Saturday, May 14, 2011

புதிய ஆட்சிக்காக பழைய தலைமை செயலகம் புதுப்பொலிவு பெறத் தொடங்கிவிட்டது.

பழைய தலைமை செயலகத்தில் புதிய அமைச்சர்களுக்கு அறைகள் தயாராகின்றன. அதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடந்து வருகிறது.

2011 சட்டமன்ற பொதுத் தேர்தலில் அ.தி.மு.க. அமோக வெற்றி பெற்றுள்ளது. தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு அ.தி.மு.க. தனித்து ஆட்சி அமைக்கிறது என்று தெரிந்ததும், பழைய தலைமை செயலகத்தை சுத்தம் செய்யும் பணி தொடங்கியது.

இதற்கிடையே, கோட்டையில் உள்ள கேண்டீன் முன்பு அ.தி.மு.க. ஆதரவாளர்கள் பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினார்கள். அரசு ஊழியர்களுக்கும் ஒருவருக்கு ஒருவர் வாழ்த்து தெரிவித்துக்கொண்டனர்.

அமைச்சர்களுக்கான அறைகளும் சுத்தம் செய்யப்படுகின்றன. ஏ.சி. மிஷின்கள் துடைக்கப்பட்டு பளிச்சிடுகின்றன. அமைச்சர்களின் கார்களில் உள்ள சுழல் விளக்கு, முகப்பு விளக்குகள், கார்களில் உள்ள இருக்கைகள் அனைத்தும் புதுப்பிக்கப்படுகின்றன.

கடந்த ஆட்சியில் தலைமை செயலாளர், நிதித்துறை, உள்துறை உள்ளிட்ட பல்வேறு அரசுத் துறைகளின் அலுவலகங்கள் பழைய தலைமை செயலகத்தில் இருந்து புதிய தலைமை செயலகத்திற்கு மாற்றப்பட்டன.

அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா தலைமையில் புதிய ஆட்சி பொறுப்பேற்க உள்ள நிலையில், முதல் அமைச்சர் உள்பட அனைத்து அமைச்சர்களின் அலுவலகங்களும் பழைய தலைமை செயலகத்திலேயே செயல்படும் என்றும், சட்டசபை கூட்டமும் அங்கேயே நடைபெறும் என்றும் தெரிகிறது.

அமைச்சர்கள் பயன்படுத்திய அரசு கார்கள் பழைய தலைமை செயலகத்திற்கு வந்த வண்ணம் இருந்தன. மொத்தத்தில் பழைய தலைமை செயலகம் புதிய ஆட்சிக்காக புதுப்பொலிவு பெறத் தொடங்கிவிட்டது.

No comments: