்றிதான். மக்களுடைய உறுதிக்கு கிடைத்த வெற்றி.

ஆகவே, தமிழக மக்களுக்கு நான் சொல்ல விரும்புகின்ற செய்தி, கடந்த 5 ஆண்டுகாலமாக எவ்வளவோ அல்லல்பட்டுவிட்டீர்கள். துன்பப்பட்டுவிட்டீர்கள். எத்தனையோ முறை நீங்கள் ரத்தக் கண்ணீர் வடித்திருக்கிறீர்கள். அதையெல்லாம் துடைத்துவிடுங்கள். துயரத்தை மறந்துவிடுங்கள். இனி சிரித்துக் கொண்டே இருங்கள். உங்களுக்கு ஒளிமயமான எதிர்காலம் அமையும். அதை நான் உறுதியளிக்கிறேன் என்று கூற விரும்புகிறேன்.

இவ்வாறு ஜெயலலிதா கூறினார்.

No comments: