Saturday, May 14, 2011

ஊழல் பணத்தை கொண்டு இனி எவரும் வெல்ல முடியாது - வைகோ.


தமிழக மக்கள் பணநாயகத்திற்கு விடைகொடுத்து ஜனநாயகத்தை வெற்றி அடையச் செய்துள்ளனர் என்று தேர்தல் முடிவுகள் குறித்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த ஐந்து ஆண்டுகளில், தலைவிரித்து ஆடிய ஆளுங்கட்சியின் ஊழல், அராஜகம், திரைப்படத் துறை, தொழில் துறை உள்ளிட்ட அனைத்துத் துறைகளையும் கபளீகரம் செய்ய முயன்ற ஒரு குடும்ப ஆதிக்கம்,

பன்னாட்டுப் பகாசுரக் கம்பெனிகளுக்குத் தடையற்ற மின்சாரம் தந்துவிட்டு, நிர்வாகச் சீர்கேட்டால் தமிழகத்தை இருளில் தள்ளிய கடுமையான மின்வெட்டு, தாங்க முடியாத விலைவாசி ஏற்றம், தமிழக வாழ்வாதாரங்களைக் காக்கும் கடமையில் தவறிய குற்றம், அனைத்துக்கும் மேலாக ஈழத் தமிழ் இனப் படுகொலைக்கு, காங்கிரஸ் அரசுக்குத் துணைநின்ற துரோகம், சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து, உயிருக்கும் உடைமைக்கும் பாதுகாப்பை இழந்த அபாயம்,

இவை அனைத்தையும் எதிர்த்து ஆழிப்பேரலையாய் மக்கள் சக்தி எழுந்து, ஆளுங்கட்சியின் ஊழல் பணநாயகத்தையும், அதிகார வன்முறையையும் வாரிச் சுருட்டி எறிந்துவிட்டது.

நடைபெற்று முடிந்த தேர்தல் களத்தில் மதிமுக பங்கு ஏற்காவிடினும், கடந்த ஐந்து ஆண்டுகளாக, தி.மு.க. அரசின் மக்கள் விரோதப் போக்கை எதிர்த்து, மக்கள் மன்றத்தில் இடையறாத பிரச்சாரத்திலும் அறப்போரிலும் அர்ப்பணிப்போடு ஈடுபட்டது.

எதிர்காலத்தில், இனி அதிகார துஷ்பிரயோகத்தையும், ஊழல் பணத்தையும் கொண்டு எவரும் தேர்தலில் வெல்ல முடியாது எனும் எச்சரிக்கை தரும் சரியான பாடத்தை, வாக்காளர்கள் கற்பித்து உள்ளனர். தேர்தல் ஆணையம் தன் கடமையில் வென்று உள்ளது என்று கூறியுள்ளார்.

No comments: