Saturday, May 14, 2011

ஊழலுக்கு மரண அடி...

அருண் நேரு.


இந்தியாவில் இயங்கும் மக்களாட்சியின் வலிமையை சட்டப் பேரவைத் தேர்தல் முடிவுகள் மீண்டும் ஒருமுறை நிரூபித்திருக்கின்றன. தங்களுக்கு விருப்பமில்லாத ஆட்சிகளை மக்கள் அகற்றியிருக்கிறார்கள். நன்மை செய்தவர் களை மீண்டும் ஆட்சியில் அமர்த்தியிருக்கிறார்கள்.

தேர்தல் ஒன்றே மிகப்பெரும் மாற்றத்துக்கு ஒரே வழி என்று ஊழலுக்கு எதிரான போராட்டம் நடத்தும் அண்ணா ஹஸரேவும் அவரது நண்பர்களும் இப்போது எண்ணத் தொடங்கியிருப்பார்கள் என்று நினைக்கிறேன்.

தமிழ்நாட்டில் காங்கிரஸம் அதன் கூட்டணிக் கட்சியான திமுகவும் படுதோல்வியைச் சந்தித்திருக்கின்றன. 234 தொகுதிகளில் 200-க்கும் அதிகமான தொகுதிகளை அதிமுக கூட்டணி கைப்பற்றியிருக்கிறது.

ஊழல் செய்ததற்காகத்தான் திமுக தோற்கடிக்கப்பட்டிருக்கிறது. எல்லா ஊழல்களையும் பின்னுக்குத் தள்ளிய 2ஜி ஊழல் ஒன்றே அவர்களை நெருக்கடியில் தள்ளியது.

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டால் நாட்டுக்கு எந்த இழப்பும் ஏற்படவில்லை என்று கூறிக்கொண்டு திமுகவுடன் கூட்டணி அமைத்த காங்கிரஸ் கட்சிக்கு தமிழ்நாட்டு மக்கள் பாடம் புகட்டிவிட்டார்கள். 65 தொகுதியில் போட்டியிட்ட அந்தக்கட்சியால் இரட்டை இலக்கங்களில்கூட வெற்றிபெற முடியவில்லை.

புதுச்சேரியிலும் காங்கிரஸக்கு எதிராகவே மக்கள் வாக்களித்திருக்கிறார்கள். கேரளத்திலும் காங்கிரஸக்கு தெளிவான வெற்றி கிடைக்கவில்லை என்றே கூறவேண்டும்.

மேற்குவங்கத்தில் மம்தா பானர்ஜி பெற்றிருக்கும் பிரமாண்ட வெற்றியில் காங்கிரஸக்கு எந்தப் பங்கும் இல்லை. அது முழுக்க முழுக்கு மம்தா பானர்ஜிக்காக மட்டுமே கிடைத்த வெற்றி.

அசாம் மாநிலத்தில் தருண் கோகோய் மீண்டும் வெற்றி பெற்றிருப்பதன் மூலம் அவர் மீது மக்கள் நன்னம்பிக்கை வைத்திருப்பது உறுதியாகியிருக்கிறது. ஷீலா தீட்சித் போல் அவரும் வளர்ச்சிப் பணிகள் மூலமாக மக்களின் நம்பிக்கையைப் பெற்ற தலைவராக உருவெடுத்திருக்கிறார்.

2014-ம் ஆண்டில் நடைபெற இருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு பின்னடைவு ஏற்படலாம் என்பதை இந்தச் சட்டப் பேரவைத் தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன. பெரும்பாலான மாநிலங்களில் பிராந்திய கட்சிகளின் ஆதிக்கம் தெரிகிறது. இது தேசியக் கட்சிகளுக்கு நல்லதல்ல.

மக்களவையில் 206 இடங்களைப் பெற்றிருக்கும் காங்கிரஸ் கட்சிக்கு இப்போதைய நிலைமையில் தேர்தல் நடந்தால் 160 முதல் 170 வரையே கிடைக்கும். பாஜகவும் 120 முதல் 125 இடங்கள் வரையே பெறும். திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கு இப்போதைய 19 இடங்களில் இருந்து 30 இடங்கள்வரை கிடைக்க வாய்ப்பிருக்கிறது.

அதிமுகவும் தனது பலத்தை 9-ல் இருந்து 25-ஆக உயர்த்திக் கொள்ளும். மாயாவதியையும் குறைத்து மதிப்பிட முடியாது. அவரும் 35 தொகுதிகளில் வெற்றி பெறுவார்.

கடந்த பல ஆண்டுகளாக நாட்டில் கூட்டணி ஆட்சிதான் நடைபெற்று வருகிறது. சிறிய கட்சிகளை தாஜா செய்து கூட்டணி அரசை எப்படி நடத்த வேண்டும், என்னென்ன சவால்களையெல்லாம் எதிர்கொள்ள வேண்டியிருக்கும், அவற்றை எப்படிக் கையாள வேண்டும் என்பதில் பாஜகவும் காங்கிரஸம் அனுபவம் வாய்ந்த கட்சிகளாகிவிட்டன. அதிகாரப் பகிர்வெல்லாம் அவர்களுக்கு அத்துபடி.

2ஜி விவகாரம் ஆக்டோபஸôக தனது கரங்களை விரிக்கத் தொடங்கிவிட்டது. தேர்தலில் திமுக தோற்றுப் போய்விட்டதுடன் விவகாரம் முடிந்துவிடப் போவதில்லை.

எத்தனையோ மோசமான நெருக்கடிகளை திமுக இனிமேல்தான் சந்திக்க வேண்டியிருக்கிறது. திமுகவைச் சேர்ந்த 18 மக்களவை உறுப்பினர்களின் ஆதரவுடன் மத்திய அரசை தொடர்ந்து நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் விரும்பினால், இன்னும் பல தோல்விகளை அந்தக் கட்சி சந்திக்க வேண்டியிருக்கும். பஞ்சாபும், உத்தரப் பிரதேசமும் பாடம் புகட்டக் காத்திருக் கின்றன.

பிகாரின் நிதீஷ்குமார், ஒரிசாவின் நவீன் பட்நாயக், தேசியவாத காங்கிரஸின் சரத் பவார் ஆகியோருடன் அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதாவும், திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பாஜனர்ஜியும் வலுவான பிராந்தியத் தலைவர்களாகி இருக்கின்றனர். இப்போதைக்கு எந்தச் சர்ச்சையிலும் சிக்காமல் அவர்கள் வருங்காலத்துக்காகத் திட்டமிடுவார்கள் என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது.

இப்போதைக்கு திமுகவிடம் 18 எம்.பி.க்களைத் தவிர வேறு எதுவும் இல்லை. உச்ச நீதிமன்றத்தின் கண்காணிப்பில் 2ஜி வழக்கு நடந்துவரும் நிலையில், கனிமொழியையும் கட்சியையும் காப்பாற்றுவதற்கு காங்கிரஸின் தயவு திமுகவுக்கு நிச்சயம் தேவை.

திமுக குடும்பத்துக்கு இப்போதைக்கு வேறு எந்தப் பாதுகாப்புக் கவசமும் இல்லை. பேரவைத் தேர்தல் தோல்வியாலும் 2ஜி விவகாரத்தாலும் குடும்பச் சண்டை மீண்டும் வீதிக்கு வரலாம். அவர்களது சொத்துகள் கண்காணிக்கப்படலாம்.

இருந்தாலும், முதல்வராகப் போகும் ஜெயலலிதா எச்சரிக்கையுடனேயே செயல்படுவார். என்னதான் நடக்கிறது என்று பொறுமையாக இருப்பார் என்றே தெரிகிறது. அதுதான் அவருக்கும் நல்லது.

மம்தா பானர்ஜிக்கு 225 இடங்கள் கிடைத்திருக்கின்றன. காங்கிரஸ் கட்சியை அவர் பொருள்படுத்தப் போவதில்லை. மேற்கு வங்கத்தைப் பொறுத்தவரை, அவர்தான் கூட்டணியின் தலைவர். அவர் சொற்படிதான் காங்கிரஸ் நடந்துகொள்ள வேண்டும்.

தமிழ்நாட்டில் திமுகவுக்கு நேர்ந்ததைப்போல மேற்கு வங்கத்தில் இடதுசாரிகள் நசுங்கிவிடவில்லை.

தங்களது வாக்கு வங்கியை அவர்கள் ஓரளவு தக்கவைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை மம்தா புரிந்து வைத்திருப்பார்.

கிராமப்புறங்களில் இடதுசாரித் தொண்டர்களைச் சமாளிக்க உள்துறை அமைச்சரின் உதவி தமக்குத் தேவைப்படும் என்பதும் மம்தாவுக்குத் தெரியும். தோல்வியுற்றவர்கள் வரும் நாள்களில் வன்முறையில் இறங்கக்கூடும் என்பதால், அதற்கான முன்னேற்பாடுகளையும் அவர் செய்து கொள்ள வேண்டும். இருந்தாலும் 34 ஆண்டுகாலம் அரியணையில் இருந்தவர்களை சமாளிப்பது அவருக்கு அவ்வளவு எளிதான பணியாக இருக்கப் போவதில்லை.

மாநிலத்தில் ஆட்சி கிடைத்திருந்தாலும், மத்தியில் தமக்கு இருக்கும் செல்வாக்கை மம்தா விட்டுவிடமாட்டார். 7 அமைச்சர்களைக் கொண்டு தமது மாநிலத்துக்கு தேவையானதைப் பெறுவதில் அவர் மும்முரமாக ஈடுபடுவார். 9 எம்.பி.க்களை மட்டும் வைத்துக் கொண்டு சரத் பவார் எப்படி மத்திய அரசையே ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறாரோ, அந்த அளவுக்குச் செயல்பட மம்தாவுக்கும் திறமை உண்டு.

இந்தத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியைப் பெருமைப்பட வைத்திருக்கும் ஒரே தலைவர் தருண் கோகோய்தான். தனது நிர்வாகத்தாலும், அரசியல் திறமையாலும் அசாம் கண பரிஷத், பாஜக ஆகிய கட்சிகளை தடம் தெரியாமல் செய்துவிட்டார்.

தனது பொறுமையான அணுகுமுறையில் ஸ்திரமான அரசு அமைவதற்கு வழிவகுத்திருக்கிறார். அவர் வெற்றிபெறுவார் என மிகச் சிலர்தான் கணித்திருந்தார்கள்.

அசாமின் பாதுகாப்புக்கும் மேம்பாட்டுக்கும் இந்த வெற்றி உறுதுணையாக இருக்கும் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.

கர்நாடகத்தில் இடைத்தேர்தல் நடந்த 3 தொகுதிகளும் பாஜகவுக்கு சென்றிருக்கிறது. ஆந்திரப் பிரதேசத்தில் நடந்த மக்களவைத் தொகுதி இடைத் தேர்தலில் ஜகன்மோகன் ரெட்டி 5 லட்சத்துக்கு அதிகமான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்று காங்கிரஸ் கட்சியை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறார்.

சட்டப் பேரவைத் தொகுதியில் அவரது தாயார் 85 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்றிருக்கிறார். மொத்தத்தில் காங்கிரஸ் கட்சிக்கு தென்மாநிலங்களில் இருந்து நல்லசேதி ஏதும் இல்லை.

பண நடமாட்டத்தைக் கட்டுப்பட்டுப்படுத்தி நேர்மையாகவும் வெளிப்படையாகவும் தேர்தலை நடத்தியதற்காகத் தேர்தல் ஆணையத்தப் பாராட்டியே ஆக வேண்டும்.

தேர்தல் முடிந்துவிட்டது என்பதால் அரசியலில் ஆசுவாசிப்படுத்திக் கொள்வதற்கு நேரம் கிடையாது. இங்கு விடுப்பு எடுக்கவும் முடியாது. இதோ 2ஜி வழக்கு இன்று விசாரிக்கப்பட இருக்கிறது. கனிமொழி மனு மீது தீர்ப்பும் வழங்கப்படுகிறது.

No comments: