Saturday, May 14, 2011

வெளிநாடு வாழ் இந்தியர்கள் - சில நிலவரங்கள்.

ஆர். கண்ணன்


ஒரு நாட்டிலிருந்து பிற நாடுகளுக்குச் சென்று வாழ்ந்த மனிதர்களின் வம்சாவளியினரை ஆங்கிலத்தில் "டயஸ்போரா' என்றும், இவர்களைப் பற்றிய பாடப்பிரிவை "டயஸ்போரிக் ஸ்டடீஸ்' எனவும் அழைக்கின்றனர்.

வெளிநாடு வாழ் இந்தியர்கள் மற்றும் இந்திய வம்சாவளியினர் என உலகெங்கிலும் 3 கோடி இந்தியர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என அறியப்படுகிறது. 2010-ல் வெளியான யுஎன்டிபி அறிக்கையின்படி, சீனாவுக்கு அடுத்தபடியாக இந்திய வம்சாவளியினர் மற்றும் வெளிநாடு வாழ் இந்தியர்கள் ஆகியோரின் எண்ணிக்கையே மிக அதிகமானதாக உள்ளது.

இந்தியாவின் பொருளாதார மேம்பாட்டில் வெளிநாடு வாழ் இந்தியர்களின் பங்கு மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது. முசாபர் சிஷ்டி எனும் ஆராய்ச்சியாளர் 2007-ல் வெளியிட்டுள்ள கட்டுரை ஒன்றில் தெரிவித்துள்ள கருத்து குறிப்பிடத்தக்கது.

ரிசர்வ் வங்கியின் அறிக்கையின்படி 1990-91-ம் ஆண்டு அயல்நாடுகளில் வசித்த இந்தியர்கள் நமது நாட்டுக்கு அனுப்பிய தொகை 2.1 பில்லியன் டாலர்களாகும். கடந்த 15 ஆண்டுகளில் குறிப்பாக, 10 ஆண்டுகளில் பிரமிக்கத்தக்க வகையில் அந்நியச் செலாவணி உயர்ந்தது.

1996-97-ல் 12.3 பில்லியன் டாலர் என்ற அளவில் இருந்த இவர்கள் அனுப்பிய தொகை, 2003-04-ல் ஏறத்தாழ 22 பில்லியன் டாலராக உயர்ந்தது. இது 2005-ம் ஆண்டு 23.5 பில்லியன் டாலர் எனும் அளவை எட்டியது. அந்தவகையில் சீனா மற்றும் மெக்ஸிகோ போன்ற நாடுகளை இந்தியா முந்திவிட்டதாகவும் உலக வங்கியின் மதிப்பீடு தெரிவிப்பதாக முசாபர்சிஷ்டி குறிப்பிடுகிறார்.

மாறிவரும் இந்தியா பற்றி "ஃபோர்ப்ஸ் இந்தியா' இதழில் தேவேஷ்கபர் எனும் கட்டுரையாளர் 2009-ல் வெளிநாடு வாழ் இந்தியர்களிடமிருந்து நமது நாட்டுக்கு வரவு 50 பில்லியன் டாலர்கள் எனத் தெரிவிக்கிறார்.

1830-களில் ஆங்கிலேயரின் ஆதிக்கத்தின் கீழ் இருந்த இந்தியாவிலிருந்து இடம்பெயர்ந்த இந்தியர்களில் பெரும்பாலோர் உழைக்கும் வர்க்கத்தைச் சார்ந்த நலிந்த பிரிவினராவர். 1834-க்கும் 1937-க்கும் இடையே, அதாவது 103 ஆண்டுகளில் 3 கோடி இந்தியர்கள் கடல்கடந்து சென்றதாகவும் அவர்களில் ஐந்தில் நான்கு பேர் மீண்டும் தாய்நாட்டுக்கே திரும்பிவிட்டதாகவும் தேவேஷ்கபர் கூறுகிறார்.

இந்திய விடுதலைக்குப் பிறகு இடம்பெயர்ந்த இந்தியர்கள் பெரும்பாலும் சமூகப் பொருளாதாரப் பிடிமானங்கள் உள்ள குடும்பங்களைச் சார்ந்தவர்கள் என்பதும் இவரின் கருத்தாகும். எண்ணிக்கையைப் பொறுத்தவரை பிறநாடுகளுக்குச் சென்றவர்களோடு ஒப்பிடுகையில் அமெரிக்காவுக்குப் பயணப்பட்டோர் அதிகக் கல்வித்தகுதி கொண்டவர்களாக இருந்தனர். 1990-ம் ஆண்டுக்குப் பிறகு அதிக எண்ணிக்கையில் திறன்சார் மக்கள் இந்தியாவிலிருந்து, ஆஸ்திரேலியா, கனடா, நியூசிலாந்து மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கு வேலை தேடிச் சென்றனர் என்கிறார் தேவேஷ்கபர்.

புலம் பெயர்ந்த இந்தியர்கள் தாங்கள் குடியமர்ந்த நாடுகளின் வளர்ச்சிக்காக மிகக் கடினமாக உழைத்தனர் என்பது வரலாறு. தேயிலை, கோகோ மற்றும் கரும்புத் தோட்டங்களில் வேலை செய்த இவர்களின் ஐந்தாவது அல்லது ஆறாவது தலைமுறையினர் இன்றைக்கும் உலகின் பல நாடுகளில் வாழ்ந்து வருகின்றனர்.

அரசியல், நிர்வாகம், கலை, இலக்கியம், அறிவியல், தொழில்நுட்பம் இன்னோரன்ன துறைகளில் இந்தியர்களின் பங்களிப்பு மிகச் சிறப்பாக விளங்கியது. இன்றும் விளங்குகிறது என்பதை காலம் உலகுக்கு உணர்த்திக் கொண்டிருக்கிறது.

உழைப்பு, திறமை, அறிவு இவற்றால் உலகின் பல பகுதிகளை மேம்படச் செய்த இவர்களும், இவர்களின் வாரிசுகளும் ஏதாவது ஒருவகையில் இன்னலுக்கு ஆட்படுகிறார்கள் என்பது குறித்து செய்தித்தாள்கள் மூலமாகவும், தொலைக்காட்சியின் வாயிலாகவும் நமக்கு அவ்வப்போது தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன. பல ஆண்டுகளுக்கு முன்னர் வெளிநாடுகளில் குடியமர்ந்த காலத்திலும் இவர்கள் அடைந்த துயரங்களை பல ஆராய்ச்சிக் கட்டுரைகளிலிருந்து அறிந்து கொள்கிறோம்.

டிரினிடாடில் வாழ்ந்த இந்தியர்களின் வாழ்க்கையை இதற்கு உதாரணமாகக் கூறலாம்.

1845-லிருந்து 1917-வரை இந்தியாவிலிருந்து டிரினிடாட் தீவுக்கு அழைத்து வரப்பட்ட தொழிலாளர்களில் பெரும்பாலோர் கிழக்கு உத்தரப் பிரதேசத்தையும், பிகாரையும் சேர்ந்தவர்கள். ஜாதி, சமுதாய, கலாசார அடிப்படையில் பல்வேறு பிரிவுகளைச் சார்ந்த இவர்கள் டிரினிடாடுக்கு அழைத்துவரப்பட்ட பின் பல்வேறு இடங்களிலுள்ள தோட்டங்களுக்கு அனுப்பப்பட்டனர். உறவுகள், பந்தங்கள் போன்ற எந்தச் சமூகஉறவின் அடிப்படையிலும் இவர்கள் இணைந்து செயல்பட அனுமதி வழங்கப்படவில்லை. இந்தியாவிலிருந்து அழைத்துவரப்பட்டவர்கள் எனும் பொதுவான அடையாளத்தைத் தவிர, அடுத்த வீட்டில் வாழ்பவருடைய மொழியும் கலாசாரமும்கூட தெரியாமல் இந்தத் தொழிலாளர்கள் வாழ்ந்ததாகப் பிரமோத்குமார் மிஸ்ரா எனும் மானுடவியல் பேராசிரியர் "ஈஸ்டர்ன் ஆந்த்ரோபாலஜிஸ்ட்' எனும் ஆய்விதழில் 1995-ம் ஆண்டு வெளியிட்ட கட்டுரையில் டிரினிடாடுக்கு புலம்பெயர்ந்த இந்தியர்களின் நிலை குறித்து தனது கருத்தைப் பதிவு செய்திருக்கிறார்.

கனடா நாட்டுக்கு 19-ம் நூற்றாண்டின் கடைசியில் சென்ற இந்தியர்களின் நிலையும் ஏறத்தாழ இவ்வாறே இருந்தது. 20-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் சில நூறு இந்தியர்களின் எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்து 21-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் எட்டு லட்சத்தைத் தாண்டி, கனடாவின் மொத்த மக்கள்தொகையில் 2.8 விழுக்காடு எனும் அளவை எட்டியது. வளமான வாழ்க்கைத் தரத்தோடு உயர்கல்வி கற்றோர் எனும் நிலையை அடைந்த சிறுபான்மைச் சமூகமான இந்திய வம்சாவளியினர் குடியமர்ந்த ஆரம்ப காலங்கள் சோதனைகள் நிரம்பியதாகவே இருந்தன. கடின உழைப்பு மற்றும் நம்பகத்தன்மை கொண்டவர்களாக இந்தியப் பணியாளர்கள் இருந்தமையாலும் குறைந்த ஊதியத்துக்கு இவர்கள் தயாராக இருந்ததாலும், முதலாளிகள் இவர்களை வேலைக்கு அமர்த்தினர். ஆனால், இந்தியர்கள் பொருளாதார ரீதியாக சுரண்டப்பட்டதோடு, சமூக மற்றும் அரசியல் உரிமைகள் மறுக்கப்பட்ட நிலையிலேயே வாழ்ந்தனர் என அஜயகுமார்சாகு எனும் ஆராய்ச்சியாளர் கூறுகிறார்.

1907-ம் ஆண்டு அந்த நாட்டில் இயற்றப்பட்ட சட்டத்தின்படி இந்தியர்களுக்கு வாக்குரிமை மறுக்கப்பட்டதாக இந்த ஆராய்ச்சியாளர் தெரிவிக்கிறார். படிப்படியாக கனடாவில் குடியேறிய இந்தியர்கள் தங்களுக்கு மறுக்கப்பட்ட உரிமைகளை மீட்டெடுத்தாக அஜயகுமார்சாகு குறிப்பிடுகிறார். முதலில் வான்கூவரிலும், பின்னர் விக்டோரியாவிலும் குருத்துவாராக்களை கட்டிக்கொள்ள அனுமதிக்கப் பட்டனர் என்கிறார் இந்த ஆய்வாளர்.

உலகெங்கிலும் குடியமர்ந்த இந்தியர்கள் இன்றளவும் இன்னல்களை ஏதோ ஒருவகையில் சந்தித்துக் கொண்டிருப்பதற்கு எண்ணற்ற உதாரணங்களைக் கூறலாம்.

அமெரிக்காவிலுள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் இந்திய மாணவர்களுக்கு கால்களில் கண்காணிப்புக் கருவிகளைப் பொருத்தியது, ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவர்கள் மீது தாக்குதல் எனப் பிரச்னைகள் இன்றளவும் ஓய்ந்த பாடில்லை.

கடல் கடந்த இந்தியர்களின் திறமையும் அனுபவ அறிவும் வெளிநாடுகளுக்கே பயன்படுகின்றன என்பதில் ஆதங்கமும் வருத்தமும் இருந்தாலும் தங்கள் மூதாதையரின் வேர்களைத் தேடி அவர்கள் நம் நாட்டுக்குவர முயற்சிக்கும்போது பிரிவும் ஏக்கமும் பரஸ்பரம் மனதை வாட்டினாலும் அவர்களால் நாம் பெறும் அந்நியச் செலாவணி நமது பொருளாதாரத்தை உயர்த்தும் உந்து சக்தியாக விளங்குகிறது என்பதில் ஆறுதலும் ஏற்படுகிறது என்பதை மறுப்பதற்கில்லை.

பல நாடுகளில் இந்திய வம்சாவளியினர் பாராளுமன்ற உறுப்பினர்களாக செனட்டர்களாக, அமைச்சர்களாகப் பணிபுரியும் வாய்ப்பைப் பெற்றிருக்கிறார்கள். பன்னாட்டு நிறுவனங்களின் தலைமைப் பதவிகளில் திறம்படப் பணிபுரிந்து வருகிறார்கள்.

பல்கலைக்கழகங்களில் பேராசிரியர்களாக, ஐ.நா.சபையின் பல்வேறு பிரிவுகளில் நிர்வாகிகளாக, எழுத்தாளர்களாக தடம் பதித்துக் கொண்டிருக்கின்றனர்.

சமீபத்தில் சிங்கப்பூரின் ராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்ட ரவீந்தர்சிங்கும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவரே. பல்லாயிரக்கணக்கான நமது இளைஞர்கள் வெளிநாடுகளில் பல்வேறு துறைகளில் பணியமர்ந்திருக்கிறார்கள் என்றால் நமது நாட்டினரின் திறமைக்கும், உழைப்புக்கும், நாணயத்துக்குமான ஒரு சர்வதேச அங்கீகாரம் என்பதையே இது உணர்த்துகிறது.

(கட்டுரையாளர்: மதுரை காமராசர் பல்கலைக்கழக சமூகவியல் பேராசிரியர் மற்றும் துறைத் தலைவர்)

No comments: