Saturday, May 14, 2011

கறுப்புப் பணம் மீட்கப்படுமா?

எஸ். லெஷ்மிநாராயணன்.



என்னதான்... ஓடி... ஓடி... வியர்வை சிந்த உழைத்தாலும் ஒரு ரூபாய்கூட சேமிக்க முடியாத மக்களும் இந்த நாட்டில் உள்ளனர். ஆனால், அரசை ஏமாற்றி வெள்ளையைக் கறுப்பாக மாற்றி வெளிநாட்டு வங்கியில் கோடிக்கணக்கான பணத்தைப் பதுக்கி வைத்திருப்போரும் இங்குதான் உள்ளனர்.

ஊழல், லஞ்சம், வருமான வரிஏய்ப்பு செய்த (கறுப்புப் பணம்) பணத்தைப் பத்திரப்படுத்துவதற்காக உலகின் பல நாடுகளில் வங்கிகள் உள்ளன. இவற்றில் முக்கியமானது ஸ்விட்சர்லாந்தில் உள்ள வங்கிகள்.

ஸ்விட்சர்லாந்தில் மொத்தம் 327 வங்கிகளும், நிதி நிறுவனங்களும் உள்ளன. இவற்றில் மிகப்பெரிய அளவில் பணப்புழக்கம் உள்ளவை இரண்டு வங்கிகள்தான். அந் நாட்டு வைப்பு நிதியில் 50 சதத்துக்கும் மேல் இந்த இரு வங்கிகளில்தான் பணம் உள்ளது.

ஸ்விஸ் வங்கிகளில் கணக்குத் தொடங்க சில நடைமுறைகள் உள்ளன. அந்த வங்கியில் கணக்கு வைத்திருப்பவர் ஸ்விஸ் நாட்டுக் குடியுரிமை பெற்றவராக இருக்க வேண்டும். வெளிநாட்டவராக இருந்தால் அந் நாட்டுடன் வியாபாரத் தொடர்போ அல்லது வீடோ அந் நாட்டில் இருக்க வேண்டும். மற்றபடி கணக்கு வைத்திருப்பவர் வங்கிக்கு அடிக்கடி வந்து செல்ல வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. ஒருமுறை அந்த வங்கி எங்கு உள்ளது என்று தெரிந்து வைத்துக்கொண்டால் மட்டும் போதும். மற்றபடி அனைத்துப் பரிவர்த்தனைகளையும் ஆன்லைனில் நடத்திக் கொள்ளலாம். அது மட்டுமல்லாமல், வங்கியில் கணக்குத் தொடங்குவதும், முடித்துக் கொள்வதும் எளிதான வழிமுறைதான்.

இப்படி ஓர் எளிமையான முறையை ஏற்படுத்தியுள்ளதால்தான் இந்த வங்கிகளில் பல நாடுகளைச் சேர்ந்தவர்களும் தங்களது கறுப்புப் பணத்தைப் போட்டுவைத்துள்ளனர்.

இந்தியாவிலிருந்து ஆண்டுக்கு 80,000 பேர் ஸ்விட்சர்லாந்துக்குப் பயணம் செய்கிறார்கள். இவர்களில் 25,000 பேர் ஆண்டுக்கு ஒருமுறையோ அல்லது இரண்டு மாதங்களுக்கு ஒருமுறையோ போய் வருகின்றனர். ஸ்விஸ் வங்கியில் இந்தியர்கள் சேமித்து வைத்துள்ள பணம் மட்டும் ரூ. 70 லட்சம் கோடியைத் தாண்டும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

ஸ்விட்சர்லாந்தில் கறுப்புப் பணம் வைத்திருப்பவர்கள் பட்டியலில் இந்தியர்களும் இடம்பெற்றுள்ளதாக அண்மையில் விக்கி லீக்ஸ் நிறுவனத் தலைவர் ஜூலியன் அசாஞ்சே தெரிவித்துள்ளார். இந்தப் பட்டியல் விரைவில் வெளியிடப்படும். இந்தியர்களின் பெயர்கள் நினைவில் இல்லை. இருப்பினும், இந்தப் பட்டியலில் இந்தியர்கள் உள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவைச் சேர்ந்த மிக முக்கியப் பிரமுகர்களின் பெயர்கள் இந்தப் பட்டியலில் இருக்கும் என்று கூறப்படுகிறது. ஸ்விட்சர்லாந்து நாட்டில் உள்ள வங்கிகளில் பணத்தைப் போடுவதற்கு குறைந்தபட்சம் 10 லட்சம் டாலர்களாவது இருக்க வேண்டும். அப்படி வைத்துள்ள இந்தியர் சாதாரண ஆளாக இருக்க முடியாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

