Saturday, May 14, 2011

இளைஞர் காங்கிரசார் 10 பேரும் தோல்வி : ராகுல் பிரசாரம் எடுபடவில்லை.

இளைஞர் காங்கிரசார் 10 பேரும் தோல்வி: ராகுல் பிரசாரம் எடுபடவில்லை

தமிழக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வியை சந்தித்துள்ளது. 63 தொகுதிகளில் போட்டியிட்ட அந்த கட்சிக்கு 5 இடங்களில் மட்டுமே வெற்றி கிடைத்துள்ளது.

மாநில காங்கிரஸ் தலைவர் கே.வி.தங்கபாலு மயிலாப்பூர் தொகுதியில் 29 ஆயிரத்து 204 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் அ.தி.மு.க. வேட்பாளர் ராஜலட்சுமியிடம் படுதோல்வியை தழுவினார்.

அவரை போலவே காங்கிரஸ் மூத்த தலைவர்கள் பீட்டர் அல்போன்ஸ், டி.யசோதா, ஆகியோரும் தோல்வி அடைந்தனர். அகில இந்திய காங்கிரஸ் செயலாளர்களில் ஒருவரான ஜெயக்குமார், தொழில் அதிபர் வசந்தகுமார், செல்வப்பெருந்தகை, ஆகியோரும் தோல்வியை தழுவி உள்ளனர்.

வேலூர் தொகுதியில் போட்டியிட்ட ஞானசேகரன், அறந்தாங்கி தொகுதியில் போட்டியிட்ட திருநாவுக்கரசர் ஆகியோருக்கும் தோல்வி கிடைத்துள்ளது. இந்த தடவை இதற்கு முன்பு எப்போதும் இல்லாதபடி இளைஞர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 10 பேருக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது.

மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவர் யுவராஜா (ஈரோடு மேற்கு), அறிவழகன் (அண்ணா நகர்), விஜய் இளஞ்செழியன் (ஆம்பூர்), அர்த்தநாரி (ஆத்தூர்), ஜோதிமணி (கரூர்), மகேந்திரன் (பேராவூரணி), வரதராஜன் (மதுரை தெற்கு), மயூரா ஜெயக்குமார் (சிங்காநல்லூர்), பெருமாள்சாமி (விளாத்திக்குளம்), நவீன் ஆம்ஸ்ட்ராங் (விருதுநகர்) ஆகிய 10 பேர் களத்தில் இறக்கப்பட்டனர்.

இவர்கள் 10 பேரும் தோல்வி அடைந்துள்ளனர். தமிழ்நாட்டில் பிரசாரம் செய்ய வந்த ராகுல்காந்தி இளைஞர் காங்கிரஸ் வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதிகளுக்கு மட்டும் சென்று பிரசாரம் செய்தார். அவரது பிரசாரம் எடுபடாமல் போய்விட்டது.

No comments: