
தமிழக சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி அமோக வெற்றி பெற்றது. இறுதிக் கட்ட வாக்கு எண்ணிக்கை நடைபெற்று கொண்டிருந்தபோது, தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை பேட்டி கண்டது.
கேள்வி: உலகத் தமிழர்கள் அனைவரும் இன்றைக்கு உங்களிடம் இருந்து ஒரு துணையை, ஒரு பாதுகாப்பை எதிர்பார்க்கிறார்கள். குறிப்பாக, ஈழத் தமிழர்கள். அவர்களுக்கு உங்கள் நம்பிக்கை வார்த்தைகள் என்ன?.
பதில்: இலங்கை தமிழர்கள் சொல்லொணாத் துயரங்களுக்கு ஆள்படுத்தப்பட்டு இருக்கிறார்கள். இதை பற்றி பல பொதுக் கூட்டங்களில் பேசியிருக்கிறேன். பல அறிக்கைகளையும் வெளியிட்டு இருக்கிறேன். இதற்கு எல்லாம் காரணம் இலங்கை அரசுதான். ஆகவே தமிழர்கள் என்ற முறையில், இலங்கை வாழ் தமிழ் மக்களுக்கு ஒரு நல்ல வாழ்க்கையை அமைத்து தர வேண்டியது, நம் அனைவருடைய கடமை. இதில் எனக்கு அசைக்க முடியாத நம்பிக்கை உண்டு. அதற்கு நம்மால் முயன்றதை அனைவரும் செய்ய வேண்டும்.
மாநில முதல் அமைச்சர் என்ற முறையில் ஓரளவுக்குத்தான் இதில் செயல்பட முடியும். ஏனென்றால் இது சர்வதேச பிரச்சினை. இரு நாடுகளுக்கு இடையேயான பிரச்சினை. நடவடிக்கை எடுக்க வேண்டியது மத்திய அரசு. மத்திய அரசு என்ன செய்யலாம் என்று ஆலோசனை தெரிவித்து ஏற்கனவே அறிக்கை வெளியிட்டு இருக்கிறேன். முதல் அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு நான் மத்திய அரசை வலியுறுத்துவேன்.
இந்திய அரசு 2 வகையான நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம். ஒன்று, இனப்படுகொலைக்காக, போர் குற்றங்களுக்காக, இலங்கை அதிபரை சர்வதேச நீதிமன்றம் முன் நிறுத்த இந்திய அரசு முயற்சி மேற்கொள்ள வேண்டும். அடுத்தபடியாக இலங்கை வாழ் தமிழ் மக்களுக்கு ஒரு கவுரவமான வாழ்க்கையை, கண்ணியமான வாழ்க்கையை அளிக்க இலங்கை அரசை வற்புறுத்துவதற்காக. இலங்கை அரசு பணியவில்லை என்றால், இலங்கைக்கு எதிரான பொருளாதார தடைகள் கொண்டுவர இந்தியா மற்ற நாடுகளுடன் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இதை செய்தால் நிச்சயமாக இலங்கை அதிபர் பணிந்தாக வேண்டும். இலங்கை அரசு பணிந்தாக வேண்டும். இவ்வாறு ஜெயலலிதா கூறினார்.
No comments:
Post a Comment