தாராளமயப் பொருளாதாரக் கொள்கை அமலாக்கத்தால் தளர்த்தப்பட்ட கட்டுப்பாடுகள் ஊழல்களுக்கு வித்திட்டுள்ளது. காமன்வெல்த் விளையாட்டு ஏற்பாடுகளில் ஊழல், 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டு ஊழல், நிலபேர ஊழல், ஆதர்ஷ் வீடு ஒதுக்கீட்டில் ஊழல் போன்ற மெகா ஊழல்கள் அம்பலத்துக்கு வந்துள்ளன. தாராளமயக் கொள்கை அமலாக்கத்துக்குப் பிறகு பெரு முதலாளிகள் எண்ணிக்கையும், அவர்கள் சேர்த்த சொத்துகளும் அதிகரித்துள்ளன. உலகப் பணக்காரர்கள் தர வரிசையில் இந்தியர்கள் இடம் பிடித்துள்ளனர். தாராள மயமாக்கத்தால் சாதாரண மக்களின் வாழ்க்கை பெரிய கேள்விக்குறியாக மாறியுள்ளது.

ஒருநாளைக்கு ரூ. 20 கூட ஊதியம் கிடைக்காமல் 74 சதவீத மக்கள் இருப்பதாக அரசின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. ஊழல்களைக் கண்டுபிடித்து அம்பலப்படுத்திய போதெல்லாம் அதை மூடிமறைக்கவும், அதில் ஈடுபடுபவர்களைக் காப்பாற்றுவதற்கு மட்டுமே அரசு முயற்சிக்கிறது. இப்படி ஊழல் புரிந்தவர்களின் பணம்தான் ஸ்விஸ் வங்கியில் பதுக்கப்பட்டு வருகிறது.

இப்படி முறைகேடான வழியில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள பணத்தை நமது அரசு வெளியில் கொண்டு வந்தால், நமது வெளிநாட்டுக் கடன்களை ஒரே நாளில் அடைத்துவிட முடியும். அது மட்டுமன்றி இன்னும் பிற திட்டங்களையும் நிறைவேற்ற ஏதுவாக இருக்கும்.

கடந்த 2010-ல் இந்தியா-ஸ்விஸ் நாடுகளிடையே இரட்டை வரி விதிப்பு ஒப்பந்தம் ஏற்பட்டது. அதன்படி, 2011 ஜனவரி முதல் ஸ்விஸ் வங்கியின் கணக்குகளைக் கோரலாம் என்று சொல்லப்படுகிறது.

நாடாளுமன்றத்தின் கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரின்போது பேசிய குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல் வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் கறுப்புப் பணத்தை மீட்பதற்கு அரசு உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்றார்.

கறுப்புப் பணத்துக்கு எதிராக உலகளாவிய அளவில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளில் இந்திய அரசும் சேருவது, கறுப்புப் பணத்தை வெளிக்கொணர உரிய சட்டங்களை இயற்றுவது, சட்டவிரோதமாக ஈட்டப்படும் வருவாயைக் கண்டுபிடிக்கவும் அவற்றைப் பறிமுதல் செய்யவும் உரிய துறைகளையும், ஏற்கெனவே உள்ள துறைகளில் புதிய பிரிவுகளையும் உருவாக்குவது, கறுப்புப் பணத்தைக் கண்டுபிடித்து கைப்பற்ற இயற்றிய சட்டங்களையும், ஏற்படுத்திய துறைகளையும் நன்கு பயன்படுத்தவும் ஒருங்கிணைக்கவும் உரிய நிர்வாக அமைப்பை ஏற்படுத்துவது, இந்தப் பணிகளை விரைவாகவும் சரியாகவும் செய்ய அதிகாரிகளுக்கும் ஊழியர்களுக்கும் உரிய பயிற்சிகளை அளிப்பது ஆகிய 5 அம்சங்கள் கறுப்புப்பணத்தை மீட்க மத்திய அரசின் உத்தியாகும் என நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜியும் தெரிவித்துள்ளார். ஆனால், அதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்தாகத் தெரியவில்லை.

எனவே, ஸ்விஸ் உள்ளிட்ட வெளிநாடுகளில் பதுக்கப்பட்டுள்ள கறுப்புப் பணத்தை மீட்க முனைப்போடு செயல்பட வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பு!

No comments: